Skip to main content

டெல்லி பற்றிய தொலைந்த நினைவு - ஆஹா சாஹித் அலி



நான் பிறக்கவில்லை
அப்போது 1948
பெயர் இல்லாத சாலை ஒன்றில்
அந்தப் பேருந்து திரும்புகிறது

அங்கே எனது தந்தை
அவருடைய சைக்கிளில்
அவர் என்னைவிட இளையவராக

ஓக்லாவில் நான் இறங்குகிறேன்
ஜமுனா நதியோரம் நடந்து
எனது பெற்றோர்களைக் கடக்கிறேன்


என் அம்மா புது மணப்பெண்
ஜரிகையின் ஜூவாலை அவளது சேலை
வெள்ளிப்பொடி அவளது கூந்தலைப் பிரிக்கிறது

அவள் என்னைப் பார்க்கவில்லை
அவளது கொலுசின் சலங்கை சப்தம் தொலைவில்
சீனாவிலிருந்து வரும் ஒலியைப் போல

தேநீர்க் கடைகளில் அரிக்கேன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன
கண்ணாடி நாக்குகளுடன் மணியடித்தபடி
நட்சத்திரங்கள் வெளியே வரத் தொடங்கின

அவர்கள் வீட்டுக்குள் சென்று
குடும்ப ஆல்பத்தில் புகைப்படங்களாக
எப்போதுமாக மங்கிவிட்டனர்

உப்பரிகையில் உடைந்த நிலையில்
நான் பார்த்த எண்ணெய் விளக்கோ
தற்போது ஒளியேற்றப்பட்டுள்ளது


அவர்களை விட மூத்த வெகுவாக மூத்த
நான் அவர்களது மகனென்று அவர்களிடம்
சொல்ல வேண்டும்

நான் கதவைத் தட்டுகிறேன் தட்டிக்கொண்டே இருக்கிறேன்
ஆனால் அவர்களுக்கோ இரவு அமைதியானது
எனது இருப்பின் இந்த
இந்த இரவில்

அவர்கள் என்னைக் கேட்கவில்லை
அவர்கள் என்னைக் கேட்கவும் மாட்டார்கள்
நட்சத்திரங்களின் நாவுகளுக்குள்
எனது கதவு தட்டல் மறைந்துபோவதை
அவர்கள் கேட்க மாட்டார்கள்.


Comments