Skip to main content

நான் பிறந்த க-வி-தை 7 - விக்ரமாதித்யன் - ஆதி எலும்பு பிறப்பித்த கவிஞன்

தமிழின் முன்னோடி புதுக்கவிஞர்களுக்கும் மொத்தத் தொகுப்பு வராமல் இருந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், சிறிய தனித் தொகுப்புகளாகத்தான் புதுக்கவிதைகளை, புதுக்கவிஞர்களை நான் அறிமுகம் செய்யத் தொடங்கியிருந்தேன். சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் வெளியிட்டிருந்த ‘யாரோ ஒருவனுக்காக’, நகுலனின் ‘கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’, கல்யாண்ஜி கவிதைகள் என்ற சிறுதொகுப்புகளின் வழியாகத்தான் அவர்கள் உலகத்தின் பரிச்சயம் எனக்குக் கிடைத்தது. ஞானக்கூத்தனின் அதுவரையிலான கவிதைகளின் ஒட்டுமொத்த தொகுப்பான ‘மீண்டும் அவர்கள்’ அப்போது வந்திருந்தது. ந. பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், கலாப்ரியா மூன்று பேருக்கும் முழுத் தொகுப்புகள் கிடைத்தன. இந்தப் பின்னணியில்தான் மைநீல வண்ணத்தில் எளிமையால் வசீகரிக்கும் அட்டையுடன் விக்ரமாதித்யனின் ‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்பு எனக்குக் கிடைத்தது.

வாசகர்கள் படித்து, மனப்பாடமாகச் சொல்லக்கூடிய சிறுகவிதைகளையும் வாக்கியங்களையும் தமிழில் அதிகம் எழுதியிருப்பவராக விக்ரமாதித்யன் ஏன் இருக்கிறார் என்று இப்போது புரிகிறது. ‘ராஜாவுக்கு விதூஷகன்/ விதூஷகனுக்கு, திரும்பிப் பார்க்கையில்/ ஊர் அழகாகக் காட்சி அளிக்கிறது, பறத்தல்/ சந்தோஷமானது/ ஆனால்/ பட்டுப்பூச்சிகள்/ மல்பரி இலைகளில் தூங்கும், ஆகமம் ஆசாரம்/ தவறாத நியமம்/ தெய்வமும் ஐதிகத்தில் வாழும்’ போன்ற வரிகளை எளிமையாக அசைபோட்டுக் கொண்டே திருக்கழுக்குன்றம் பாலிடெக்னிக்குக்கு, விடுதியில் இருந்து பயணித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 

புதுக்கவிதை என்றாலே நவீனமும் சிக்கலும் என்பதாகத் தோன்றியிருந்த எனக்கு விக்ரமாதித்யனின் எளிமை, சந்தேகத்தையும் சற்று உயர்வில்லாத எண்ணத்தையுமே முதலில் அளித்தது. அதேவேளையில் சின்னச் சின்ன அழகுத் துணுக்குகளாக இருந்த அந்தக் கவிதைகள் வசீகரமாகவும் இருந்தன. 

அப்போது எனக்கும் என் இலக்கிய ரசனைக்கும் ஒரே ஒரு பாலமாகவும் அடையாளமாகவும் மாறியிருந்த ‘சுபமங்களா’ மாத இதழ் திருக்கழுக்குன்றத்தில் ஒரே ஒரு கடையில் கிடைத்து வந்தது. குற்றாலத்தில் பருவகாலம் தொடங்கியதையொட்டி, சுபமங்களாவில் வண்ணதாசன் நேர்காணலும் இரண்டாம் பக்கத்திலேயே பொங்கிப் பிரவகிக்கும் பிரதான அருவியின் புகைப்படத்துடன் விக்ரமாதித்யனின் ‘சுவடுகள்’ கவிதையும் வெளியாகியிருந்தன. இப்படித்தான் என் பூர்வீக ஊரான குற்றாலத்தின் தொன்ம அடையாளமாகக் கவிஞர் விக்ரமாதித்யனை நான் கண்டுபிடித்தேன். அவருடைய புகைப்படமும் மூலையில் சின்னதாக வெளியாகியிருந்ததாக ஞாபகம் எனக்கு.

சுவடுகள்

போனவருஷச் சாரலுக்கு
குற்றாலம் போய்
கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில்
கண்டெடுத்த
கல் வெள்ளிக்
கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலியே இன்னும்

பேச்சு மொழியின் தடம் கொண்ட செம்மை, அருவியின் ஈரம் படர்ந்த மொழியின் சொடுக்கு மற்றும் துடி, கையில் கிடைத்த சிறுபொருள் ஒன்றால் அதை நீங்கிப்போன அந்தப் பொருளுக்குரியவளை நம் மனத்திலும் பிரமாண்டமாக வரையும் கற்பனை, உணர்வுச்சம், ஆண் - பெண் ஈர்ப்பென்னும் மாறாத இயல்பின் வசீகரம் எல்லாம் சேர்ந்திருக்கும் இந்தக் கவிதையின் வழியாக விக்ரமாதித்யன் அழுத்தமாகச் சுவடு பதித்தார்.

