Skip to main content

அபியின் மலைக்கு வேர் உண்டு


பொருட்கள், உறவுகள் தமது கனப்பரிமாணம், நிறங்கள், வாசனைகளைப் படிப்படியாக என்னிடத்தில் இழக்க ஆரம்பிக்கும் போதே, பரிச்சயம் கூடக் கிட்டாமல் ஆழத்து மூலையில் கிடந்த அபியின் கவிதைகள், வெகுகாலம் கழித்து, என்னை அணுகி நெருங்கத் தொடங்குகின்றன. எனக்குத் தெரிந்த உலகத்தின் மறுபுறத்தை, அந்த உலகில் நிகழும் வேறு அனுபவங்களை அதையெல்லாம் விட அங்கேத் துள்ளித் துடிக்கும் உயிர்த்தன்மையைப் பரிச்சயம் கொள்வதற்கு எனக்கு இத்தனை நாட்கள் தேவையாக இருந்திருக்கின்றன. 

அபியின் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கும் நகுலனின் கவிதையையே துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது நகுலனின் யாருமற்ற இடத்தில். அபியின் இடமோ யாரும் இருக்க முடியாத இடம்; என்ன நடக்கிறது என்று இருப்பாக இருந்து பார்க்க முடியாத அளவு நுண்ணிய இடம் அபியின் இடமாகத் தோன்றுகிறது. இங்கு நடப்பது எல்லாம் அங்கும் நடக்கிறது. இங்கு நடப்பதின் பிரமாண்டம் அங்கும் இருக்கிறது. ஆனால் பிறப்பு - இறப்பு, குணம் - குற்றம், வெற்றி- தோல்வி ஆகிய பிரிவினைகள் இன்றி அந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அபியின் சாயங்காலத்தில் மயங்குகின்றன. 

அந்தச் சாயுங்காலம் தொடங்கும் போது, இந்த உலகத்திலிருந்து தான் தொடங்குவதைப் போன்ற சாயல்களை தோற்றத்தை அபி எழுப்புகிறார்.

‘மாலை - என் மலை’ கவிதையில் 

வாசலில்

சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்து

வெளிச்சம் குறைந்துகொண்டுவரும்


தொடுதல்களைக்

கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இருப்பு

மங்கியும் தெளிந்தும்

ஒருநிலையற்று இருக்கும்


வெளியேறத் துடிப்பேன்


ஆனால் எப்படி?


கதவு சுவர் கூரை எலாம்

வெளிஏறி மறைந்துபோயிருக்கும்


எனத் தொடங்குகிறது.


வாசலில் வெளிச்சம் படிப்படியாகக் குறையும் சாயங்காலத்தின் சிறுசிறு சந்தடிகளையும் கேட்டும் பார்த்தும் உணரும் ஒன்று தான் சாயங்காலத்தை உரைக்கத் தொடங்குகிறது. தொடுதல்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இருப்பாக மங்கியும் தெளிந்தும் நிலைகொள்ளாமல் வெளியேறத் துடிப்பேன்? ஆனால் எப்படி என்று கேள்வி கேட்கும்போது நபர் ஆகிவிடுகிறது. 

அந்த நபர் நமக்குத் தெரிந்த நபரா?

வெளியேறுவதற்குத் துடிப்பதெனும்போது முதலில் நமது உடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், அபியில் கதவு சுவர் கூரை எல்லாம் வெளியேறி மறைந்துபோகிறது. 

எல்லாம் வெளியேறிய பிறகும் வெளியேறாத ஒன்று அடுத்து தெரியவருகிறது. வெளியேறுவதற்குத் துடித்த ஒன்று அடங்கியதாகத் தெரிகிறது. 

வெளியேறுதல் 

இல்லை என்று ஆனபின்

எனக்காகக் காத்திருந்த என்மலை

சற்று அசைந்து

குவடுகளால்

எனதொரு எல்லையை வருடும்


இங்கே படரும் இருளைச் 

சிறிது சுண்டினால் கூட

என்மலை எனக்குப் பதில்சைகை தரும்.

எனக்கு இன்னொரு எல்லையை என் மலை காண்பிப்பதற்கு, அந்த மலை சின்னதாகச் சுண்டினால் கூட முழுமையாகப் பதில் அளிப்பதற்கு வெளியேறுதல் இல்லையென்பதை நான் அறியவேண்டியிருக்கிறது. இருப்பின் அநிச்சய பாவத்தில் இது எது ஒரு சுகம் என்று சொல்லக்கூடிய சுகம் இருக்கிறது. 

இப்படித்தான் என்று

நிதானமாகப்

பிறந்து கொண்டிருப்பேன்

எனது மலைவேரின்

ஒரு சிறு நுனியிலிருந்து.

மலைக்கு வேர் உண்டா. அபி காண்பிக்கும் உலகில் உள்ள மலைக்கு வேர் உண்டு. எனதின் உனதின் வெளியேறாத பொருளால் பண்பால் ஆன அந்தப் பழைய மலையின் வேர்நுனியில் நான் நிதானமாகப் பிறந்துகொண்டிருப்பேன்.

பிறந்துகொண்டே இருக்கும் நீண்ட ஓர் பிறப்பல்ல அது. நிதானமாக தொடர்ந்து உயிர்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.          

     

   

Comments