Skip to main content

அழகியை ஏன் உறங்க வைத்தார் மார்க்வெஸ்?


ஆமாம். இந்த உலகிலேயே அழகானவற்றில் ஒன்று பெண்ணின் கண்கள் என்று நானும் கருதுகிறேன். காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் ‘ஸ்லீப்பிங் ப்யூட்டி அண்ட் தி ஏரோப்ளேன்’ சிறுகதையில் பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியின் கண்களை கதைசொல்லி பார்த்து ரசிப்பது போன்ற அனுபவத்தை நானும் விரும்பிப் பெற்றிருக்கிறேன். நான் உபாசித்த சில பெண்கள் உறங்கும்போது, அந்தப் பூரித்துப் பருத்த கண்கள் இமைகளால் மூடியிருப்பதைப் பார்த்து நிறைந்திருக்கிறேன். பசிய வாதுமைகள் போல பக்கவாட்டு இருக்கையில் உறங்கும் அழகியின் கண்கள் இருந்ததாக வர்ணிக்கிறார் மார்க்வெஸ். ஓர் அழகிய பெண்ணைவிட இயற்கையில் அதிக அழகானதென்று நான் வேறெதையும் நம்பவில்லை என்று இந்தக் கதையில் மார்க்வெஸ் விவரிக்கிறார். இந்தக் கதை முழுவதும் கதைசொல்லியைச் சந்திக்கவே செய்யாத அந்த அழகியை கதை முழுவதும் வர்ணித்துத் தீரவில்லை மார்க்வெஸுக்கு. கதைக்கு வெளியே உறங்கும் பெண்ணை அப்படி வெறித்துப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. கதாசிரியனுக்கு அந்த அனுமதி இருக்கிறது. அன்றாட எதார்த்தத்தில் வலுவாக நின்று அற்புதங்களின் நறுமணப் புகையை அவ்வப்போது பரவவிடும் மார்க்வெசின் முத்திரைத் தன்மைகளைக் கொண்ட சிறுகதை இது.

இருபதாம் நூற்றாண்டிலேயே பிரமாண்டமானது என்று அறியப்பட்ட பனிப்புயல் நாளொன்றில் நியூயார்க் செல்வதற்கான விமானத்துக்காக விமான நிலையத்தில் கதைசொல்லி காத்திருக்கும் நிகழ்விலிருந்து கதை தொடங்குகிறது. விமானங்கள் தாமதமாக உணவகங்கள், மதுவிடுதிகள் எல்லாம் உணவு, மது அனைத்தும் தீர்ந்து காலியாக, பயணிகளால் நெருக்கியடிக்கப்பட்டு உடம்புகள் அனைத்தும் சேர்ந்து உஷ்ணம் கூடி புழுங்கி வரும் நெடி காத்திருக்கும் பகுதியில் அடிக்கத் தொடங்கும்போதே கதைசொல்லி போகவேண்டிய விமானம் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இந்தக் காத்திருப்பில் ஓர் அற்புதம் போலக் கடந்து சென்ற அழகிதான், கதைசொல்லியின் பயணத்தில் பக்கத்து இருக்கையை உறங்கியபடி பகிர்பவள். 

விமானம் தனது பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நியூயார்க்கில் இறங்கும்வரை அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் தொடர்புகொள்ளாத ஓர் உலகத்தில் கதைசொல்லி அவளுடன் அவளுக்குத் தெரியாமல் உரையாடிக் கொண்டிருக்கிறார். மார்க்வெஸ் தனது பத்திரிகைக்காரத் துல்லியத்தை இந்தச் சிறுகதையிலும் பயன்படுத்துகிறார். கதைசொல்லி உறங்கும் அழகியுடன் கழித்த காலம் எட்டு மணி நேரம் 12 நிமிடங்கள். அந்த நேரத்தை நிலைபேறுடைய மணித்துளிகள் என்கிறார் மார்க்வெஸ். 

தூங்கும் அழகி, உறக்கத்தில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படும் எந்த அவலட்சணத்தையும் அடையவேயில்லை. அவளுக்குப் பின்னாலேயே உறங்கும் ஒரு முதியவளையும் நமக்குக் காட்டுகிறார். அலங்கோலமாக அவள் பதினோறு சூட்கேசுகளுடன் உறங்குவதை, போர்க்களத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சடலம் போன்று உறங்கியதாகக் குறிப்பிடுகிறார். 

ஆனால், கதைசொல்லிக்கு பக்கவாட்டு இருக்கையில் உறங்கிய அழகியோ, எழும்போது ரோஜா தோட்டத்தில் உறங்கி எழுந்தவளைப் போலிருந்தாள் என்று குறிப்பிடுகிறார் மார்க்வெஸ். 

ஜப்பானிய நாவலாசிரியர் யசூனரி கவாபட்டாவின் ‘உறங்கும் அழகிகளின் இல்லம்’ நாவலுக்கு எழுதப்பட்ட ஒரு ஸ்பானிய பதில் தான் இந்தக் கதை என்ற குறிப்பை இக்கதையிலேயே கதாசிரியர் கொடுத்திருக்கிறார். உறங்கும் நிர்வாண அழகிகளைப் பார்ப்பதன் வழியாகவே  ‘உறங்கும் அழகிகளின் இல்லம்’ நாவலில் முதியவர் அடையும் நிறைவைப் புரிந்துகொண்டது மட்டுமின்றி அதை முழுவதும், பக்கவாட்டில் உறங்கும் அழகியைப் பார்ப்பதன் மூலம், வாழ்ந்து தீர்த்ததாக கதைசொல்லி குறிப்பிடுகிறான்.‘ஸ்லீப்பிங் ப்யூட்டி அண்ட் தி ஏரோப்ளேன்’ சிறுகதையில் கதைசொல்லியைச் சந்திக்கவே சந்திக்காத அழகியை மார்க்வெஸ் தன் கற்பனை வழியாகத்தான் உறங்க வைத்திருக்கிறார். ஆனால், அந்தக் கதையில் வந்த அழகி நான்தான் என்றும் பாரிஸ் விமான நிலையத்தில் தாங்கள் சந்தித்தோம் என்றும் ஆதாரப்பூர்வமாக முன்னாள் நடிகை ஒருவர் மார்க்வெசுக்கு முன்னுரை எழுதிய நிகோலஸ் ஷேக்ஸ்பியருக்கு எழுதிய கடிதம் குறித்து நியூஸ்வீக்கில் வெளியான செய்திதான் இந்தக் கதைக்குக் கூடுதல் பரிமாணத்தையும் எழிலையும் சேர்ப்பது. 

