Skip to main content

அசோகமித்திரன் எழுதிய கவிதை



கவிஞர் எஸ். வைதீஸ்வரன் சமீபத்தில் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைத் தொகுத்து 'சொல்ல நினைத்தேன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அட்டையில் அவர் வரைந்த வாட்டர் கலர் ஓவியமும் உள்ளது. அதில் 'அசோகமித்திரனும் புதுக்கவிதையும்' என்ற சுவாரசியமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அசோகமித்திரனுக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள தொடர்பு என்னவாக இருந்தது என்பதைத் தொகுத்துப் பார்த்திருக்கிறார். ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்' அசோகமித்திரனின் மதிப்பைப் பெற்ற கவிதை. அதை அவர் அயோவா பல்கலைக்கழகத்துக்கு எழுத்தாளர் பட்டறைக்குச் சென்ற போது மொழிபெயர்த்த செய்தி இந்தக் கட்டுரையில் இருக்கிறது. அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் அது ஒரு அத்தியாயமாகவே இடம்பெறுகிறது. ஆத்மாநாமைப் பற்றி அசோகமித்திரன் எழுதிய குறிப்பு என்னைக் கவர்ந்தது. 

அசோகமித்திரன் எழுதியதாக ஒரு கவிதையை எஸ். வைதீஸ்வரன் இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறார். அந்தக் கவிதை அசோகமித்திரனின் தனிமுத்திரையைக் கொண்டிருப்பதோடு இன்றைக்கும் பழைமை தோன்றாமலும் இருக்கிறது. வாழ்க்கையைக் கொடுத்த ஒரு க்ஷணத்தை, அந்த காலத்துண்டை எழுத, கவிதை என்னும் வடிவம்தான் சிறந்தது என்று தேர்ந்தெடுத்திருக்கிறான் அந்தப் புனைகதையின் சாதனையாளன். அவரது 'இன்று' நாவலில் இடம்பெறும் கவிதை இது.

அதுவும் இதுவுமாகும் வாழ்வும் மரணமுமாகும் ஒரு நாடக கணத்தில் நின்று எழுதியிருக்கிறார். அதுதானே கவிதை. அந்த மின்னதிர்வு கவிதையின் பின்பாதியில் சுர்ரென்று இருக்கிறது. திகைப்புள்ளாக்கும் அதேவேளையில் தப்பித்த விடுதலையைக் கொடுக்கும் அந்த விந்தைக் கணமும்…ஆமாம் காலமே அணு...அணுவணுவாய் காலமும்.

 

காலத்தின் நீளம்

யாருக்கு நினைவிருக்குமோ என்னவோ
மௌண்ட் ரோடு பச்சை சிவப்பாக
மாறும் விளக்கில்லாத மௌண்ட் ரோடாக
இருந்த காலமது
நடுத் தெரு போலீஸ்காரனுக்கு
இருட்டில் விளக்குத் தொப்பி
அவனும் எட்டு மணிக்குப் போய்விடுவான்
விளக்குத் தொப்பி மட்டும் இருக்கும்.
இன்னும் சிறிது நேரம்
நான் சைக்கிளில் நடுத் தெருவில்...
எதிரே வெகு வேகமாய் லாரி ஒன்று.
அதுவும் நடுத் தெருவில் ! எனக்கு
என்னென்னமோ மனச்சுமைகள்
தக்க தருணத்தில் சைக்கிளை
சிறிது ஒடித்து சுமை தாங்கி வரும்
அந்த லாரியில் மோதினால்
இருட்டில் யாருமில்லா அந்தத் தார்பரப்பில்
யாருக்குத் தெரியும்?
யாருக்குத் தெரிந்தாலென்ன?
எனக்குத் தெரியாதே?
அந்த ஒரு கணத்தில் கணமா?
அது கணத்தில் ஐந்தில் பத்தில் நூறில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தானிருக்கும்.
அந்தக் கால அணுவில்
என்னை சைக்கிளை ஒடித்துப் போகாமலிருக்க
எது செய்தது?
எது செய்ததோ...அந்தக் கால அணு
இப்போது இருபது ஆண்டுகளுக்கும்
மேல் நீண்டு விட்டது…
இன்னும் நீண்டு கொண்டே இருக்கும்.
நான் இருக்கும் வரை
நானிருக்கும் வரை காலமே அணு.


Comments