Skip to main content

‘கோலி மாரோ’ தூரத்தில் கேட்கும் முழக்கம் அல்ல



அறுபது நாட்களுக்கு மேல் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் அமைதியாகப் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய கவனம் கொடுக்காத மத்திய அரசு, குடியரசு நாளில் நடந்த சில அசம்பாவிதங்களைக் காரணம் காட்டி, விவசாயிகள் போராட்டம் தொடரும் எல்லைப் பகுதி சாலைகளில் கான்கிரீட் கலவையிட்டு சுவர்களை எழுப்பி சிறைகளை அமைத்துவருகிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது செய்ததைப் போன்றே போராட்டப் பகுதிகளில் இணையத் தொடர்பையும் துண்டித்துள்ளது. தடுப்புச் சுவர்களும் இரும்புக் கம்பி வேலிகளும் போதாது என்று சாலைகளைக் குழிசெய்து சிமெண்ட் கலவையிட்டு அதில் ஆணிகளையும் ஊன்றியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு தான், தனது மக்களுக்கு எதிராக இந்த ஆணிகளை நட்டுவைத்திருக்கிறது. போராடுவதற்காக மக்கள் திரள்வதையும் கருத்துவெளிப்பாட்டையும் அடிப்படை உரிமையாக  உறுதிசெய்திருக்கும் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதறாக வாக்குறுதி எடுத்திருக்கும் அரசுதான் குறைந்தபட்ச செய்திப்பரவலையே அபாயமாகப் பார்க்கிறது. இந்தக் காரியங்கள் எதுவும் நாட்டின் மூலையில் நடைபெறவில்லை.  சர்வதேசங்களாலும் காணக்கூடிய தலைநகர் பகுதியில், உச்சதொழில்நுட்பங்களைக் கையில் வைத்துள்ள ஊடகங்கள் வேடிக்கை பார்க்க மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டச் செயல்பாட்டைப் பார்க்காமலிருப்பதற்கான சுவர்களை எழுப்பியுள்ளது. 

சென்ற ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, வடகிழக்கு டெல்லியில், அமெரிக்க அதிபர் வருகை தந்திருந்த சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லப்பட்ட கலவரக்காரர்கள் முஸ்லிம் குடியிருப்புகளின் மீது நடத்திய தாக்குதல்களின் அதே முறை, குடியரசு தினத்துக்குப் பின்னர் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திலும் முயற்சிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்ற பெயரில் காவல்துறையினர் வாளாவிருக்க, விவசாயிகள் மீது கற்கள் வீசப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தோம். 

நாட்டின் குடிமக்கள் மதியிழந்தவர்களாக, மூர்க்கர்களாக, ஆளுமைத் திறன் குன்றியவர்களாக, பிற கருத்துகள், பிற இனத்தினர் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், ஆளுபவர்கள் பிறருக்கும் பிற நம்பிக்கைகளுக்கும் பிற கருத்துகளுக்கும் இடமும் முகமும் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். தொடர்ந்த சுய பரிசீலனை, சுய விமர்சனத்துக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். 

தனது நலன், தனது இனத்தாரின் நலன், தனது கருத்து, தனது அதிகாரம், தனது பிம்பம், தனது தரப்பு ஆகியவற்றைத் தவிர வேறெதற்கும் செவிசாய்க்காத, புற உலகே கற்பனையில் இல்லாத ஆட்சியாளர்களின் மதியிறுக்க நிலையை, மௌடீகத்தை உச்சமாகக் காட்டும் படிமம் தான், தலைநகர் டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்ட இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சுவர்கள். உண்மையைப் பார்ப்பதற்கு விரும்பாத உண்மையைக் கேட்பதற்கு விரும்பாதவர்கள் எழுப்பும் சுவர்கள் இவை. அந்த ஆணிகள், தடுப்புச் சுவர்களுக்கு அப்பால் போராடும் குடியானவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அங்கிருக்கும் பெண்கள், குழந்தைகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு இருக்கும் நுண்ணுணர்வின்மையின் அடையாளம் தான் அந்த கூர்மையான ஆணிகள். 

