Skip to main content

அம்மா காரைக்கால் அம்மை ஆனாள்


 கண்ணாடி முன்னால் அவள் நின்று உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழிக்கடந்தபோது, தேகம் சிலிர்த்து, அறிவு விதிர்த்து, சிறுவன் நான் சில நொடிகள் பார்த்த, செழித்திருந்த முலைகள் அல்ல இப்போது அம்மாவுடையது முழு உடலையும் துவளச் செய்திருந்த புற்றுநோயில் மெல் உடைகளையும் வேண்டாமென்று மறுத்து சாவின் வாயோடு, அம்மா தன் உதடுகளைப் பொருத்திக் குவித்திருந்தாள் அவள் அனுபவிக்கும் மரணத்திலிருந்து நான் தப்பிக்க, அவள் மரணத்தைச் சற்று தொலைவுள்ளதாக்க, அவளது மரணத்தை நான் சற்று கசப்பு குறைய விழுங்க எனக்கு மதுவின் உஷ்ணம் தேவைப்பட்டது. அம்மா இருக்கும் வீட்டிலிருந்து இரண்டு மைல்களில் குன்னத்தூர் பொற்றை மலை அடிவாரத்தில் இருக்கும் பாசன ஓடைக்கு மதுவோடும் தேர்ந்து வாங்கிய திண்பண்டக் கொறிப்புகளோடும் இருசக்கர வாகனத்தில் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டே இருந்தேன். சில மிடறுகள் மதுவுக்கு அப்பால், பகல் மயங்கி என் முன்னால் இருக்கும் மலையும் மிதக்கத் தொடங்கும். பறவைகளின் சிறகுகளுக்குள் ஊடுருவும் ஒளியைக் கூட அவதானிக்க முடியும் அமைதி அங்கே நிலவும் அந்த நாட்களில் பொற்றை மலையை என் அம்மா என்றுதான் பார்த்தேன் அதில் உள்ள வெம்மையும் மென்மையும் முட்களும் கற்களும் முயலும் சிறுநரிகளும் பொந்துகளும் நான் உள்ளாடை மட்டுமே அணிந்து கரைந்தொழுகிக் கொண்டிருக்கும் இந்த நீரோடையும் அவள் வீட்டில் மெலிந்து சருகெனப் படுத்திருப்பவளும் என் அம்மா இங்கே நெடிதாக யுகங்கள் வரலாறுகளின் தாக்குதலுக்குத் தப்பிப் பிழைத்து மலையாய் நிற்பவளும் அந்த அம்மாதான் வீட்டில் படுத்திருப்பவள் மேல் உள்ள சில்லறைக் கோபங்கள், வெறுப்புகள் எனக்கு பிரமாண்டமாய் நிற்கும் இவள் மேல் இல்லை தலை பொட்டலாகி கன்னம் ஒடுங்கி மார்பு சுருங்கி கால்கள் குச்சியாக மரணத்தின் சிறுநொடியை பெரும் நொடிகளால், தரையில் தலை பதித்து கடந்துகொண்டிருந்தாள் நான் பிறந்தது முதல் படிப்படியாகத் தொடுதல் குறைந்து இடைவெளி ஆகிவிட்ட அவள் உடலை வலிக்கிறது வலிக்கிறது என்று சொல்லிச் சொல்லி என்னைத் தொடாத இடங்களில் எல்லாம் தொடச் செய்து மறுபடியும் அவள் என்னைச் சிசுவாக்கிக் கொண்டிருந்தாள் நான் அவளிடமிருந்து அவள் வலியிலிருந்து தப்பிக்க பொற்றை மலைக்கு வந்துகொண்டேயிருந்தேன் அம்மா காரைக்கால் அம்மை ஆகிவிட்டாள் என்று என் தங்கையிடம் சொன்னேன் முக்தியும் கைலாசமும் முக்தியின் பாதையும் கைலாசத்தின் பாதையும் வலிதான் வலிதான் என்று கடைசியில் சொல்லிக் கொடுத்தாள் அம்மா

அம்மா ஆடை துறந்தாள் அதுவரை கற்ற அறிவைத் துறந்தாள் கர்ணனின் கவச குண்டலமாகக் கூடவே வைத்திருந்த தனது அலுவலகப் பை போலச் சாமர்த்தியம் துறந்தாள் அம்மா சிறுமியானாள் அம்மா குழந்தையாய் மழலைக்கு இறங்கினாள் அம்மா சின்னஞ்சிறு மீன் ஆனாள் அம்மா நுண்புழுவானாள் அப்படி அம்மா நட்சத்திரமானாள் அப்படி பெருமலையானாள் அம்மா அப்படி அகண்ட விருட்சமானாள் எம் வலியையெல்லாம் சுமந்த ஓர் உலகம் ஆனாள் 

இப்படி அம்மா வழியாக காரைக்கால் அம்மை என்னை நெருங்கிப் பரிச்சயமானாள்.    


Comments

Ranjani basu said…
இறப்பின் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் உணர வைக்கிறீர்கள் ஷங்கர். அம்மாவுக்கு உங்கள் அஞ்சலியை மலர்கள் என சொற்களில் வடித்திருக்கிறீர்கள்.அம்மை வழிநடத்தட்டும்.
அமைதிகொள்ளுங்கள் ஷங்கர்.