Skip to main content

ஜிம்மி - நகுலன்

(கவிஞரும் நண்பருமான ந. ஜயபாஸ்கரன் தபாலில் அனுப்பிவைத்த நகுலனின் சிறுகதை  இது. காவ்யா வெளியிட்ட நகுலனின் கதைத் தொகுப்பில் இடம்பெறாத கதை. நகுலனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. ‘ஜிம்மி’ என்ற பெயரில் 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் தாமரை இதழில் வந்துள்ளது. நகுலனின் நூற்றாண்டையொட்டி இந்தக் கதை எனக்குக் கிடைத்துள்ளது. நகுலனின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள் ஆகியவை இந்த நூற்றாண்டுத் தருணத்தை ஒட்டியாவது சிறப்பாகப் பதிப்பிக்கப்பட வேண்டும்.  நண்பர் ஜயபாஸ்கரன் பல ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய ‘முகமது இப்ராகிம்’(https://www.shankarwritings.com/2013/08/blog-post_30.html) கதையை அனுப்பி அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். நகுலன் இந்தக் கதை தொடர்பில் கட்டுரை ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதையும் பின்னர் பகிர்கிறேன். இந்தக் கதை தொடர்பிலான எனது குறிப்பை அடுத்தாற்போலப் பகிர்கிறேன்.)  


அவன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்துவிட்டான்- 10.30க்கே. அன்று கல்லூரி மாணவர்கள் கோட்டயம், ஆழப்புழை, பிறகு கொல்லம் முதலிய இடங்களில் நடந்த நான்கு ஐந்து விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றி பெற்றதால் எதிர்பாராத விதமாக விடுமுறை. அதுவும் திங்கட்கிழமை விடுதலையென்றால் சந்தோஷத்திற்குக் கேட்பானேன். மழைக்காலம் நெருங்கும் சமயமாக இருந்தாலும் நல்ல வெயில். வீட்டில் வந்ததும் பனியனை அவிழ்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவன் தகப்பனார் அவர் அறையில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்வதற்குப் போய்விட்டார்.

அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்தாள். அவன் தனது அறையில் களைப்பாறிக் கொண்டிருந்தான். கேட் திறக்கும் சப்தம்.

தூரத்திலிருந்து அவன் எழுந்து பார்த்ததும் செல்லாயி வருவது தெரிந்தது. 

வழக்கமாகக் காய்கறி போடுகிறவள். 

வங்கக் கலைஞர் தீட்டும் ஒல்லிய ஒயில் படைத்த உருவம்; பிரசன்னமான முகம். 

“யாரும் இல்லையா?”

“ஏன்?”

அவன் அவளைப் பார்த்தான். 

“யாரும் இல்லையா, சாமி?”

அவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாமிக்கு இன்னிக்குக் காலேஜிக்குப் போகவேண்டாமா?”

“ஏன் போகணுமா?”

தனது நினைவுகளை உசுப்பிக் கொண்டு, அவளைப் பார்த்து , “இரு, அம்மாவை வரச் சொல்கிறேன்" என்றான். 

அம்மா வந்தாள்.

"அணாவுக்கு மூன்று வெண்டைக்காயா? நல்ல கூத்து".

 “கொடுக்கிற விலை சொல்லு"

“சரி, எடுத்துக்கோ அம்மா.”

அம்மா காசு எடுக்கப் போனாள்.

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

அம்மா வந்ததும் அவள் சென்று மறையும் உருவைக் கண்டு கொண்டு நின்றான். மீண்டும் அவன் அறைக்கு வந்தான். 

‘அவள்’ ஞாபகம் வந்தது; ஆனால் அவள் அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்டும் பச்சாதாபப்பட்டாளே தவிர, பரிவு காட்டவில்லை; அவனும் வருகின்ற வரனையெல்லாம் ஏதோ ஆசையால் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான். 

அப்பா அவர் அறையிலிருந்து வந்தார். அவன் மேஜை மீதிருந்த பேப்பரைப் பார்த்துவிட்டுத் தெரிந்திருந்தும், “இன்னிப் பேப்பர் தானே"! என்றார். அவன் பதில் சொல்லவில்லை. அவர் போய்விட்டார். ரிடையறான பிறகு அவருக்குப் பொழுது போவதில்லை. 

வாசலில் சைக்கிள் மணி விடாமல் அடித்தது; பிறகு "சாமி சாமி" என்று வழக்கமான தங்கத்தின் குரல்.

அவன் ஓடினான்; அவன் எதிர்பார்த்தவை. தன் கவிதை தாங்கிய "நக்ஷத்திரம்"; கதை பிரசுரமான ‘உருவம்’;

நான்கு ஐந்து நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தன் நாவலின் 5 பிரதிகள். ஆனால் கிடைத்தது "நக்ஷத்திர"த்திற்கு அனுப்பிய சந்தாவின் மணி ஆர்டர் ரசீது.

அம்மா கேட்டாள். "உனக்குப் பத்திரிகையிலிருந்து ஏதாவது திரும்பி வந்ததா?”

அவன் "ஒன்றுமில்லை" என்றான்.

