Skip to main content

எம் வி வெங்கட்ராமின் இலக்கிய நண்பர்கள்முழுமையாக எழுத்து வாழ்க்கையைத் தேர்வது என்பது அபாயகரமானது என்று இந்திய வாழ்க்கை நிரூபித்திருந்தும் எம். வி. வெங்கட்ராம், இளம் வயதிலேயே இலக்கியப் பித்துக்கு ஆளானவர் என்று இப்புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பில் சுந்தர ராமசாமி கூறுகிறார். தாய்மொழி தமிழாக இல்லாத சௌராஷ்டிர பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் எம். வி. வி. தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபாடு ஏற்பட்டு    பள்ளிப்படிப்பு முடிவதற்கு முன்னரே நிறைய கதைகளை எழுதிப் பயின்று, தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய லட்சியப் பத்திரிகையான ‘மணிக்கொடி’யில் 16 வயதில் முதல் கதை பிரசுரத்தைப் பார்த்தவர். புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ரா, ந. பிச்சமூர்த்தி என நட்சத்திர எழுத்தாளர்கள் அலங்கரித்த  ‘மணிக்கொடி’ பக்கங்களில் மீசை அரும்பாத வயதில் இணையாக அமர்ந்தவர். முதிரா வயதில் அந்த இளைஞன் எழுத்தில் நடத்திய சாதனைக்கு, அற்புதத்துக்கு லௌகீக வாழ்க்கையில் மிகப்பெரிய பலியைக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரியவனான பிறகும் உணவூட்டுவதற்கு, ஒப்பனை செய்வதற்கு உதவியாளர்கள் இருந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த எம். வி. வெங்கட்ராம், குடும்ப வியாபாரத்தில் படிப்படியாக ஈடுபாட்டை இழந்து, பெரும் கனவுடன் தொடங்கிய இலக்கியப் பத்திரிகையில் நஷ்டப்பட்டு, படிப்படியாக மன ஆரோக்கியத்தையும் இழந்து அன்றாட எதார்த்தம் அகமும் புறமும் பயங்கரம் என்று உணரத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தவர். உறக்கத்தில் மட்டுமல்லாமல் விழிப்பிலும் கனவுகளும் அமானுஷக் குரல்களும் துரத்த, குடும்பத்தினரும் குழந்தைகளும் வறுமையின் பாழ்கிணற்றுக்குள் விழுந்துவிடாமல் காப்பாற்ற தான் இலக்கியம் என்று நம்பியதற்கு எதிரான எழுத்துகளையும் நூல்களையும் சலிக்க அலுக்க விரல்கள் வலிக்க எழுதியவர். இத்தனை துயரங்களையும் மீறி தமிழின் அழியாத படைப்புகள் என்று சொல்லக்கூடிய வேள்வித்தீ, நித்யகன்னி, காதுகள் போன்ற படைப்புகளையும் பைத்தியக்காரப் பிள்ளை போன்ற சிறுகதைகளையும் படைத்தவர் எம். வி. வி. அவலம் என்று சொல்லத்தக்க அன்றாட வாழ்வை சில பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தாலும் அவரிடம் தேயாமலிருந்த கனிவையும் மேன்மையையும் நேர்மையையும் காண்பிக்கும் நூலாக ‘என் இலக்கிய நண்பர்கள்’ என்ற இந்தச் சிறிய நூல் விளங்குகிறது. தி. ஜானகிராமன், க. நா. சு, மௌனி மூன்று பேரைப் பற்றி அவர் எழுதியிருக்கும் இந்த நூல், ஒரு காலகட்டத்தலிருந்த இலக்கியச் சூழல், மனிதர்கள் கொண்டிருந்த மேலான விழுமியங்களின் ஆவணமும் கூட.

‘என் இலக்கிய நண்பர்கள்’ நூல், திட்டமிட்டு ஆசுவாசமும் நெடிய உழைப்பும் தெரியுமாறு எழுதப்பட்ட நூல் அல்ல என்பது அதன் சுருக்கத்திலிருந்து தெரிய வருகிறது. ஆனாலும், விரிவான வாழ்க்கை வரலாறுகள் தமிழில் யாருக்கும் இல்லாத நிலையில், தி. ஜானகிராமன் குறித்தும், க. நா. சு, மௌனி குறித்தும் சற்று விரிவான பார்வையை வழங்குகிறது. இந்தப் புத்தகம் ஒரு கனவோடு தொடங்குகிறது. அந்தக் கனவில் ஒரு அரச மரத்துக்கடியில் க. நா. சு, தி. ஜானகிராமன் வருவதற்காக வெற்றிலைச் செல்லத்தோடு காத்திருக்கிறார் எம். வி. வி. அந்தக் கனவில் எம். வி. வி, தனது வெற்றிலைச் செல்லத்தையும் அதில் வைத்திருந்த சில நூறு ரூபாய் நோட்டுகளையும் தொலைக்கிறார். அந்தக் கனவிலேயே எம். வி. வியின் வாழ்க்கையும் குணமும் துலங்கிவிடுகிறது. 

