Skip to main content

இருந்தும் மறைந்தும் இருக்கும் வரிக்குதிரை நகுலன்



தமிழ் புதுக்கவிதையுலகில் தமிழ் இலக்கிய மரபை அறிந்து கவிஞரானவர்கள் என்று க.நா.சுப்பிரமணியன், பிரமிள், நகுலன், சி.மணி, ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், ந.ஜயபாஸ்கரன் ஆகியோர். 

நகுலன் என்ற டி.கே.துரைஸ்வாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலையும்,  வெர்ஜினியா வுல்ஃபின் படைப்புகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமும் பெற்றவர். 

இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை மேற்கத்திய இலக்கிய அறிவும், தமிழ் மரபும் சரியாக முயங்கும் ஒரு சாத்தியமாக நகுலனது படைப்புகள் உள்ளன. 

‘எழுத்து’ பத்திரிகையில் 1950-களில் நகுலன் எழுதிய கவிதைகளைப் பார்க்கும் போது, அவரது கவிதைகள் பழங்கவிதைகளின் ஓசையை விடாமலேயே எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் இன்றும் அந்தக் கவிதைகளில் பழமை படியவில்லை என்பதே ஆச்சரியகரமானது. கம்பராமாயணம், திருவாசகம், காரைக்கால் அம்மையாரின் பாடல்கள், திருமந்திரம் , திருக்குறள், தாயுமானவர் பாடல்கள், கைவல்ய நவநீதம், சித்தர் பாடல்களின் ஓசைப்பண்பை மட்டும் அல்ல, சில தொடர்களையே தனது கவிதைகளுக்குள் நகுலன் சேர்த்து வைத்துவிடுவார். 

மலையாளக் கவி குஞ்சுண்ணியின் குறுங்கவிதை இயல்புகளான அதிர்ச்சி, பயங்கரம், சுரீர், நறுக்குத் தன்மையையும் ஆரம்பகால கவிதைகளில் கொண்டவர் நகுலன்.

உலகம், இயற்கை, வாழ்க்கை மதிப்பீடுகள், நான் என்ற மனித சாராம்சம் என அனைத்தும் சலிக்கப்படுகின்றன நகுலனின் படைப்புகளில். ஒருவகையில் வாழ்க்கையின் நிலையாமையைத் தொடர்ந்து உணர்த்தியபடியே மனிதமையப் பிரக்ஞையை கேலிசெய்யும், நினைவுறுத்தும் கவிஞர் நகுலன்.

நள்ளிரவிலே

நிர்வாணமாக

நிலைகுலைந்து நிறைசரியாமல்

நிற்கும் ஒரு நங்கை நல்லாளைக்

கண்டு

மனம் மருண்டு மதிவிண்டு

நிற்பவருண்டோ

கூத்தனே.

உன் சாம்பல் மேனிப் பூச்சும்

சவச்சிரிப்பும் சுடலை நாற்றமும்

சுழித்துப் பொங்கும் நச்சரவும்

என்ன குறித்தன?

என்ன குறித்தன?

வேடனடிக்க மாயன் இறந்தான்

இராமனும் செத்தான்

நானிலத்தே

காலக் கணத்தே

நல்லவரும் மாய்ந்து சாய

மண்ணிற் மக்கட் பயிர் சூல் முதிரும்.

000

“சவச்சிரிப்பும் சுடலை நாற்றமும்

சுழித்துப் பொங்கும் நச்சரவும்

என்ன குறித்தன? என்ன குறித்தன?”

000


“கிருஸ்துவப் பாதிரிமார்கள் சாவுச் சடங்குகளில் சம்பந்தப்படும் போது கருப்பு அங்கி அணிந்து கொள்கிறார்கள்

ஹிந்துக் கல்யாணச் சடங்குகளில்

அவனும் அவளும் அக்னிசாட்சியாக தங்களை வரிக்கிறார்கள்

மந்திரம் ஓதும்போது சுவாஹா! சுவாஹா!

என்கிறார்கள்..”

000


இப்படியான வெளிப்பாட்டின் வழியாக நகுலன், வசீகரத்துக்குள் உள்ள பயங்கரத்தன்மையை மொழி மற்றும் சப்தத்தின் வழியாகச் காட்டிவிடுகிறார்.

நகுலனது மொத்தக் கவிதைகளையும் ‘வேடிக்கை பார்ப்பது’ என்ற ஒரு தொடருக்குள் அடக்கிவிடலாம். நகுலனில் நிகழ்வது தீவிரமான வேடிக்கை. குளம் போன்ற சாவதானமான சூரல் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவர் வேடிக்கை பார்க்கிறார். பகலை, பகல் நண்பகல் ஆவதை, தெருவில் அரிதாகப் போகும் வாகனங்களை, ஒளியில் பளபளக்கும் இலைகளை, நண்பகல் மாலை ஆவதை, மாலை இரவு ஆவதை, காற்று இலைகளுடன் சஞ்சரித்து எழுப்பும் சப்தசுருதிகளை அவர் தம் கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். அந்தத் தீவிரமான வேடிக்கைக்கு மனிதன் தயாராக, லௌகீகம் எதிர்பார்க்கும் பல செயல்களிலிருந்து விடுபட வேண்டும். அதனால் தான் வீடணன் தனிமொழியில் ராவணன், எறும்புகள் கூட்டம் கூட்டமாகப் போவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கும் வீடணனை ராவணன்  கேட்கிறான்...ஒரு எறும்பைக் கூட இத்தனை சிரத்தையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாயோ?

இதை சுக்கிலத் தியானம் என்கிறார் நகுலன். தீவிரமாக நானற்ற ஒன்றை, நானற்ற போதத்தில் பார்ப்பதன் மூலம், நான் என்ற பொருண்மையைக் கழற்றுவதற்குச் சொல்லித் தருகிறார் நகுலன்.

அங்குதான் நினைவு ஊர்ந்து ஊர்ந்து செல்கிறது-பார்க்கப் பயமாக இருக்கிறது- பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. என்று எழுதுகிறார் நகுலன்.

மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து,  லேசாக அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை.

வந்தது zack 

எப்பொழுதும் போல்

துயிலிலிருந்து எழுந்தது போன்ற

ஒரு சோர்வு

அவன் முகத்தில்

எப்பொழுதும் அப்படித்தான்

தோல்பையைத் திறந்து

குப்பியை எடுத்ததும்

நான் உள் சென்று

ஐஸ் கொண்டு 

வந்ததும்

சரியாகவே இருந்தது

அவன்

ஓவியங்களை நான் 

பார்த்திருக்கிறேன்

அவைகளும்

ஒரு குழம்பும் மயக்க நிலையைத்

தான் தெரிவித்தன

வண்ணக் கீறல்கள்

இருட் பிழம்புகள்

தாராளமாகவே 

இருவரும் குடித்துவிட்டு

அடிமட்டத்தை

அணுகிக்கொண்டிருந்தோம்

அப்பொழுது

அவன் சொன்னதும் அதை

நான் கேட்டதும்

இன்னும் என் பிரக்ஞையில்

சுழன்றுகொண்டிருக்கிறது

“எல்லாமே 

வெகு எளிமையாகத்தான் 

இருக்கிறது

ஆனால்

“எல்லாம்” என்பதுதான்

என்ன என்று தெரியவில்லை

இதைச் சொல்லிவிட்டு

அவன் சென்றுவிட்டான்.

0000


ஒரு கட்டு 

வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு

புகையிலை

வாய் கழுவ நீர்

ஃப்ளாஸ்க்

நிறைய ஐஸ்

ஒரு புட்டிப் 

பிராந்தி

வத்திப்பெட்டி/ ஸிகரெட்

சாம்பல் தட்டு

பேசுவதற்கு நீ

நண்பா

இந்தச் சாவிலும் 

ஒரு சுகம் உண்டு. 


(சுருதி கவிதைத் தொகுப்பு)


தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்கான இடமாக மதுவையும், அதுதரும் தற்காலிக விடுபடுதலையும் தன் கவிதைகளில் அடிநிலைக்குச் சென்று வெளிப்படுத்தியவர் நகுலன். பாதலேரின் ‘நன்றாகக் குடி’ கவிதையையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். உலக அழுத்தங்கள் என்னும் கனத்தச் சட்டையைக் கழற்றுவது போன்ற உணர்வுநிலையை பிராந்தியும், இலக்கிய நட்புகளும் தருவதை அவர் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்.

மதம், நியதிகள், சம்பிரதாயம், பழக்கம், நிறுவனங்கள், அறிவு ஆகியவை கருத்துருவம் செய்த மனிதனின் ஏற்கனவேயான மரணத்தை விபரீத அழகுள்ள படிமங்களால் உரக்க அறிவித்தவர் அவர். தன் இருப்பையே யோகத்தின் சவநிலையாக கோட் ஸ்டாண்ட் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுதியின் வாயிலாக, ஓசைகளைக் கிட்டத்தட்ட துறந்து சட்டை உரிக்கிறார் நகுலன்.

ரயிலை விட்டிறங்கியதும்/ ஸ்டேசனில் யாருமில்லை- அப்பொழுதுதான்- அவன் கவனித்தான்- ரயிலிலும் யாருமில்லை என்பதை- “அது ஸ்டேஷன் இல்லை” என்று நம்புவதிலிருந்து- அவனால் அவனை விடுவித்துக் கொள்ள- முடியவில்லை.

நினைவு ஒன்றை சொல்கிறது... முன்நிற்கும் எதார்த்தம் ஒன்றை உணர்த்துகிறது, இப்படி ஸ்டேசனை தோன்றியும் தோன்றாமல் மறைந்து வெளிப்படும் ஒன்றாக மாற்றுகிறார் நகுலன்.

Comments