எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு
ஒருபுறத்தில் இருக்கும் சுவர்
இடுப்பளவு உயரமே கொண்டது
அந்தச் சுவருக்கு அப்பால் கட்டப்பட்ட
புதுக்கட்டிடம்
டாஃபடில்ஸ் என்ற பெயரில்
பெண்கள் விடுதியானது ஒரு நாள்
வசந்த காலத்தை அறிவிக்க
முந்திக்கொண்டு பூக்கும் பூ
குத்திய குளிர் போய்விட்டதை
அறிவிக்கும் பூ
மறுபிறப்பையும் புதிய தொடக்கத்தையும்
உருவகிக்கும் மஞ்சள் பூ டாஃபடில்ஸ்
என்று தெரிந்துகொண்டேன்
டாஃபடில்ஸ், நார்சிசஸ் என்றும் அழைக்கப்படுகிறது
ஆமாம் உண்மைதான்
39 வயதிலிருந்து வழுக்கிச் சரிந்துகொண்டிருந்த நான்
ஒரு காதலின் குறுகிய வசந்த காலத்தை
அப்போது ரகசியமாய் சுவைத்துக் கொண்டிருந்தேன்
இடுப்பளவே உயரத்தில்
பிரித்தும் பிரிக்காமலும் இருக்கும்
அந்தக் கட்டைச் சுவரை
விரல்களால் தீண்டியபடி
டாஃபடில்ஸ் விடுதி சமையலறைக்கு அருகில்
தொங்கும் கண்ணாடி முன்நின்று
வரிசை கட்டியதுபோல் ஒப்பனை செய்துவிட்டு
கல்லூரிக்கும் அலுவலகத்துக்கும் செல்லும்
யுவதிகளின் சாயல்களும் சேர்ந்த
மதுரத்தை
எனக்கேயுரியதாக நினைத்த அவளுக்கு
தொலைபேசியில் பகிர்ந்துகொண்டிருந்தேன்.
ஒருநாள்
விடிந்தும் விடியாத பொழுதில்
டாஃபடில்ஸ் விடுதிக்கு வந்துபோன
திருடனைத் தேடி போலீசார் வந்தனர்
கட்டைச்சுவருக்கு இப்பால் நின்றிருந்த
என்னிடமும்
அதிகாலையில் சந்தடி எதுவும்
கேட்டதாவென்று விசாரித்து நீங்கினர்.
எனக்கு நிச்சயமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை
இன்னும் பிரியாத இருட்டில் நின்று
என் இடுப்புக்குக் கீழேயிருக்கும்
கட்டைச் சுவரைத் தொட்டபடி
விடுதியைக் குறுகுறுப்பாகப் பார்த்தேன்
திருடன் வந்த சம்பவத்தில்
எனக்குத் தொடர்பில்லை என்பதை
வெளியே இருந்துவந்த
போலீசுக்குத் தெரியப்படுத்தியும் விட்டேன்
இப்போதும் அந்த டாஃபடில்ஸ் விடுதியைப் பார்த்துவிட்டு
மர்மமாகவே கடந்துசெல்கிறேன்
டாஃபடில்ஸ் விடுதிக்குள்ளிருக்கும் கண்ணாடிக்கு
டாஃபடில்கள் செய்யும் ஒப்பனை அலுக்கவில்லை
அன்று
டாஃபடில்ஸ் விடுதிக்குள்
வேவு பார்க்க நுழைந்துவிட்டுப்
போனதாகக் கருதப்படும்
திருடன்
நான் இல்லை என்றோ
நான் இல்லாத திருடன் அவன் என்றோ
நான் திருடன் இல்லை என்றோ
என்னால் இன்னமும்
அவனை நிச்சயமாகச் சொல்லவே முடியவில்லை
திருடன் திருடன் என்று டாஃபடில்ஸ் விடுதி
ரகசியமாய்க் கூவுகிறது
திருடன் திருடன் என்று ரகசியமாக
நானும் செல்லமாய் என் வேகத்தைக் கூட்டுகிறேன்.
Comments