தி. ஜானகிராமனிடம் கொண்ட உறவு ஆத்மார்த்தமும் மதிப்பும் நன்றியும் கொண்டதாகத் தெரிகிறது. தி. ஜானகிராமனுக்கு எம். வி. வி மேல் ஒருவித குருமதிப்பு இருந்திருப்பதை உணரமுடிகிறது. மோக முள் நாவலில் கதாபாத்திரமாகவே இடம்பெறும் அளவுக்கு அவர் மனத்தில் எம். வி. வி இடம்பெற்றிருந்திருக்கிறார். எம். வி. வியின் ‘காதுகள்’ நாவலில் கதாநாயகன் மகாலிங்கம் அனுபவிக்கும் அத்தனை சோதனைகளும் எம். வி. வி அனுபவித்தது. தனக்குள்ளேயும் தான் வாழ்ந்த சமூகத்திலும் பெயரையும் கௌரவத்தையும் தொலைத்த எம். வி. வி, சென்னைக்கு வந்து தி. ஜானகிராமன் வீட்டில் அடைக்கலம் இருந்தபோது, எம். வி. வியின் அகத்தையும் புறத்தையும் குணப்படுத்த தி. ஜா செய்யும் முயற்சிகள் அவரை மேலான ஒரு மனிதனாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இயற்கையிலேயே சங்கோஜ குணம் கொண்ட வெங்கட்ராமை மனவாதைகள் வேறு கூடுதலாக அல்லலுக்குள்ளாக்கிக் கிழித்துப்போட்ட அந்த மனிதனை தி. ஜா மட்டுமின்றி அவரது குடும்பமே சேர்ந்து போஷிக்கிறது.

சிறிய வாசகர் வட்டமென்றாலும் சிறுகதையின் அற்புதம் என்ற அந்தஸ்தையும் நட்சத்திர மதிப்பையும் அடைந்திருந்த எழுத்தாளர் மௌனி தனது 30 வயதில், எம். வி. வியை அவரது வீட்டுக்குப் போய்ச் சந்தித்தபோது 17 வயது வாலிபனாக எம். வி. வி இருக்கிறார். மௌனியோடு எம். வி. வி கொள்ளும் உறவு தி. ஜானகிராமனைப் போன்றதல்ல. விமர்சனமும் மதிப்பும் கொண்ட உறவாகத் தெரிகிறது. மிகப்பெரிய ஆச்சரியமும் மௌனி மொழியின் மீதான வழிபாட்டுணர்வும் சேர்ந்துதான் அந்த உறவு ஆரம்பமாகிறது. போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும் பிம்பங்களை உயிர்ப்பிப்பதும் அவரது வலிமை என்று மௌனியின் சிறுகதைக் கலையை நாடிபிடித்து விடுகிறார். அதேவேளையில் மௌனிக்கு க. நா. சுவும், புதுமைப்பித்தனும் அளித்த மதிப்பு அதீதம் என்ற விமர்சனம் நூல் முழுவதும் இருக்கிறது. சிறுகதையில் அத்தனை ஆளுமையைக் கொண்ட மௌனிக்கு மொழியைக் கையாள்வதில் சிக்கல் இருந்ததற்கான உதாரணங்களையும் தருகிறார். இத்தனை விமர்சனங்களுக்கிடையிலும் மௌனியின் கடைசிகாலம் வரை எம். வி. வி அவரைத் தொடர்ந்த சித்திரம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. கடைசிகாலத்தில் மௌனியிடம் ஊடுருவிவிட்ட வைதிகரையும் இனம்கண்டு சொல்கிறார். 

இந்த நூலின் நெடிய பதிவு க. நா. சு பற்றியதுதான். பிரியம், விமர்சனம், மதிப்பு என்று அந்த உறவைச் சொல்லலாம். நேசம் நீங்காமல் தெருவிலும் வீட்டிலும் சந்தித்தவுடன் சண்டை போடுகிறார்கள். க. நா. சு என்ற படைப்பாளி மீதுதான் எம். வி. விக்கு மரியாதை அதிகம் உள்ளது. விமர்சகராக ஆகி அவர் தனது படைப்பாளியைத் தொலைத்துவிட்டார் என்று விமர்சிக்கிறார். அத்துடன் க. நா. சு சொல்லும் சின்னச் சின்னப் பொய்களையும் தொடர்கதை எழுதுவதாக உறுதிதந்துவிட்டு இழுத்தடித்த கதையையும் வாஞ்சையுடனேயே விவரிக்கிறார். க. நா. சுவையும் கடைசிவரை தொடர்ந்திருக்கிறார் எம். வி. வி. 

கரிச்சான் குஞ்சு, ச. து. சு. யோகியார், திரிலோக சீதாராம் போன்ற ஆளுமைகளின் முகங்களும் குணங்களும் இந்த நூலில் அரிய பதிவாகியுள்ளன. திரிலோக சீதாராம், பெருமழை பெய்யும் நடுச்சாமத்தில் எம். வி. வியின் வீட்டுக்கு வந்து, மௌனியிடம் சிதம்பரத்துக்குப் போய் கதை வாங்கலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அந்தக் காட்சி கனவு போல உள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது மாபெரும் லட்சியக் கனவுகளின் கோலம் போலத் தான் தொனிக்கிறது. ரவி சுப்பிரமணியன் இந்த நூலில் எழுதியிருக்கும் முன்னுரையில் எம். வி. வெங்கட்ராமின் குரலை கார்வையெனக் கேட்கச் செய்கிறார். ஓர் இலக்கிய ஆவணமாகத் திகழும் இந்த நூலில் இன்னும் கவனமாகப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். க. நா. சு நடத்திய ‘முன்றில்’, ‘மூன்றில்’ ஆகியிருக்கிறது. மௌனியின் ‘நினைவுச்சுவடு’, ‘நினைவுச்சுவடி’யாக ஆகியுள்ளது.                        

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக