Skip to main content

அந்தக் குருவி யார் ஸ்ரீநேசன்

 

கவிஞர் ஸ்ரீநேசன் நேற்று தன் வீட்டு ஜன்னலுக்கு வந்த குருவி ஒன்றின் வீடியோவை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். ஜன்னலில் அடிக்கப்பட்டிருந்த வலை அந்த வீடியோவை விசேஷமாக்கியது. அந்தக் குருவி முதல் பார்வைக்கு மைனா போல எனக்குத் தென்பட்டது. மிகச் சிறிய உடலைக் கொண்ட குருவி என்றாலும் ஸ்ரீநேசனின் கவிதைகளை விட உரத்துச் சத்தமெழுப்பும் குருவி அது. எதையோ ஸ்ரீ நேசனுக்குச் சொல்வதற்கு வந்த மாதிரி இருந்தது. எழுது, தொடர்ந்து எழுது, நகுலன் கட்டுரை ஞாபகம் இருக்கிறதா, எழுந்து எழுது என்று திருப்பள்ளியெழுச்சியைப் போல உடல் முழுவதும் திரட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

குருவிக்குப் பின்னால் தூரத்தில் வயல், அதையொட்டிய பாதையில் ஒரு சிறுவன் கன்றுக்குட்டி ஒன்றைத் துரத்திக் கொண்டு போகிறான். கரும்பழுப்புக் கன்றுக்குட்டி ஓடி மறைந்தது. 

குருவி எதையோ சொல்ல வந்தது போல, சொல்லிவிட்டு செல்ல வேண்டுமென்று காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட பரபரப்பில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது.

கண்டராதித்தனின் அடையாளமாக எனக்கு, அவர் வீட்டில் வளர்த்த தேன்சிட்டு இருக்கும். ஸ்ரீ நேசனின் அடையாங்களில் ஒன்றாக இந்தக் குருவி சேர்ந்திருக்கிறது.

ஸ்ரீநேசன் வீடியோவின் முக்கால் பகுதியில் யாரையோ கூப்பிடுகிறார். அது ஷங்கர் என்பதுபோல எனக்குக் கேட்டது.


Comments

கவிஞர் நேசனின் புகைப்படக் கலைகுறித்து முன்பே எனக்குத் தெரியும். இது அதிலொன்று. எல்லாம் கவிதையாகவோ, இலக்கியமாகவோ அவருக்கு ஆகிவிடும் சாத்தியம் எப்படிப்பட்டது. அழகு. கவிதையாகவே வாழும் போதே இந்தக் கண்கள் கிடைக்கின்றன.