மார்க்வெசின் மரணத்துக்குச் சற்று பிறகு வெளிப்பட்ட செய்தி இது. 1990-ம் ஆண்டு சார்ல டீகோல் விமான நிலையத்தில் நியூயார்க் செல்வதற்காக காத்திருந்தபோது 63 வயதாகியிருந்த காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சந்தித்த 26 வயது பிரேசிலிய நடிகை அவர். சில்வானா டி பரியா அவரது பெயர். 

‘போன்ஜோர்’ என்று பிரெஞ்சில் வாழ்த்து சொல்லி அந்த அழகியிடம் அறிமுகமான மார்க்வெஸின் சிரிப்பும் அவரது பற்களும் தான் தன்னை ஈர்த்ததாக அவர் கூறியுள்ளார். பற்கள் ஆரோக்கியமாகவும் வெள்ளையாகவும் இருந்தனவென்றும் இருக்கையின் நெருக்கம் காரணமாக சுவாசத்தை சுத்தமாக உணரமுடிந்ததென்றும் குறிப்பிடுகிறார். தனது உடைகள் மற்றவர்களைத் தூண்டும்படி இருப்பதாக அம்மா விமர்சித்துக் கொண்டே இருந்ததால் மிக கவனத்தோடு அன்று உடைகளை அணிந்திருந்ததாகவும் அதனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அணிந்திருந்த அத்தனையும் ஞாபகமிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாரிசுக்கு அருகே ஒரு பிரெஞ்சு சினிமா இயக்குனருடன் மகிழ்ச்சியற்ற திருமண உறவில் அப்போது இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.   

மார்க்வெஸ் தன்னிடம் வசீகரத்துடன் கூச்சம் தொனிக்க சரச உரையாடலில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார். தன்னுடைய பெற்றோர்கள், ஊர் எல்லாவற்றைப் பற்றியும் விசாரித்ததாகவும் குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் நெருக்கமாக சில்வானா டி பரியா தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கி இருவரும் சினேகமாகிறார்கள். ஆனால், மார்க்வெஸ் தனது அடையாளம் பற்றி ஒரு தகவலையும் அவரிடம் தெரிவிக்கவேயில்லை. மார்க்வெஸ் சில்வானாவை உணவுண்ண அழைக்கிறார். உணவு அடுத்து எதற்குக் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்ததை மார்க்வெஸிடமே பகிர்கிறார் சில்வானா. பேச்சு சினிமா பற்றி நீள, மார்க்வெஸ் திரைக்கதை எழுதிய ஒரு திரைப்படத்தைக் குறிப்பிட்டு மார்க்வெஸின் மீது கொண்ட மதிப்பையும் கூறுகிறார் சில்வானா. மார்க்வெஸ் ஒரு மேதை என்று கூறியும் அதைக் கேட்டுக்கொண்டிருந்த மார்க்வெஸ் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாக அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். 

பிறகு பேச்சு மேலும் நெருக்கமாக பள்ளித் தோழர்களைப் போல உணர்வு ஏற்பட, சில்வானா தனது உள்ளுணர்வால் கடைசியில் தன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர் மார்க்வெஸ்தான் என்று கண்டுபிடித்து விடுகிறார். 

மார்க்வெஸ் தனக்குத் துரோகம் செய்துவிட்டதான உணர்வு சில்வானாவுக்கு அந்தத் தருணத்தில் ஏற்பட்டிருக்கிறது. மார்க்வெஸ் தனது தொலைபேசி எண், முகவரி எல்லாவற்றையும் எழுதித்தந்து தொடர்பு கொள்ளச் சொல்லியும் சில்வானா அவரை வாழ்நாள் முழுவதும் தொடர்புகொள்ளவே இல்லை. நபர் மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டதால் மார்க்வெஸின் படைப்புகளையும் படிப்பதை அவர் அறவே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். 

மார்க்வெஸ் இறந்த செய்தியைக் கேட்டபிறகு,  ‘ஸ்லீப்பிங் ப்யூட்டி அண்ட் தி ஏரோப்ளேன்’ கதையைப் படித்ததாகக் கூறுகிறார் சில்வானா.

“அவரது குரல் மற்றும் தொனியைக் கேட்பதைப் போல இருந்தது. அவர் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்பட்டது. அவர் அந்தக் கதை வழியாக ஒரு செய்தியைச் சொல்லியது போல சில நிமிடங்கள் நான் உணர்ந்தேன்.”

தான் சந்தித்துப் பழகி நேசம் கொண்ட அழகியை, தனது சிறுகதையில் ஏன் உறங்க வைத்தார் மார்க்வெஸ். 

(செய்தி ஆதாரம் : https://www.newsweek.com/2014/08/01/gabriel-garcia-marquezs-secret-muse-finally-reveals-herself-261175.html)Comments