Skip to main content

அப்படியே ஆகட்டும் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்


இன்று

நினைவின் தோட்டத்துக்கு

தென்றல் வந்து

மலரிதழ்களைச் சிதறடிக்க

விரும்பினால்தான் என்ன?

அப்படியே சிதறடிக்கட்டும்.

 

சென்ற காலத்தின் விரிசலில்

தங்கியிருக்கும்

வலி

திரும்ப எரிவதற்கு விரும்பினால்தான் என்ன?

அப்படியே எரியட்டும்.

 

தற்போது நீ ஒரு அன்னியரைப் போலவே

நடந்துகொள்கிறாய்.

அதனால்தான் என்ன?

வா, வந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடு

நேருக்கு நேராக.

நாம் சந்திக்கும்போது

நாம் இழந்ததின் உணர்வு தீவிரமடையலாம்.

நீயும் நானும் பரிமாறும் சில வார்த்தைகள்

சொல்லப்படாத ஒவ்வொரு சொல்லின் புதிரையும்

அதிகரித்துவிடலாம்.

நாம் எந்த உறுதிமொழியைப் பற்றியும்

நினைவுகூர இயலாது

ஒடுக்குமுறை, விசுவாசத்தைப் பற்றி

பேசமுடியாது.

இறந்தகாலத்தின் தூசிகளைக் கழுவுவதற்காக

கண்ணீர் மூடிய கண்களால்

எனது கண்கள் உன்னை அணுகும்போது

நீ அதற்கு பதில் தரலாம்

அல்லது புறக்கணிக்கலாம்;

அத்துடன்

எனது கண்களைத் தவிர்க்கச் செய்யும்

அந்த வார்த்தைகளில்

நீ மீண்டும் இணையலாம்

அல்லது

அவற்றைப் புறக்கணிப்பதைத் தேரலாம். 

Comments