நகுலனின் திரண்ட உலகத்தின் சிற்றண்டத்தைக் காண்பிக்கும் சிறுகதையாக 'ஜிம்மி' உள்ளது. 'அவள்' வருகிறாள். அவள் சுசீலாவாக இருக்கலாம். இந்தக் கதையைப் பொருத்தவரை சுசீலா இன்னமும் தன் முடிவை அவனுக்குச் சொல்லவில்லை. தனியாக இருக்கத் தெரியாத யாரும் எழுத்தாளனாக முடியாது என்று தனிமையின் மகத்தான மந்திரத்தைச் சொல்லிவிட்டு சுசீலா இன்னும் பிரிந்து போகவில்லை.
நகுலனின் உலகத்தில் தொடரந்து நிகழும் 'மரணம்' இந்தக் கதையில் அதே சுரீர் தன்மையுடன் வருகிறது. செம்பருத்திச் செடியின் கீழே சாவின் வழியாகவே நமக்கு ஜிம்மி அறிமுகமாகிறது. சாவை கதைசொல்லியின் தந்தை நெம்பிக் காண்பிக்கிறார். நகுலன் படைப்பில் தான் சாவு அத்தனை துடிப்புடன் உள்ளது.
ஜிம்மி கதையிலும் கதைசொல்லி எழுத்தாளனாகவே இருக்கிறான். மௌனி, லா ச ராவின் கதையெழுத்தைப் பற்றிச் சிந்திக்கிறார். விட்ஜென்ஸ்டினின் இலக்கியக் கோட்பாடு சர்ச்சிக்கப்படுகிறது.
கதையின் கடைசியில் அம்மாவும் அப்பாவும் உள்ளே போகிறார்கள். கதைசொல்லி வெளியே போகிறான். கதை சொல்லி மட்டுமல்ல ஜிம்மியும் வெளியே தான் போகிறார்கள்.
நகுலனின் உலகத்தில் உள்ளே போவதும் வெளியே போவதும் வேறு மாதிரி அர்த்தம் கொள்வது போலவே இந்தக் கதையிலும் புகைமூட்டமான அர்த்தம் கொள்கிறது.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.
Comments