Skip to main content

பாழ்பட்ட தேசம் - சிவ் விஸ்வநாதன்



நரேந்திர மோடியின் இருபது ஆண்டுகள் பொதுவாழ்வைக் குறிக்கும் ஆர்ப்பாட்டக் கொண்டாட்டம் நேருக்கு நேராக எதிர்கொள்ளப்பட வேண்டியதாகும். ஊடகங்கள் சேர்ந்து ஒத்தூதும் நிலையில், கருத்து வேறுபடுதல் எளிது அல்ல. விரக்தி உணர்வையே அடைகிறோம். இந்தக் காலகட்டத்தில் எனது பழைய தத்துவ ஆசிரியர்களின் கட்டளையையே நினைவுகூர்கிறேன். ராஜ்ஜியத்தின் மௌனங்களை வாசிப்பதுதான் அது.

மோடியின் இருப்பை தன்னளவிலேயே சந்திப்பதிலிருந்து தொடங்க வேண்டும். சமூக உளவிலாளர் ஆசிஷ் நந்தி, ராமஜென்ம பூமி இயக்கத்தின் போது கூறியதைப் போல, நம்மை எதிர்கொள்ளும் மோடி 'பாசிஸ்ட்' அல்ல. இந்த மோடி ஒரு புதிய அவதாரம், ஒரு பகுதி புனைவாலான, பின் உண்மை யுகம் உருவாக்கிய ஒரு படைப்பு. இல்லாத திறன்கள் இருப்பதாக நம்பவைக்கப்பட்ட ஒரு உருப்போலி அவர். உண்மையல்லாத அவரது கற்பனை செயல்முறைகள் மூலம் வர் ஆர்வெலிய நிலையையும் தாண்டிப் போகிறவர். 

ஸ்திரத்தன்மை சார்ந்த அறைகூவல்களை மீறி மோடியின் பெரும்பான்மைவாதத்தை வாசிப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் தட்டைத்தன்மையையும் இரண்டும் கெட்டான் தன்மையையும் சேர்ந்து உருவாக்கிய மென் பெரும்பான்மைவாதம் அது. எல்லாருக்கும் பொதுமையான தேசபக்தியை வலியுறுத்துவதன் மூலம் இந்த ஆட்சி கருத்துவேறுபாட்டையும் மாறுபாடு கொள்வதற்கான சாத்தியங்களையும்  அவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவதன் வாயிலாக படிப்படியாக அழித்து வருகிறது. அதன் பலனாக சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் மற்றும் கருத்து வேறுபடும் குழுக்கள் அனைவரும் பெரும்பான்மைவாதத்தின் கொடும் நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
 
வன்முறையின் புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதிலும் அதை ஏற்கத்தக்கதாக மாற்றுவதிலும் தான் மோடியின் உண்மையான படைப்பூக்கம் உள்ளது. 1984-ல் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்களின் போது தென்பட்ட நோய்க்கூறு, அடுத்த சில தசாப்தங்களில் அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. கொள்கை நடைமுறையின் ஒரு பகுதியாக, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழியாக இன்று கலவரங்கள் ஆகியுள்ளன. வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான வழியாக கலவரங்கள் பார்க்கப்பட வேண்டும். கலவரத்தைத் தூண்டுபவருக்கு வரலாற்றைத் திருத்தி தான் மீட்சி அளிப்பதாக நினைப்பதற்கான தேவை இருக்கிறது. இந்த வன்முறை அடையாளப்பூர்வமானதும் கூட. மாறுபாடுகிறவர்களை ஒடுக்குவது அப்பட்டமாகத் திகழ்கிறது. ‘நகர்புற நக்சல்' என்ற புனைவின் உருவாக்கம் வழியாகத்தான் ஸ்டான் சுவாமியையோ சுதா பரத்வாஜையோ சித்திரவதை செய்ய அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வளர்ச்சிவாதம் தொடர்பில் சந்தேகத்தையும் விமர்சனத்தையும் செய்யும் சுற்றுப்புறச் சூழலியலாளர்களும் இப்படியான உபாயம் மூலம்தான் ஒடுக்கப்படுகின்றனர். சிறுபான்மையினர் மட்டும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர் இன்று பயன்படுத்தி எறியக்கூடிய, கட்டுமானத் தொழில்துறைக்கான கச்சாப்பொருளாக மாறிவிட்டார். அமைப்புசாராத தொழிலாளி, விவசாயி, சிறுபான்மையினர், கல்வித்துறையினர், கருத்துவேறுபாடு கொள்பவர் ஆகியோரின் குடியுரிமை என்பது மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்தியா என்று அழைக்கப்படும் மோடித்துவ விலங்குப் பண்ணையில் ஒவ்வொருவரும் சமத்துவமான இடத்துக்குச் சற்றுக் கீழேயுள்ள மனிதர்களாகிவிட்டனர். ஒரு வன்மையான அரசாக இந்தியாவின் பிம்பம் தற்போது முழுமையாகிவிட்டது. உலகின் மாபெரும் ராணுவ சக்தியாக ஆகவேண்டும் என்ற மோடியின் அறைகூவலின் வழியாக இந்த பிம்பம் திரட்டப்பட்டுள்ளது. 
 
