(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் உத்தேசித்து ‘அம்ருதா’ மாத இதழில் தொடங்கிய தொடர் இது. பெருந்தொற்று காரணமாக, நான்கு பகுதிகளுடன் இதழ் நிறுத்தப்பட்டு தொடர முடியாமல் போன நிலையில், மீண்டு ‘அம்ருதா’ இதழ் வர ஆரம்பித்திருக்கிறது. லக்ஷ்மி மணிவண்ணன், கலாப்ரியா எனத் தொடர்கிறேன்.)
வயோதிகச் சடவும் புகைமூட்டமும் மந்தமும் கொண்ட வடிவமோ புதுக்கவிதை என்ற உணர்வு எனக்கு வெளிப்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம். காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘கலாப்ரியா கவிதைகள்’ தற்செயலாக சுந்தர ராமசாமியிடமிருந்து கிடைத்தது. திருநெல்வேலிக்கு ஆசையோடு அதை எடுத்துச் சென்றேன். கவிதையை வடிவமாகத் தேர்ந்துகொண்டு, ஆனால் என் கவிதைக்கு உத்வேகமோ உருவகமோ கிடைக்காமல் இருந்த நிலையில், என் அகத்தின் சுவரை உடைத்துக் கொண்டு சாய்வு நாற்காலிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு அதிரடியாக நுழைந்தார் கலாப்ரியா. பிரக்ஞைப்பூர்வமாகவே இந்தப் படிமத்தைப் பயன்படுத்துகிறேன். சினிமாவில் ரஜினிகாந்த் எப்படி உற்சாகமாக அறிமுகமாவாரோ அப்படி, மனோவைதிகத்துக்குள் ஆட்பட்டிருந்த என் உலகத்தை என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை உக்கிரமாகச் சொன்னவர் கலாப்ரியாதான். அதனால்தான் கலாப்ரியா என்றும் எனக்குள் நிலைத்த நாயகன். கவிதைகளில் எப்போது மாற்றம் வரும்போதும் அதன் மூலப்படிவங்களாக ஞானக்கூத்தனும் கலாப்ரியாவும் தவிர்க்க முடியாமல் இருப்பார்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடங்கி ஒரு மரபாகிவிட்ட தலித் கவிதையில் கலாப்ரியாவின் தாக்கம் பொதிந்திருக்கிறது. கலாப்ரியா உத்வேகம் பெறுவது ஞானக்கூத்தனிடத்தில்.
கலாப்ரியா என்னை ஈர்த்ததில் கவிதை அல்லாத இன்னொரு முக்கியமான காரணம், அவர் எழுதிய திருநெல்வேலி எனக்கான ஊர் அடையாளமாகவும் இருந்ததுதான். நான் வசித்த நான் திரிந்த தெருக்களில் சற்று முன்னர் இருந்துவிட்டுப் போன ஒருவன் எழுதிய கவிதைகள் இவை; எனக்குத் தெரிந்த சித்தியையும் அத்தையையும் சற்றே முன்பு பார்த்து எழுதியவனின் கவிதைகள் இவை; எனக்கு முன்னர் எழுதப்பட்டாலும் நான் உணரும் இழப்பையும் நான் உணரும் துக்கத்தையும் நான் உணரும் தவிப்பையும் நான் உணரும் ரௌத்திரத்தையும் நான் வைத்திருக்கும் சிறுமைகளையும் தக்கவைத்துக் கொண்டு அங்கீகரிக்கும் கவிதைகள் இவை; இப்படி அடையாளம் கண்டது முதலில் கலாப்ரியா கவிதைகளில் தான்.
‘மற்றாங்கே’ தொகுப்பின் முதல் கவிதைகளில் ஒன்றான ‘பிற்பகல்’ கவிதையைப் படித்தபோது ஏற்பட்ட அதிர்வு இன்றும் ஞாபகத்துக்கு வருகிறது. மருத மரநிழல்கள் மீட்டாத தண்டவாளங்கள், அங்கே ஆறுதலுக்காகச் செல்லும் எங்கள் தனிமையின் சோகத்தைப் பகிரத் தொடங்கியிருந்தது. யாரும் பொதுவாக உணரும் ஊர்த்தன்மையும், ஊர் பண்பாடும், வீடுகளில் புழங்கும் உரையாடலும் சத்தமும் புதுக்கவிதையில் அவர் மூலமாகத்தான் அபூர்வமாகச் சேர்ந்தன. எல்லாரின் பால்யத்தையும் பிராயத்தையும் நினைவூட்டக் கூடிய நுண்விவரங்களுமாக தமிழ் மொழியின் செவ்வியல் குணத்தையும் தக்கவைத்துக் கொண்டவர் கலாப்ரியா. எழுத்து மரபும் வானம்பாடி மரபும் சரியாக எதிர்கொண்டு உரையாடி வெற்றிபெற்ற முதல் தமிழ் தன்னிலை கலாப்ரியா.
