Skip to main content

விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம்


ஓம்

அது குறைந்திருக்கிறது

இது குறைந்திருக்கிறது

குறைவு குறைவினின்று எழுகிறது

குறைவினின்று குறைவு எடுத்து

குறைவே எஞ்சுகிறது

ஓம்

அசாந்தி அசாந்தி அசாந்தி


இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும் கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும் ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947-ல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது. இதனால் விக்ரமாதித்யனின் அடியைத் தேடுவது மிகவும் சிரமம். இனக்குழு வாழ்வு மறைந்து முடியரசு ஸ்தாபிக்கப்படும் காலம் அதன் எல்லையாக இருக்கிறது.

ஒரு தோற்றத்தையோ காட்சியையோ படிமமாக்கி அதற்கு காலாதீத அர்த்தத்தையும், உலகளாவிய பொதுமையையும் படைப்பில் ஏற்றும் நவீனத்துவ கவிதை நம்பிக்கையின் சிறுசாயல் கூட விக்ரமாதித்யனில் படியவேயில்லை. தோற்றத்தை விலக்கி மெய்மையைக் காண விரும்பும் அறிதலின் வேட்டை மூர்க்கமும் அவரிடம் இல்லை. நவீனத்துவக் கலைமனம் தன் அனுபவங்களாலும் தன்னைச்சுற்றிய பொருட்களாலும் ஆன உலகத்தைச் சிருஷ்டித்து ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முயல்கிறது.

விக்ரமாதித்யனின் கலை இதற்கு நேரெதிரானது. தோற்றம் அழகாவும் அனுகூலமாகவும் இருக்கும்போது உவகைபூத்து சன்னதமூர்க்கத்தில் ஆராதனை செய்கிறது. தோற்றம் பயங்கரமாகும்போது புரண்டழுது மண்டியிடுகிறது. இருளுக்குப் பிறகு மெல்லிய ஒளிவரும். மென்மையான வெளிச்சம் வெயிலாகி உடலைக் காயும். பின்பு வெயில் கனிந்து உடல்குளிரும். மீண்டும் இருள்வரும் என்ற இயல்பில் பற்றுறுதி கொண்ட லௌகீக உயிரின் விவேக ஞானம் அது. இதைத்தான் விக்ரமாதித்யன் மரபு, மரபு என உரக்கச் சொல்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஒரு பின்மதியத்தில் விக்ரமாதித்யனும் நானும் நாகேஸ்ரர ராவ் பூங்காவில் அமர்ந்திருக்கிறோம். அந்தப் பூங்காவில் பவளப்பூச்சிகள் அதிகம். மாலை நடையாளர்கள் அப்போது பயிற்சியைத் தொடங்கியிருந்தனர். நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் ஒரு பவளப்பூச்சி ஜோடி ஒன்றின் மேல் ஏறிப் புணர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நான் விக்ரமாதித்யனுடன் பேசிக்கொண்டே தன்னிச்சையாக அந்த ஜோடியைப் பிரித்துவிட்டேன். இரண்டும் பிரிந்து நின்று சில நொடிகள் சமைந்திருந்ததைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சி தொடங்கியது.

அண்ணாச்சியிடம் பூச்சிகளைப் பிரித்ததைப் பற்றி குற்றவுணர்ச்சியுடன் சொன்னேன்.அவர், ‘கவலைப்படாதடா, திரும்ப சேர்ந்துரும்’ என்றார். நான் காத்திருந்தேன். நான் பிரித்துவிட்ட பவளப்பூச்சிகள் மீண்டும் தமது காதலின் சவாரியைத் தொடங்கி நகர ஆரம்பித்திருந்தன. இதுதான் மரபின் விவேக ஞானம். நூலறிவு சாராத ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் நடந்த பாதை அது.

கடவுள், பெண், வாழ்வு என்ற பிரமாண்டங்களின் முன்னிலையில் உயிர் நிகழ்த்தும் சூதாட்டத்திற்கான அழகிய சோளிகளைப்போல் விக்ரமாதித்யன் தன் கவிதைகளை மாற்றியுள்ளார். சோளிகள் குலுங்கி தரையில் பரவும் இசைக்கு ஒப்பான தனி இசைமையைத் தமது கவிதைகளுக்குள்ளும் உயிராய் புதுக்கி வைத்துள்ளார். மந்திர உச்சாடனங்கள், வார்த்தை விளையாட்டுகள், பழமொழிகள், வழக்காறுகள், உளறல்கள் என தமிழின் கலாசார ரேகைகள் இச்சோளிகளில் சேகரமாகியுள்ளன. இந்த விளையாட்டில் சிலசமயம் தர்மனாக தோற்கிறார். சகுனியாக ஜெயிக்கிறார்.

ஆக்கமும் அழிவுமான பேரியற்கை, கண்ணுக்குப் புலனாகாமல் தன்னை இயக்கும் சக்தியுடனான உறவையும் அனுசரணையையும் வேண்டிப் பரிமாற்றத்தைத் தொடங்கும்போதுதான் சமயமனம் பிறக்கிறது.