உடலுக்கும், குடிமைத்துவத்துக்கும் நடக்கும் வன்முறை பின் ஆர்வெலிய மொழியோடு சேர்ந்துள்ளது. ‘இயல்பு' என்ற வார்த்தை விரும்பத்தக்கதாக உள்ளது. கொடூரத்துக்குள்ளாகும் முஸ்லிம்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் இயல்புக்குத் திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இயல்புக்குப் பின்னான சமூகம் சார்ந்த கருத்துருவத்தை ஒருபடி மேல் சென்று பற்றியுள்ளார் மோடி. அது நினைவை அழித்தபடி இருப்பதோடு, நோய்க்கூறுகள் இங்கேயே நீடித்து இருக்கப்போவதையும் சுட்டிக்காட்டுகின்றன.
  
இஸ்ரேலை கிளிப்பிள்ளைப் போல பின்பற்றுவதைத் தாண்டி அயலுறவுக் கொள்கையில் இந்தியாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. ரோகிங்கியாக்களை மறந்தே விட்டது. ஆப்கன் நெருக்கடியின்போது பாராமலே இருந்தது.  முட்டாள்தனமான பாதுகாப்பு வாதமாகச் சுருங்கிவிட்ட அதன் பகுப்பாய்வில் அறம், துயரத்தின் மொழியை இழந்துவிட்டது. சீனாவை எதிர்கொள்வதாக இருக்கட்டும், அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்படுவதில் இருக்கட்டும்,  இந்தியா ஒரு புதிய அருவருப்பான தேசிய வாதத்தோடு தன்னை இறுக்கிக் கொண்டு, கருத்துகள் நீக்கப்பட்ட நிலைப்பாட்டில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. அங்கேதான் கோழைத்தனத்தை ஜம்பம் மறைத்துள்ளது. 

பல்கலைக்கழகங்களின் சீரழிவு இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதிக்கப்போவது. மோடி அறிவை, சின்னச் சின்ன வெற்றிக்கோப்பைகளைச் சேகரிப்பதற்கான மால் ஆக நினைக்கிறார். 

அறிவியலும் ஊடகமும் இந்த ஆட்சியின் இரண்டு மாபெரும் சேதாரங்கள். ஒரு துண்டறிக்கை, ஒரு விளம்பரம் மற்றும் ஒரு செய்தி ஆகிவற்றுக்கான வித்தியாசத்தை இன்று பார்க்க முடிவதில்லை. வாழ்க்கை முறையாக, சிந்தனையாக இருக்க வேண்டிய அறிவியல் தனது விளையாட்டுத்தன்மையை இழந்துள்ளது. நிச்சயத்தன்மை பொழியும் இந்த ராஜ்ஜியத்தில் சந்தேக உணர்வுக்கே வழியில்லாமல் உள்ளது. நாகரிகத்தைப் பலவீனப்படுத்துவதன் வழியாக, ஒரு ராட்சசத்தனமான தேசிய அரசாக உருவாகியுள்ளது. ஆழத்தில் மோடி ஆட்சிக்கு எதிர்கால உணர்வு இல்லை. அதிகாரத்தில் நீடித்து இருப்பதை மட்டுமே விரும்புகிறது. இந்தியா என்ற கருத்து, சின்ன நிச்சயங்களாக குறுக்கப்பட்டுவிட்டது. பழைய தேய்ந்த சொல்லாடல்களின் கருத்துருவமாக இந்தியா உள்ளது. 

பார்வையாளர்துவமாக குடியுரிமைத்துவம் மாறிய நிலை, பொது வெளிகள் காலியாகிவிட்ட நிலை, குடிமைச் சமூகத்தின் அரசியல் என்பதே இல்லாமல் ஆகிவிட்ட நிலை இன்று. இந்தச் சூழ்நிலையில் புதிய கருத்துகள், மறுப்பின் புதிய வடிவங்களைச் சுற்றி எதிர்ப்பு தெரிவிப்பதற்கான குறியீடுகளை நாம் உருவாக்க வேண்டும். ஆப்கனையும் ரோகிங்கியாவையும் வெறுமனே காட்சி நிகழ்வுகளாக குடிமைச் சமூகம் கடந்துபோகக் கூடாது. உரையாட வேண்டிய ஊடகத்தின் மௌனம் உடைக்கப்பட வேண்டியது. அப்போதுதான் சந்தேகத்தாலும் அவநம்பிக்கையாலும் இந்த அரசு எதிர்கொள்ளப்படும். சர்வாதிகார தேர்தல்வாதம் என்ற புதிய கிருமி வகையை ஏவி அதற்கு அங்கீகாரத்தையும் இந்த அரசு கோரும் நிலையில் ஜனநாயகம் புனர் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். 

கீழ்க்கண்ட நடவடிக்கைகளிலிருந்து தொடங்கலாம். அமைப்புசாரா பொருளாதாரத்தை அங்கீகரிப்பதோடு, விவசாயிகள் நெருக்கடிக்கு வினையாற்றுவது. பல்கலைக்கழகங்களை புதுப்பிப்பது. விளிம்புநிலை மக்களையும் சேர்த்து சிந்தித்து நகரங்களை உருவாக்குவது, இயற்கையை ஒரு நபரைப் போல அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்வது, பொதுப் பணித் துறையாக இல்லாமல். புதுமை நாட்டம் கொண்ட குடிமைச் சமூகமும் நாகரிகம் தொடர்பிலான பன்மைவாதப் பார்வையும் மட்டுமே தேசிய அரசின் செயலற்ற தன்மைக்கு சவால் விடுப்பதாக இருக்கும். 

(நன்றி : தி டெலிகிராப்)

Comments

Sivaraman said…
Had been reading his 'Hindu' articles. Since I no longer buy 'Hindu' I could have missed it. Bold and true. Thanks for translating and sharing ஷங்கர்ராமசுப்ரமணியன்.