அப்போது கவிதைகள் வழியாகவும் கதைகள் வழியாகவும் என் மீது மிகுந்த செல்வாக்கை செலுத்தியிருந்த வண்ணதாசனின் நேர்காணல் வெளிவந்த பக்கங்களை அவர் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது. அட்டைப்படத்தில் அவரது சட்டைப் பாக்கெட்டில் செருகியிருக்கும் பேனாவிலிருந்து மை கசிந்து சிறுவட்டத்தை இட்டிருக்கும். அதை எத்தனை முறை ஊன்றிப் பார்த்திருப்பேன். மதுரை காலேஜ் ஹவுஸ் விடுதியில் கல்தூண் பின்னணியில் புகைப்படக் கலைஞர் ரவிசங்கரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. நேர்காணலை முழுமையாகப் படிப்பேன். திரும்பப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். திரும்ப நேர்காணலை முழுமையாகப் படிப்பேன். திரும்பப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். காட்சி ஊடகம் அபரிமிதமாகப் பெருகாத நிலையில், ஒரு எழுத்துக் கலைஞரின் புகைப்படம் வாசகன் ஒருவனுக்குள் கொடுத்த கற்பனைகளின் விஸ்தீரணத்தை இந்தத் தலைமுறையில் உள்ள ஒருவருக்கு என்னால் புரிய வைக்கவே இயலாது. 

விக்ரமாதித்யனின் ‘சுவடுகள்’ கவிதை மிகப் பிடித்திருப்பதாக, சுந்தர ராமசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வண்ணதாசனின் மைப்புள்ளி உள்ள அந்தப் புகைப்படத்தையும் உருகி உருகி ரசித்ததை அவருக்கு விவரித்திருந்தேன்.

பேரருவி, பெருநதி அனைத்தின் ஆரம்பமும் மிக எளிமையாக, மிகச் சிறிய புள்ளியொன்றில்தான் தொடங்குகின்றன. தமிழ் புதுக்கவிதை ஒதுக்கி வைத்திருந்த பேச்சுத்தமிழ், பழம் தமிழ்க் கவிதை மரபின் செழுமை, வழக்காறுகள், பழமொழிகள், தமிழ் சினிமாப் பாடல்களின் வார்த்தை சாரம், சவடால் தன்மை, சமயப் புராணிகங்கள் எல்லாவற்றையும் எழில்களாகத் தழுவி, அவற்றை நிலைபெறவும் செய்த கவி விக்ரமாதித்யனைக் கண்டடைந்த தருணம் இப்படி எளிமையாகத்தான் தொடங்கியது. தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.

தமிழ்நாடு முழுக்கப் பயணித்தபடி இருக்கும் யாத்திரிகர், குடிகாரர், இளைய படைப்பாளிகளுக்கு நண்பர், கலகக்காரர் எனப் பல கதைகள் அவரைப் பற்றி உலவிய நிலையில், அவரது ஒரே ஒரு புகைப்படம் வழியாக அவர் குறித்த கதைகளுக்கு உருவம் கொடுத்து வைத்திருந்தேன். விக்ரமாதித்யனைப் போன்றே ஒரு சாயலில் இருக்கும் எழுத்தாளரும் ஆசிரியருமான கிருஷியை, ஒருமுறை நெல்லை பேருந்து நிலையத்தில், காலச்சுவடு பிரதிகளை விற்பனைக்குக் கொடுக்கும் கடையில் பார்த்தபோது, நீங்கள் விக்ரமாதித்யனா என்று கேட்ட ஞாபகம் இப்போது இருக்கிறது. அவர் சிகரெட்டை வாயிலிருந்து எடுத்து, “இல்லை இல்லை” என்று மறுத்துவிட்டு, “தம்பி நீங்கள் யாரு” என்று கேட்டுவிட்டு ஜோல்னாப் பை ஆடச் சென்றார். 

தேவதேவனுக்கு திருநெல்வேலி சீதாபதி லாட்ஜில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியின் முதல் நாள் காலையில், வில்ஸ் சிகரெட்டைப் புகைத்தபடி, தும்பைப்பூ போன்ற தாடியுடன், வெள்ளைச் சட்டை, வேஷ்டியுடன், தலையைத் தலையை ஆட்டிச் சிரித்தபடி விக்ரமாதித்யனே அடுத்த சில மாதங்களிலேயே நேரடியாக அறிமுகமான தருணமும் ஞாபகத்தில் உள்ளது.

சிறுகோட்டுப் பெரும்பழம்


வசந்தம் வருகிறது
வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கிறது
வாழ்வரசிகள் கூடுகிறார்கள்
ஆசைப்பட்டு

000

உன் பாதக்கொலுசு அழகு
இவன் மனசு இப்பொழுது
வைத்திரு பத்திரமாக
வருவான் சொந்தக்காரன்

000

சின்ன ராணிக்கு
என்ன குறை
குஞ்சு ராஜாவுக்கு
என்ன வந்தது

000

அணில்பிள்ளைகள் லாந்துவது
பார்த்து ரொம்ப நாளாயிற்று.

000

விக்ரமாதித்யனின் கவிதைகள், ஒரு கோயில் சுவர் ஓவியம் போல என்னில் நறுமணத்துடன் பிரமாண்டமாகப் படர்ந்த கவிதை இது. ‘இந்தியா டுடே’ இலக்கிய ஆண்டு மலரில் 1995ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் மரபிலக்கியத்தில் பரிச்சயம் இல்லாத எனக்கு ‘சிறுகோட்டுப் பெரும்பழம்’ என்ற தலைப்பும் அந்தக் கவிதையும் கொடுத்த பிரமாண்டம் மிகப் பெரியது. இப்போது அந்தக் கவிதைகளை எடுத்துப் பார்க்கும்போது, அதிகபட்சம் 100 வார்த்தைகள் கூட இல்லாத கவிதை அது. ஆனால், அந்தக் கவிதை கொடுத்த காட்சி அழகு அபூர்வமானது. வாழ்வரசிகள் என்ற வார்த்தைச் சேர்க்கை திருநெல்வேலித் தமிழிலிருந்து உருவாக்கப்பட்டது. மகராசி, வாழ்வரசி என்றெல்லாம் சொல்லும் புழக்கத்திலிருந்து வருகிறது. 

ஒரு பருவத்தின் வருகையை அதன் பூப்பைச் சொல்லி, வண்ணத்துப்பூச்சிகளில் இறங்கி, வாழ்க்கையின் பெரும் உருவகமாகப் பெண்களைச் சூட்டுகிறார் விக்ரமாதித்யன். 

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், ‘சின்ன ராணிக்கு/ என்ன குறை/ குஞ்சு ராஜாவுக்கு/ என்ன வந்தது’-ல் இருக்கிறது.

‘சிறுகோட்டுப் பெரும்பழம்’ என்ற நம் பழம்மரபு தந்த அழியாப் படிமத்தை ஆதி எலும்பாக ஏந்திய சொல்-வாழ்க்கைச் சித்திரம் இந்தக் கவிதை. இப்போது படிக்கும்போதும் இந்தக் கவிதையின் வினோதம் அலுக்கவில்லை எனக்கு. வெளிப்பாட்டிலும் உள்ளடக்கத்திலும் அர்த்தத்திலும் அழியாத சௌந்தரியத்தைச் சூடிக்கொண்டிருக்கும் கவிதை இது. எளிய வார்த்தைகள்தான்; பேச்சு போலத்தான் தொனிக்கிறது; இசைமையும் லயமும் கூடியுள்ளது; வனத்தைப் போல சமுத்திரத்தைப் போல ஊரைப் போல, வாழ்வு அதிரும் கவிதை இது.

விக்ரமாதித்யனின் ‘கிரக யுத்தம்’ தொகுதியும் அதிலுள்ள கவிதைகளும் எனக்கு இன்னமும் மனப்பாடமாக ஞாபகம் இருப்பவை. லக்ஷ்மி மணிவண்ணனின் சேமிப்பில் இருந்த, நேர்த்தியான வளவள தாளில் வெளிவந்த புத்தகம் அது. அப்போது அத்தகைய தரமான தயாரிப்பு அபூர்வம். 

பரு வைத்த முகம் பார்க்க அழகாய்த் தான் இருக்கிறது

தங்கத் தேருக்குத் தனி அலங்காரம் எதுக்கு

அம்மாவும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு அழகாக இருக்கிறார்கள்

புதுக்கவிதையில் மனப்பாடமாக ஞாபகத்தில் வாசகர்கள் சுமக்கும் அதிகபட்சமான கவிதை வரிகளை எழுதியவர் கவிஞர் விக்ரமாதித்யன்.

தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன்.

Comments

Saravana Raja said…
அருமை. செறிவாக உள்ளது.