தமது தேசத்துக்குள் தமது மக்களின் குரல்கள் கேட்காமல் இருக்க இவர்கள் இந்தச் சுவர்களை எழுப்பும் அதேநேரத்தில் தேசத்தின் உண்மையான எல்லைகளில் அத்துமீறலும் ஊடுருவலும் சத்தம்போடாமல் நடந்துவருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. செய்திப் பரவலும் தகவல்ரீதியான ஜனநாயகமும் உச்சமாக மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில்தான் இப்படிப்பட்ட தடைச்சுவர்களை மக்களாகிய நாம் அனுமதித்துவருகிறோம்.

நாகரிகம் என்பது வேறு; தொழில்நுட்பம் வேறு என்பது இம்சையாக நமக்குப் போதிக்கப்படுகிறது. 

காஷ்மீரில் தொடங்கி படிப்படியாக தடைச் சுவர்கள் வேறு வேறு வகையில் எழுப்பப்பட்டு வருகின்றன. சென்ற வருடம் இதே மாதத்தில் ‘கோலி மாரோ’ என்று முஸ்லிம் மக்களைச் சுட்டுத் தள்ளச் சொல்லி குரல் எழுப்பி வடகிழக்கு டில்லியில் சிறுபான்மையின மக்கள் கொல்லப்பட்டனர். பெருந்தொற்று காலத்தில் நான்கு மணிநேரத்துக்கு முன்னால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, எந்த முன்தயாரிப்பிலும் ஈடுபட முடியாத நிலையில் ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் தகர கொட்டடிகளில் அடைக்கப்பட்டு, விலங்குளைப் போல மனித கௌரவம் இல்லாமல் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் இல்லாமல் நடக்க வைக்கப்பட்டு துயரத்துக்குள்ளாக்கப்பட்டனர். ‘கோலி மாரோ’ கோஷம், விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகக் கேட்கத் தொடங்கியுள்ளது. 

யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளானாலும் சரி, ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளானாலும் சரி பெரும்பான்மைவாத மக்களின் கருத்தொருமிப்பு, பெரும்பான்மைவாத மக்களின் பங்கேற்பு வாயிலாகவே பேரினவாதக் கொடூரங்களை அரசுகளால் நடத்தமுடிந்திருக்கிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும் ஊடகங்கள், நீதி பரிபாலன அமைப்புகளைப் பாழ்படுத்தி, பெரும்பான்மை மக்களின் மௌனம், சம்மதம், பங்கேற்புடன் பிற மதத்தினர், பிற நம்பிக்கையாளர்கள், பிற கருத்துத் தரப்பினர், பிற வாழ்க்கை நிலைகள், பிற கலாசாரத்தினர், பிற மொழியினர் மீதான பேரினவாத அரசின் தாக்குதல் தொடங்கியதன் விளைவுகளை நேரடியாக அனைத்துத் தளங்களிலும் அனுபவித்துவருகிறோம். 

அனைத்து கருத்து விவாதங்களும் அனைத்து முரண்பாடுகளும் அநாகரிகமாகவும் வன்முறையாகவும் ரத்தக்கலங்கலாகவும் மாறியுள்ள சூழலின் பின்னணி இதுதான். தலைநகரின் எல்லையில் நடப்பட்டிருக்கும் ஆணிகளின் கூர்மை அளவுக்கு நாம் அனைவரும் வெறுப்பு, துவேஷம், நேசமின்மையோடு வேறுபாடுகளைச் செவிகூர முடியாத தரப்புகளாக மாறியிருக்கிறோம். பாசிசம் தனது எதிரியையும் தன் குரலிலேயே பேசச் செய்யும் என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். 

எல்லையில் நடப்பட்டிருக்கும் ஆணிகள் நமது வெறுப்பும் நமது துவேஷமும் நமது தீண்டாமையும் நமது நேசமின்மையும் சேர்ந்த கூர்மைகள் தான். 

‘கோலி மாரோ’ தூரத்தில் கேட்கும் முழக்கம் அல்ல. ‘கோலி மாரோ’ முழக்கம் நம் சாயல் இல்லாததும் அல்ல.  தீர்க்கப்படுவதின் தீர்ப்பதின் உச்சநிலை அது.  

மதியிறுக்கத்துக்குள் ஓர் அரசு ஆழும்போது கேட்கும் கோஷம் ‘கோலி மாரோ’. மதியிறுக்கத்துக்குள் மக்கள் ஆழும்போது கேட்கும் கோஷம்  ‘கோலி மாரோ’. 


Comments

blindfishspeaks said…
நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம் இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளுக்கு