படைப்பு, வாழ்வு என்ற பிரிக்க முடியாத கணிதத்தில் இயங்கும் விக்ரமாதித்யனின் கவிதை உலகம் பிரத்யேக சமயமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் நம்பிக்கைகளும், சடங்குகளும், கடவுளரும், திருவிழாக்களும், அறங்களும் வேறு.நன்மை தீமை முயங்கி நெருப்பின் சூட்டில் இருக்கிறது அது. அவரது கவிதைகளுக்குள் உங்களுக்குத் தெரிந்த கடவுள்களும் இருப்பதால் அவற்றை ஒரு பெருஞ்சமயத்துக்குள் வகைப்படுத்திவிட முடியாது. மாமிசப்படையலோடு கற்களால் சிவனைப் பூஜிக்க வந்த வேடன் கண்ணப்பனின் சமயமும் நம்பிக்கையும்தான் விக்ரமாதித்யனுடையதும்.

விதியின் கையில் வசமாகச் சிக்கிக்கொண்ட தன்னிலை விக்ரமாதித்யன். முதலில் முரண்டி பின்பு அந்தத் தன்னிலை தன்னை விதியிடம் ஒப்புக்கொடுக்கிறது. அந்தத் தன்னிலை நன்மைக்கும் தீமைக்கும் எப்படி பொறுப்பாக முடியும். தன்னைக் கொண்டு செலுத்தும் நிகழ்ச்சிப்போக்கின் ரயிலில் பயணித்து அழுக்குகளோடும் பசியோடும் குற்றம் மற்றும் தீமையின் பனிக்காற்றில் உடல் நடுங்கிப் பயணிக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வால் ஒரு இனக்கூட்டமே துயரத்தை அனுபவிக்கும் நிலவியல் நம்முடையது. நமது பெண்கள் துயரத்தின் எண்ணற்ற அலைகளால் மோதி மோதி கடவுளின் அரூபத்தை அடைவதுபோல விக்ரமாதித்யனும் தனது பாடுகள் கவிதைகள் வழியாக இறைமையை அடைய முயல்கிறார்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் உள்ள நான் தத்தளிக்கிறது. விளிம்புக்குத் தள்ளப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அவமதிக்கப்படுகிறது. நிராசைக்குள்ளாகிறது. இயல்பு திரிய நிர்ப்பந்திக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் அது உயிரின் அழகுடன் மீண்டு நிற்கிறது. அவர் கவிதைகளில் மரணம் குறித்த பேச்சோ, அச்சமோ, போதமோ கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். லோகாதாயமும் நம்பிக்கையும் தொழில்படும் உலகில் உயிர்த்துவமும் காதலும்தானே உற்பத்தி சக்திகளாக இருக்கமுடியும். மரணம் என்னும் தத்துவப்பிரச்னையைத் தீண்டாமல்தான் அது இயங்கவும் முடியும்.

தமிழ் நவீன கவிதைப்பரப்புக்குள் நுழையும் வாசகனை வசீகரித்து நிலைக்கச் செய்யக்கூடியவை விக்ரமாதித்யனின் கவிதைகள். வெகுஜனப் பாடல் வரிகளைப் போல் இவரது கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்து தங்கள் வாழ்வின் வேறுவேறு தருணங்களில் அசைபோடும் பொதுவாசகர்களின் எண்ணிக்கை தமிழ் கவிஞர்களிலேயே இவருக்குத்தான் அதிகம் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும். பாப்லோ நெரூதாவின் அய்லா நெக்ரா தீவின் குகைச்சுவரில் காதலர்கள், பாப்லோ, உங்கள் கவிதைகளால் நாங்கள் காதலிக்கிறோம் என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன்.

இப்படியாக விக்ரமாதித்யன் தமிழ்நினைவின் ஒரு அம்சமாக நிலைகொள்ளும் காலம் இது. விக்ரமாதித்யனின் வரிகளுடன் நான் எதிர்கொள்ளும் பெண்களை, காதலை,வலிகளைக் கடந்திருக்கிறேன்.

வெட்கமும் காமமும் பருவாய்ப் பூத்திருக்கும் பெண்ணை இன்னமும் கடந்து செல்லும்போது ‘பருவைத்த முகம் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது’ என்ற இவரது கவிதை மனதில் வந்து செல்லும்.

"போன வருஷச்சாரலுக்கு

குற்றாலம் போய்

கைப்பேனா மறந்து

கால்செருப்பு தொலைந்து

வரும்வழியில்

கண்டெடுத்த

கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த

பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலியே இன்னும்"

இக்கவிதையை நான் எனது பதினெட்டாம் வயதில் படித்தேன். இதில் இருக்கும் அந்தரங்க தொனியும் ஒன்றை இழந்து ஒன்றை மீட்கும் காதலின் துயரார்ந்த விதியும் படிக்கும்போது இன்றுவரை மாயம் குறையாமல் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. எந்த மறைபொருளும் இல்லாமல் பாறை ஈரத்தில் கால் உணரும் சில்லிடலை இவர் இந்தக் கவிதையில் எப்படி கொண்டுவந்தார். இதுபோன்ற அனுபவங்கள்தான் விக்ரமாதித்யன் கவிதைகளின் பயன்பாடும் கூட.

கவிதை என்ற வடிவத்திலேயே தன் முழுவாழ்வையும் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் கொள்ளும் தோல்விகளும் அப்பட்டமாகவே வாசகன் முன் இருக்கின்றன. விதியின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில் இவர் பயணித்த உலகங்களும் அனுபவங்களும் மிக மிக உக்கிரமானவை. இல்லாமையும், கீழ்மையும் தோய்ந்த அவரது சுய அனுபவங்களை பஷீர் போல உயிர்த்துவத்துடன் எழுதத் தொடங்குவதற்கு இந்த விளக்கு விருது அவருக்கு தூண்டுதலை அளிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

(விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கட்டுரை இது)

Comments