கவிஞர்
விக்ரமாதித்யன் தன் கவிதைகளில் சிலவற்றின் பின்னணி குறித்து எழுதிய கவிமூலம்
கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் சேர்ந்து கங்கோத்ரி என்னும் புதிய தொகுப்பாக
வெளிவந்துள்ளது. கயல்கவின் பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் நூல் இது.
கங்கோத்ரி என்று அவர் தன் நூலுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பும் கவனிக்கப்பட
வேண்டியது. தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தாமிரபரணியின் ஞாபகம் உள்ள ஒருவன்,
கங்கையை விடுதலையாய், நிவர்த்தியாகப் பாவிக்கும் ஒரு இடத்தில் இத்தலைப்பை
தேர்ந்தெடுத்திருக்கிறான்.
விக்ரமாதித்யனின்
உரைநடை ஒய்யாரமான எழிலுடன் இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. இன்று
கங்கோத்ரியை வாசிக்கும் போதும் அந்த எண்ணம் மாறவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு
கைவந்திருந்த உரைநடை, அதன்பிறகு மேலதிக சாத்தியங்களை அடையவே இல்லை. தன் உரைநடையை,
சிறுநகர டவுன் பஸ் போல பராமரிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார் அண்ணாச்சி. அதற்கு
உதாரணம் தற்போது அவர் தீராநதியில் எழுதிவரும் தன்வரலாற்றுத் தொடர்.
கங்கோத்ரி தொகுப்பில்
‘வள்ளுவர் கோட்டத்துத் தேர்’ கவிதையின் பின்னணி குறித்து அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. வள்ளுவர்
கோட்டத்தை அவர் திராவிட அரசியலின், தமிழர் பண்பாட்டின் எழுச்சியாகப் பார்த்து
எழுதிய கவிதை இது. கலைஞர் கருணாநிதியின் மீதுள்ள மரியாதையையும் அந்தக் கவிதையிலும்,
கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
மனித நாகரிகம்
மேன்மை, பெருமிதம், வளர்ச்சி மற்றும் வெற்றியை எப்படி பார்க்கிறது என்பதை வள்ளுவர்
கோட்டத்து தேர் வழியாக நாம் பரிசீலிக்க முடியும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப்
பெரிய கோவில் தொடங்கி வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர்
மண்டபம், வள்ளுவர் சிலை போன்ற நினைவுச் சின்னங்கள் வரை இந்தப் பரிசீலனையை நாம்
நீட்டிக்க வேண்டிய காலம் இது. அவசர அவசரமாக கட்டப்பட்டு, தற்போது அனாதையாக
கைவிடப்பட்டிருக்கும் தலைமைச் செயலக கட்டடமும் நம் ஞாபகத்துக்கு வரவேண்டும்.
வள்ளுவர் கோட்டம்
தற்போது இருக்கும் பகுதி, முன்பு ஏரியாக இருந்து பின்பு குப்பை மேடாக மாறிய
இடத்தில் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்குத்தான், நவீன தமிழக
வரலாற்றில், பாறைகள் மலைகளிலிருந்து வெட்டப்படுவது தொடங்கியிருக்க வேண்டும்.
வள்ளுவர் கோட்டம்தான் நவீன தமிழ் சமூகத்தின், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு
தர்க்கம் சார்ந்த ‘பகுத்தறிவு’ நியாயத்தின் முதல் தொடக்கமாக இருந்திருக்க
வேண்டும். இன்று தமிழகத்தில் மலைகள் காணாமல் போனதற்கும், நீராதாரங்கள் மற்றும்
விளைநிலங்கள் காணாமல் போனதற்குமான குறியீடாக வள்ளுவர் கோட்டம் பழம்பெருமையைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு நிற்கிறது. அந்தப் பழம்பெருமையை, இன்றைய ‘வளர்ச்சியின்
பெருமிதத்தோடு’ சேர்த்து அருமையான நவீன கவிதையாக ஆக்கியுள்ளார் அண்ணாச்சி. கவிதையின்
முடிவில் விமர்சனமும் இருக்கிறது.
வள்ளுவர் கோட்டதுத்
தேர்
மேல்வானில்
முக்கால் நிலா
மிச்சம் மிஞ்சாடியாய்
நட்சத்திரங்கள்
சிதறித்தெறித்து
இருளோ சமுத்ரமோ
என்றிருக்கும்
மரநிழல்
தன்னந்தனியே நிற்கும்
தேர் அம்சமாய் அழகாய்
திருவாரூர் விட்டு
வந்ததுபோல
திராவிடர்
நாகரிகத்தின் சாட்சியமாக
சாலையில் வேகவேகமாய்
கார் ஆட்டோக்கள்
சற்றேனும்
நின்றுபார்க்க யார்தான் ஆள்
கட்டியவனுக்கே
அழைப்பில்லை அன்று
காலசுழற்சியில்
மீண்டுமவன் ஆண்டான்
கால்பரப்பி நிற்குமது
கட்டளையிடுது
கவியெழுதச் சொல்லி
பார்வைக்குப்
பெண்ணின் வடிவம்
பார்க்கப் பார்க்க
பரவசம்
நின்ற நிலையிலேயே
நின்றாலெப்படி
நெடுகவும் ரதவீதி
சுற்றி வரவேண்டும்
உற்சவர் இல்லை ஐயர்
இல்லை
ஒரு வடமுமில்லை
ஓட்டமுமில்லை
இதுமட்டும்
வீம்புக்கு இருந்த இடத்திலேயே
இருக்கும்
என்றென்றைக்கும்.
எந்த ஒரு இயக்கமாக
இருந்தாலும் உண்மையும், புத்தூக்கமும், படைப்பாற்றலும், சிந்தனையும்,
எதிர்ப்புணர்வும் அவசியம். இல்லையெனில் நின்ற நிலையிலேயே நிற்பதைத் தவிர வேறு என்ன
செய்யமுடியும். வள்ளுவர் கோட்டத்துத் தேரை நாம் கலைஞர் கருணாநிதியாகவும் உருவகிக்க
முடியும். அதற்கான எல்லா திறப்புகளையும் இக்கவிதை கொண்டுள்ளது. ஒருவகையில் தமிழ்
தன்னிலையின் வெற்றியையும், தோல்வியையும் , சமரசங்களையும், வரையறைகளையும் ஒருங்கே உருவகிப்பவராக அவர், வள்ளுவர்
கோட்டத்துத் தேர் போலவே இருக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்தின்
பக்கவாட்டில் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி, திநகர் போகும் திசையில், மர
அறைகலன்கள் விற்கப்படும் கடைவாசல் நடைபாதையில் இரண்டு பனைமரங்கள் இன்னும்
விட்டுவைக்கப்பட்டு அதிகம் கண்ணுக்குப் படாமல் நிற்கின்றன. பரபரப்பான சென்னைக்கு
நடுவே ஒரு கிராமம் ஒளிந்திருப்பதை அந்தப் பனைமரங்கள் ஞாபகப்படுத்துகின்றன. இந்தப்
பனைமரங்கள் வள்ளுவர் கோட்டத்துத் தேரை விடப் பழையவை. இதுவும் ஒருவகையில் நம் தொன்மையின்
சின்னங்கள்தான்.
Comments