காயங்களுடன் கதறலுடன் ஓடி ஒளியுமொரு பன்றியைத் தேடிக் கொத்தும் பசியற்ற காக்கைகள் என்ற சித்திரத்தை, ஒரு பெண் பார்க்கும் பார்வைக்கு ஒப்பாக வைக்கிறார். பசியற்ற காக்கைகளாய் காயங்களுடன் கதறலுடன் ஓடி ஒளியும் நம்மை எத்தனை துயரங்களும் பைத்தியமும் வாதைகளும் துரத்தியிருக்கின்றன. மாறும் உலகின் வீதி ஒன்றில் மாற்றத்துக்கு தன் தலையைப் பிளந்து திறந்து மாற்றத்தின் காகங்கள் தன்னை வலியோடு கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. தனக்குப் பிரத்யேகமாக நடந்த துயரத்தின் பின்னணியில், உலகத்திலிருந்து அவர் தன்னைச் சுருக்கி ஒடுக்கிக் கொள்ளவில்லை. தனது வலியையும் நோய்மையையும் பரிசீலனை செய்து கொண்டே உலகத்தின் அபத்தங்கள், வேறுபாடுகள், அசிங்கங்களோடு விமர்சனத்துடனும் மோதும் வன்மையுடனும் செயல்பட்ட கவிதை உலகம் அவருடையது. அமங்கலம், அருசி, அப்பட்டம், அதிர்ச்சி என கவிதை புறக்கணித்திருந்த அத்தனையையும் அழகுடன் சூடிக்கொண்டவை கலாப்ரியாவின் கவிதைகள்.
கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்..!
இந்தக் கவிதையில் வரும் ஓவியம் எனது கவிதை வாசிப்பனுபவத்தில் நிலைத்து இன்னும் இருப்பது. அக்கா குழந்தை என்னும் பதத்தை இயல்பாக உருவாக்கியிருக்கிறார். சினிமா, அரசியல், பாலியல், பத்திரிகைகள் என வெகுஜனப் பண்பாட்டின் அசைவுகள், முணுமுணுப்புகள் அத்தனையும் மனத்தடைகள் இன்றி கவிதைகளில் அனுமதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையை, கல்வியை, அமைதியாக எனக்கு அளித்தவை கலாப்ரியாவின் கவிதைகள். கலாப்ரியா கவிதைகளை வாசித்தவுடன் எனக்குக் கிடைத்த ‘உலகெலாம் சூரியன்’ தொகுதியும் கலாப்ரியாவை மேலும் நெருக்கமாக்கியது. கலாப்ரியா கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படித்துவிட்ட பின்னர் அவரைத் திருநெல்வேலியில் நேரடியாகச் சந்தித்த போது அவ்வளவு பரவசமாக அவரை எதிர்கொண்டேன் என்று ஞாபகத்தில் இருக்கிறது. அவரும் தன் கவிதைகளின் ஆற்றலையும் அதில் உள்ள கல்யாணக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்டவராகத் தெரிந்தார். கலாப்ரியா கவிதைகள் குறித்து, கவிதையில் கலாப்ரியா கொண்டு வந்த மாற்று அழகியல் பண்பாடு குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை எனக்கு இன்றும் உந்துதலாக இருக்கும் கட்டுரை ஆகும். ஒரு கவிஞன் குறித்த திட்டவட்டமான, துல்லியமான வரையறை என்று ஜெயமோகனின் அந்தக் கட்டுரையைச் சொல்வேன். கவிதைகள் குறித்தும் ஒரு கவிஞனின் ஒட்டுமொத்த கவிதைகள் குறித்து அவதானிப்பதற்கும் எழுதுவதற்கும் முன்னுதாரணமாக இருக்கும் அபூர்வமான கட்டுரைகளில் ஒன்று ஜெயமோகனுடையது.
கலாப்ரியாவின் ‘என்னுடைய மேட்டு நிலம்’, ‘பிரிவுகள்’ கவிதையைப் பலமுறை வாசித்திருப்பேன். அந்தக் கவிதை எனக்கு உள்ளே ஆழத்தில் போயிருக்கிறது என்பதை எனது முதல் தொகுதியில் வெளியான ‘சிமெண்ட் நிறக்காரில் வருபவர்கள்’ கவிதை வழியாக சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன். என்னுடைய மேட்டு நிலம் கவிதைதான் வேறுவிதமாக ‘சிமெண்ட் நிறக்காரில் வருபவர்கள்’ கவிதையாக மாறியிருப்பது எனது சமீபத்திய நிறைவுகளில் ஒன்று.
பிரிவுகள்
- கலாப்ரியா
நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்துவிடும் -
இதன் ஊடே
ஊர்ந்து, நடந்து
ஓடி(ச்) செல்லும்
வண்டித் தடங்களை
இனி காணமுடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு - நாளை
இந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்.
மேலே பறக்கும்
கழுகின் நிழல் -
கீழே -
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது.
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்துவிடும்.
000
சிமெண்ட் நிற காரில் வருபவர்கள்
- ஷங்கர்ராமசுப்ரமணியன்
அந்த மழைக்கால ஏரி இப்போது
நீர் வற்றியிருக்கிறது
சென்ற வருட மழைக்குப் பின்
தினம்தோறும் காலையில்
நான்கு யுவதிகள் அங்கே
படகு செலுத்த வருவார்கள்
பேருந்தில் பாலம் கடக்கும்
என்னை அவர்களுக்குத் தெரியாது
அவர்கள் சிமெண்ட் நிற காரில்
வருவார்கள்
அந்தக் கார்
மரத்தடி நிழலில்
இளைப்பாறும்
காட்சி அலாதியானது
மழைக்கால ஓடையில் நீர்குறைய
அவர்கள் அங்கே வருவதில்லை
படகு தனியே நின்று கொண்டிருக்கிறது
கோடை முடிவடையும் அறிகுறிகள்
ஆரம்பமாகிவிட்டன
இன்னும் சிலதினங்களில் மழைபெய்யக்
கூடும்
அவர்கள்
சூரியன் வரும்போதே
குதிரைவால் சடையுடன்
ஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்
படகு இப்போது தனியே நின்று
கொண்டிருக்கிறது.
Comments