கவிதையும் கவிதையைச் சுற்றிப் பேசுவதும் எனக்கு நிறைவையும் உயிர்ப்பையும் தரும் ஆதாரமான காரியமாக இருக்கிறது. பெரும்பாலும் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியாகவே எனது கருத்துகள், உருவகங்களை அடைகிறேன். அதனால் எதையும் எனக்கென்று சொந்தம் கொண்டாடிவிட முடியாது. தளவாய் சுந்தரம், லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், சாம்ராஜ், இசை, ரஃபீக், வரதன், விஷால், ஏ. வி. மணிகண்டன், சபரிநாதன், பச்சோந்தி என்று அந்த உரையாடல் நீண்டுகொண்டிருக்கிறது. எல்லா உறவுகளையும் விட கவிதையுடனான உறவு மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டது, என்னிடம் நம்பிக்கையை வைத்திருக்கும் வளர்ப்புப் பிராணி ப்ரவுனியைப் போல.
பரிபூரண நம்பிக்கை என்பது தொடர்பில் நாம் ஒரு கருத்தைத் தான் வைத்திருக்கிறோம். ப்ரவுனிக்கு நம்பிக்கை என்பது கருத்து அல்ல. கருத்தாக இல்லாத பரிபூரண நம்பிக்கையின் மேல்தான் ப்ரவுனி, சொர்க்க நரகங்களை சந்தோஷ துயரங்களை விளக்குவதற்கு முயலாமல் எதிர்கொண்டு சலித்துச் சலித்துக் கடக்கிறது. ஏக்கம், நிறைவேற்றம், வறட்சி, செழிப்பு எனப் பல பருவங்களைக் கடந்து கொண்டிருக்கிறோம் நானும் கவிதையும். வியப்பும் எதிர்பாராத தன்மையும் புதுமையும் இன்னமும் குறையவில்லை. அப்படிப்பட்ட உரையாடலை இன்னும் சற்று அதிகமாக நீட்டும் முயற்சிதான் இந்த நூல். மதுரையிலுள்ள தனது வெண்கலப் பாத்திரக் கடையிலிருக்கும் புராதன அந்தஸ்தை அடைந்துவிட்ட தொலைபேசியிலிருந்து நாளிரவு பாராமல் என்னைப் பேசவைத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் ந. ஜயபாஸ்கரனுக்கு இந்தக் கட்டுரைத் தொகுதியை சமர்ப்பணம் செய்கிறேன்.
இந்தப் புத்தகத்தை மிக நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் கொண்டுவரும் நூல் வனம் மணிகண்டனுக்கும் அவரிடம் என்னை ஆற்றுப்படுத்திய த. ராஜனுக்கும் எனது நன்றி. அட்டை வடிவமைப்பு செய்த நண்பரும் ஓவியருமான மணிவண்ணனுக்கு எனது பிரத்யேக நன்றி.
சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்வனம் பதிப்பகத்தின் கடை எண் 21-ல் இன்று முதல் கிடைக்கும். யாவரும் பதிப்பகத்தின் கடை எண் 95-ல் கிடைக்கும்.
க. நா. சு, நகுலன், ஆத்மாநாம், தேவதச்சன் முதல் வே. நி. சூர்யா வரை கவிஞர்கள் பற்றிய தனிக்கட்டுரைகளும், கவிதைகள் தொடர்பான தனிக்குறிப்புகளும் கொண்ட உரைநடை நூல் இது.
Comments