Skip to main content

மலைமீது ஓய்வுகொள்ளும் கவிஞன்ஷங்கர்ராமசுப்ரமணியன்

விக்ரமாதித்யன் எழுதிய பெருந்தொகையான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் ஒரு சிறுதொகுதியைக் கொண்டுவர வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியைப் பொறுத்தவரை அந்த ஆசை பாதியே நிறைவேறியுள்ளது; கொஞ்சம் பெரியதாகிவிட்டது. இதிலிருந்து ஒரு குட்டித்தொகுதியை இன்னொருவரோ நானோ எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.  தமிழ்ப் புதுக்கவிதையில் சிறுபத்திரிகை வட்டத்திலும், பொதுவாசகர் பரப்பிலும் (தமிழர்களின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது அவர்கள் குறைவானவர்களாகவே இருந்தாலும்) தான் எழுதிய கவிதை வரிகளால் அதிகம் நினைவுகூரப்படுபவர் விக்ரமாதித்யனாகவே இருப்பார். தமிழ் சாதாரணனின் அறிவு, ஞானம், சமய நம்பிக்கை, உலகப் பார்வை என்னென்ன வளர்ச்சிகளையும் வரையறைகளையும் கொண்டனவோ அதுதான் விக்ரமாதித்யனின் வளர்ச்சியும் வரையறையும் வெற்றியும். என் அனுபவ அளவில் தமிழ் வாழ்க்கைதான் அதிகப் பரிச்சயம் என்பதால் இக்கூற்றைச் சொல்கிறேன். இதற்கு ஒரு உலகளாவிய தன்மையும் இருக்கலாம். அந்த அடிப்படையில் விக்ரமாதித்யன் சார்ந்து  பலராலும் நினைவுகூரப்படும் கவிதைகளைக் கூடுமானவரை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன். இதை முதல் நிபந்தனையாக வைத்துக்கொண்டேன். சேர்த்துப்பார்க்கும்போது அந்த ஆசை ஏறக்குறைய நிறைவேறியிருக்கிறது.கோயில், ஐதிகங்கள், தலபுராணங்கள் சார்ந்துதான் விக்ரமாதித்யனின் கவிதைகள் அல்லது கவிதை வரிகள் தனித்துவம் அடைகின்றன.  ‘ஆகமம் ஆசாரம் தவறாத நியமம்/ தெய்வமும் ஐதிகத்தில் வாழும்’ என்று அவர் முடிக்கும்போது மந்திரச் சொற்கள் ஆகிவிடுகின்றன. ‘உலகுயிர்க்கெல்லாம் முலைதரும் அம்மையே/ தலைமாலை சூடித் திரியும் சுடலைக் காளியே’ என்ற வரிகள் பிரார்த்தனையின் இரைஞ்சுதலை அடைந்துவிடுகின்றன. இதுபோன்ற பல மந்திர வாசகங்களை அவர் படைத்திருக்கிறார். இவருடைய குறுங்கவிதைகளைத் தனியாக ஒரு தொகுப்பாக்க வேண்டும். கிரகயுத்தம் கவிதைகள் அதற்கு உதாரணமானவை. ‘தங்கத் தேருக்குத் தனி அலங்காரம் எதற்கு’, ‘பருவைத்த முகம் பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது’, ‘அம்மாவும் மகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகாக இருக்கிறார்கள்’, ‘குருமகாராஜ் ஜோதி வளர்க்க/ குடும்பம் பட்டினி கிடக்க’, ‘சிவன்/ என்றென்றும்/ நர்த்தன சிங்கார ரூபன்தான்’, ‘வசந்தம் வருகிறது/ வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கிறது/ வாழ்வரசிகள் கூடுகிறார்/ ஆசைப்பட்டு’ என விக்ரமாதித்யன் கண்ட அழகிய கனவுகள், அவரது குறுங்கவிதைகளும், கவிதைகளின் முடிப்புகளும்.விக்ரமாதித்யன் கவிதை உலகம் லௌகீகமானது. லௌகீகமாகத் தொடங்கி லௌகீகமாகவே நிறைவும்கொள்பவை. அதன் வெற்றியும் தோல்வியும் உலகியலே. கவிதையின் அன்றாட உபயோகத்தன்மை குறித்து அதிகம் தன் கவிதைகளில் விசனப்பட்டவர் விக்ரமாதித்யன். ஆனால் அவர் கவிதைகள் பயன்பாட்டு மதிப்புகொண்டவைதாம்.‘வேலையில்லாதவன்/கைலியுடுத்திக் கழிக்க/ வெள்ளைச் சேலையுடுத்திக் கிழிப்பாள்/ கோவணமாகிறது’ என நறுங்கி, நறுங்கிச் சிதையும் வாழ்க்கையைத்தான் தீராமல் எழுதுகிறார் விக்ரமாதித்யன்.  மிக விரக்தியுடன் பேசினாலும், மிகக் கழிவிரக்கம் கொண்டாலும், மிகவும் அலைக்கழிவுற்றாலும் உயிர்ப்புக்கான பெருந்தீயை அவியவிடாமல் உள்ளோட்டத்தைத் தக்கவைத்திருப்பவை. எல்லாம் மாறும் என்ற ஞானம், அதேவேளையில் மாறிவிட்டதைப் பற்றிய புலம்பல், மாறாத இயற்கை பற்றிய நிம்மதி என பூமியின் அத்தனை பருவங்களையும் கொண்டவை இவரது கவிதைகள். தீ என்ற படிமத்தை அவர் விதவிதமாகத் தனது கவிதைகளில் ஏன் தொடரவேண்டும்; இத்தனை வாதைகளைக் கவிதைகளில் வடித்த அவரால், ‘சிட்டுக்குருவிக்கு ஜே’ என்று எப்படி கோஷம் போடமுடிகிறது?  விக்ரமாதித்யன் லௌகீகத்துக்கு அப்பால் எழுதிய அபூர்வமான கவிதைகளில் ஒன்று இதுவென்று சொல்வேன்:

‘அடைத்திருந்த கதவைத் தட்டி/ திறக்கச் செய்தது இயல்பூக்கம்/  உட்புகுந்து பரவிநின்ற வெளிச்சத்தையும்/  உடன்வந்து சிலிர்க்க வைத்த காற்றையும்/  உள்வாங்கி அனுபவித்த காற்றையும்

ஒரு பசி தெரிந்து/ உயிர்ப்பசி உணர்ந்து/ ஓருயிர் உருகும்/ ஊழுழிக் காலமாக

ஓருயிர்/  ஆருயிரென உணர்வது/  பேருயிர்’ என்பது வரை விக்ரமாதித்யன் பூமிக்கு மேலே சற்றுப் பறந்து தாக்குப்பிடிக்கிறார். அடுத்து ‘பேருயிரின் பிரச்சினைகள்/ பெரியவை/ அவர்கள் பேசுவது/ பகவத் கீதை/ பின்னால் இருக்கிறது/ பாதுகாப்பான வாழ்க்கை’ என்று  இறங்கிவிடுகிறார். அது அவரது இறக்கம். அவர் கவிதைகளில் வரும் பிராணிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சி உருவகங்கள் எல்லாமே தனித்துவமான உயிர்கள் அல்ல. அன்றாடத்தில் மாட்டிச் செக்கிழுக்கும்  சுயத்தின் ஸ்திதியைக் குறிக்கும் உருவகங்கள்தாம்.விக்ரமாதித்யனின் கவிதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும் பெண்குழந்தைகளைப் போல, தொடக்கத்திலேயே நெடுநெடுவென்று வளர்த்தி காட்டியவை. அவரது முதல் தொகுப்பில் எழுதிய ‘கொடை’ கவிதை, அவரது உலகம் பின்னர் அடைந்த முழுமையின் சகல தீற்றல்களையும் கொண்டவை.  தமிழ் மரபின் ஓசை, உள்ளார்ந்த ஒலிநயம், மரபிலக்கியத்தின் வார்த்தை வளம் மற்றும் குறிப்புணர்த்தல்கள், பேச்சுத் தமிழின் துடி, தன்னெழுச்சி, பாடல் தன்மை, உள்ளோட்டம் எல்லாம் கூடிய மொழி அவருக்கு அவரது ஆரம்பகால கவிதைகளிலேயே சித்தித்துவிடுகிறது. புதுக்கவிதை அதுவரை தேய்வழக்குகள், அலங்காரம், சுமை என்று தவிர்த்துவந்த அத்தனை குணாம்சங்களையும் விக்ரமாதித்யன் தன் சௌந்தர்யங்களாகச் சூடி, தமிழ்மரபின் தொடர்ச்சியாக ஒரு மக்கள் கவிஞனாவதற்கான அத்தனை நம்பிக்கைகளையும் இக்கவிதை மூலம் அளிக்கிறார். தமிழ் வாழ்க்கையின் சித்திரங்களும் சத்தங்களும் அபூர்வமாகப் பதிவான இயற்கைக் கவிதை அது. ‘ரிப்பேர்… குடை ரிப்பேர்…’ என்று தமிழ் நவீன கவிதையில் தமிழ் வாழ்க்கையின் சத்தம் அநேகமாக முதல்முறையாகக் கேட்கிறது. அதே தொகுதியில் இடம்பெற்ற, விக்ரமாதித்யன் என்றாலே நினைவில் வரும்  ‘சுவடுகள்’ கவிதையும் அத்தகைய அழகைக் கொண்டதுதான். ‘வரும் வழியில்/ கண்டெடுத்த/ கல்வெள்ளிக்/ கொலுசு ஒண்ணு/ கற்பனையில் வரைந்த/ பொற்பாதச் சித்திரத்தை/ கலைக்க முடியலியே இன்னும்’. இந்தக் கவிதை, தமிழ் நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை அழகியல்பூர்வமாக, எந்தவிதச் சிரத்தையும் வெளித்தெரியாமல் அநாயசமாக நடந்த ஒரு சாதனை. இப்படி வேக வளர்த்தி காட்டும் விக்ரமாதித்யன், தனது ஐந்தாவது தொகுதியான ‘திருஉத்திரகோசமங்கை’யில் எழுதிய ‘நவபாஷாணம்’ நெடுங்கவிதையில் பரிபூர்ணத்தை அடைவதோடு தன் எல்லைகளையும் உறுதியாக வரையறுத்து விடுகிறார்.‘நவபாஷாணம்’ மூலமாக தன் கவிதையின் உச்சத்தை அடைந்த விக்ரமாதித்யன் அதற்குப் பிறகு தான் அடைந்த  உச்சியில் வெகுகாலமாக ‘மகாகவிஞன்’ என்ற சுயநிர்ணயத்துடனும் இறுமாப்புடனும் ஓய்வுகொள்கிறார்.தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவிஆளுமையின் சொர்க்கமும் நரகமும்.  இம்மைக்கு அம்மை, மறுமைக்கு மனைவி, வாழையடி வாழையாக வாழ்ந்து கொய்யாப் பழம் என்னும் செழுமையான வாழ்வைக் கொய்ய தன் கவிதைகள் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பவர்தான் விக்ரமாதித்யன். எந்தப் பாம்பும்முழுசாய்க் கடித்ததில்லை என்று விக்ரமாதித்யன் தன் கவிதையில் விசனித்திருக்கிறார். ஆனால்விக்ரமாதித்யனைக் கவிதை முழுமையாகக் கடித்திருக்கிறது. இல்லையெனில் ஒரே நேரத்தில் கழுத்தில்மாலையாகவும் காலைச் சுற்றும் பாம்பாகவும் அவருக்குக் கவிதை ஆகியிருந்திருக்காது.கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது மரியாதையும் பிரியங்களும்…(சிறுகோட்டுப் பெரும்பழம் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)

Comments

Popular posts from this blog

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை. ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன். எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார். 000 ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆ

நகுலனிடமிருந்து பிரிந்த இறகு

நவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது. தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று. அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்.