“சரி, மணி 12 ஆகிவிட்டது, காப்பி சாப்பிட வா" என்றாள்; போனான். பிறகு, வெற்றிலை போட்டுக் கொண்டு தன் நோட்புக்கைத் திறந்து குறிப்பு எழுதிக் கொண்டிருந்தான். “இந்த ஆசிரியர் இலக்கியக் கோட்பாடுகளை விட்டிஜென்ஸ்டீனின் கொள்கையை வைத்துக்கொண்டு, எப்படி எல்லா விளையாட்டுக்களும் ஒரு அடிப்படை தாங்கியது என்று சொல்ல முடியாமல் இருப்பது என்பதுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை வைத்துத்தான் ஒரு விளையாட்டை விளையாட்டு என்று எடுத்துக் காட்ட முடியும் என்பதும். பல விளையாட்டுகளில் சில ஒற்றுமைகள் தான் இருக்கின்றன என்றுதான் சொல்லமுடியும் என்பது போல் குறிப்பிட்ட தனிப்பட்ட இலக்கியங்களை வைத்துக் கொண்டு, இதுதான் இலக்கியம் என்று வரையறுத்துக்காட்ட இலக்கிய விமர்சனத்தால் முடியாது என்று எழுதியிருக்கிறான். இது எனக்குச் சரி என்றுதான் படுகிறது; ஏன் என்றால் மௌனி எழுதுவதும் கதைதான்; லா ச ராவும் சிறுகதைதான் எழுதுகிறார்; கு. ப. ராவும்தான். ஆனால் இவை ஒன்றிற்கொன்று எவ்வளவு மாறுபட்டவை. ஆனால் இந்த ஆசிரியன் சொல்வதுபோல் இவைகளின் தன்மைகளை விளக்குவதில்தான் எனக்கு இலக்கிய விமர்சனத்தின் இன்பம் கிடைக்கிறது" நோட்புக்கை மூடிவிட்டான். இதைப் படித்துவிட்டுச் சிலர் "இவன் கல்லூரி ஆசிரியர் என்பது சரிதான் என்று சொல்வார்கள் என்பதை நினைக்க அவனுக்கே சிரிப்பு வந்தது.” சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்; எழுதுபவன் எழுதிக் கொண்டே இருப்பான்" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

விஷயம் பிடிபட வார்த்தை கிடைக்காத அவஸ்தை; வானம் இருண்டது. 

மணி 3.

படபட என்று மழைத்துளிகள். 

பிறகு ஒரு கால்மணி நேரம் சுமாரான ஆனால் ஆளை அடியிலிருந்து முடிவரை நனைக்கக்கூடிய மழை. 

அறையிலிருந்து சென்று வாசலில் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

பள்ளிக்கூடம் முடிந்து நான்கு ஐந்து பெண் குழந்தைகள் நனைந்துகொண்டே போனார்கள்.

ஒரு குழந்தை மிகவும் அழகாக இருந்தது. பாவாடையைத் தூக்கிப்பிடித்த வண்ணம் (அதன் உள்பாவாடை தெரிந்தது) உடல் மழைத் தண்ணீரில் மினுமினுக்க வந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவளும் அவள் தோழிகளும் வாய்விட்டு விழுந்து விழுந்து உரக்கச் சிரித்துக் கொண்டே ஓடினார்கள்.

பின்னால் வந்த பையன்கள் கூவினார்கள். 

மழை நிற்க ஆரம்பித்தது. 

அவன் திரும்பியும் தன் அறைக்குள் வந்தான்.

தகப்பனார் வந்து அவனிடம் "நீ இன்று வெளியில் போகப்போகிறாயா?” என்று கேட்டார்.

"ஆமாம்" என்றான்.

அடுக்களையிலிருந்து அம்மா, “போவதற்குமுன் காபி குடித்துவிட்டுப் போ" என்றாள். 

அவன் தகப்பனார் வழக்கம்போல் (பேப்பர் படித்தாகிவிட்டது) பூப்பறிக்க முல்லை படரவிட்ட கொடியின் அருகில் இருக்கும் செம்பருத்திச் செடியிடம் சென்றார். சிறிதுநேரம் கழித்து அவனை ஓசைப்படாமல் வரச் சைகை செய்தார். இப்பொழுது நன்றாக வெயில் அடித்தது. அவன் சென்றதும் அவர் செம்பருத்திச் செடியின் கீழ் யார் கண்ணுக்கும் எளிதில் தென்படாத ஒரு மூலையில் சுருண்டு கிடந்த ஜிம்மியைக் காட்டினார். அவன் அவரைப் பார்த்தான். 

“செத்துவிட்டது"

அவன் மீண்டும் அவரைச் சந்தேகத்துடன் பார்த்ததும் அவர் அங்கிருந்த செம்பருத்திச் செடியின் ஒரு உலர்ந்த கம்பை எடுத்து அதை "நெம்பி"க் காட்டினார். அது விறைத்துக் கிடந்தது. 

அப்பொழுது அவன் போய்விட்டானோ என்று பார்க்கவந்த தாயாரிடம் அவன் ‘ஜிம்மி’ செத்துவிட்டது என்றான். 

அவன் வெளியே போகத் தயாரானான். 

அவர்கள் இருவரும் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.

அவன் தாயார் சீக்கிரம் திரும்பி வந்துவிடு என்றாள். 

அவன் ‘சரி’ என்று சொல்லிவிட்டுப் போனான்.  

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக