இரவு விருந்துகளுக்கான கருப்பு கோட்(TUXEDO SUIT) அணிந்து எனது தந்தை கையிடுக்கில் பன்றிக்குட்டியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் என்னிடம் உண்டு. அவர் ஒரு மேடை மீது நிற்கிறார். கழுத்தில் அதீத இறக்கத்தில் வெட்டப்பட விருந்து கவுன்களுடன், களுக்கென சிரித்துக் கொண்டிருக்கும் இரண்டு இளம்பெண்களோடு, அவர் அப்படத்தில் நிற்கிறார். அவரும் சிரித்துக்கொண்டிருக்கிறார். பன்றியின் வாயோ திறந்துள்ளது. ஆனால், அது சிரிப்பதுபோலத் தெரியவில்லை.
அது ஒரு புத்தாண்டு விருந்து. 1926-ம் ஆண்டு. நைட் கிளப் ஒன்றில் அவர்கள் இருந்திருக்க வேண்டும். நள்ளிரவில் விளக்குகளை அணைத்தபின்னர் அந்தப் பன்றிக்குட்டி அங்கே ஓடிவந்திருக்க வேண்டும். அங்கு ஏற்பட்ட குளறுபடியில் கதறல் ஒலி எழுப்பும் பன்றியை எனது அப்பா பிடித்திருக்க வேண்டும். தற்போது அந்தக் குட்டி அவருடையது. பரிசாகரிடம் கேட்டு வாங்கி ஒரு கயிறை அவர்கள் குடித்துக்கொண்டிருந்த மேஜையில் கட்டிவிட்டிருக்கிறார்.
அவரும் அந்த இளம்பெண்களும் கயிற்றில் கட்டப்பட்ட பன்றியும் அந்த இரவு முழுக்க வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குடித்துள்ளனர். பன்றிக்குட்டிக்கும் அவர்கள் சாம்பெய்ன் வாங்கிக் கொடுத்தனர். அதற்கு விருந்துத்தொப்பி ஒன்றையும் அணிவித்திருக்கின்றனர். 'பரிதாபப் பன்றி' என்று பல ஆண்டுகள் கழித்து எனது தந்தை சொல்லியிருக்கிறார்.
காலை புலரத் தொடங்கியபோது, ரெயில்ரோட் ஸ்டேஷக்கு அருகேயுள்ள ஒரு மலிவான விடுதியில் என் தந்தை பன்றியுடன் தனியே குடித்துக்கொண்டிருந்திருக்கிறார். பக்கத்து மேஜையில் ஒரு புதுமணத் தம்பதிக்கு குடிகாரப் பாதிரியார் ஒருவர் திருமணம் செய்யும் சடங்கைச் செய்துவைத்திருக்கிறார். தன் மேஜையில் உள்ள குத்துக்கரண்டியையும் கத்தியையும் வைத்து புதிதாக மணமானவர்களுக்கு பாதிரியார் ஆசிர்வாதம் கொடுத்துக்கொண்டிருந்த போது, அவர்களுக்கு திருமணப் பரிசாக என் தந்தை அந்தப் பன்றிக்குட்டியை வழங்கினார். பரிதாப பன்றி.
000
அத்துடன் இந்தக் கதை முடியவில்லை. 1948-ம் ஆண்டு என் தந்தை அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றிருந்தார். நாங்கள் பெல்கிரேடில் உணவுக்கு வழியின்றி எங்கள் உடைமைகளைப் பண்டமாற்று செய்துகொண்டிருந்தோம். ஒரு ஜோடி ஷூக்களைக் கொடுத்தால் ஒரு கோழி கிடைக்கும். எங்களது கடிகாரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள், கண்ணாடிக் கிண்ணங்களை பன்றி இறைச்சிக்கும், பன்றிக்கொழுப்புக்கும், கொத்திறைச்சிக்கும் மாற்றினோம்.
எனது தந்தையின் மந்திரவாதி தொப்பியை ஒரு கிழ ஜிப்சி விரும்பினார். அவருக்கு அந்த தொப்பி பொருந்தக்கூட இல்லை. அந்தத் தொப்பி அவர் கண்களை மறைத்தாலும் அவர் ஒரு வாத்தை எங்களுக்கு தொப்பிக்குப் பதிலாக அளித்தார்.
அந்தக் கிழ ஜிப்சியின் சகோதரர் ஒருவர் எங்களை சில வாரங்களுக்குப் பிறகு பார்க்க வந்தார். அவர் மிகவும் வசதியானவராகத் தெரிந்தார். முன்வரிசையில் தங்கப்பற்கள். இரண்டு கைக்கடிகாரங்களை இரண்டு கைகளிலும் கட்டியிருந்தார். கிழ ஜிப்சி எங்களிடம் இருந்த தந்தையின் கருப்பு விருந்துக் கோட்டை கவனித்திருக்க வேண்டும். நாங்கள் இதுபோல வருபவர்களை எங்கள் வீட்டுக்குள் சுற்றிப்பார்க்க அனுமதிப்போம். அவர்கள் எங்கள் மேஜைகளை, உடைகளை வைக்கும் இழுப்பறைகளைத் திறந்து பார்ப்பார்கள். எங்களால் ஆட்சேபிக்க இயலாது என்பதை அவர்கள் அறிவார்கள்.
நாங்கள் மிகுந்த பசியுடன் இருந்தோம்.
என் தந்தை 1926-ல் வாங்கிய டக்ஸிடோ கோட்டை அம்மா எடுத்துக் காண்பித்தார். அந்த மனிதன் உடனடியாக அதைப்பார்த்து அசந்துபோய்விட்டான். முதலில் ஒரு கோழியும் பின்னர் இரண்டு கோழிகளும் கொடுப்பதாகப் பேரம் பேசினான். ஏதொவொரு காரணத்தால் என் அம்மா உறுதியாக நின்றார். விடுமுறை தினங்கள் வருகின்றன. அவளுக்கு ஒரு பன்றி தேவை. ஜிப்சி அந்தக் கோரிக்கையைக் கேட்டு கோபமானான்; அல்லது கோபமானது போல நடித்தான். பன்றியெல்லாம் கொடுக்கவே முடியாதென்றான். என் அம்மாவும் விடுவதாக இல்லை.
அந்த ஜிப்சி பேரத்துக்குப் படியாமல் வெளியேறிப் போய்விட்டார். சில தினங்கள் கழித்து, மீண்டும் எங்கள் வீட்டுக்கு அந்த ஜிப்சி வந்தார். கருப்பு டக்சிடோ கோட்டைத் துடைத்து அம்மா பளபளவென்று ஆக்கியிருந்தார். நாங்கள் ஜிப்சியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவரும் எங்களைப் பார்த்தார். தனக்கு சாத்தியமேயாகாத முடிவு இதுவென்று சொல்வதைப் போல பெருமூச்சொன்றை விட்டார். அடுத்தநாளே எங்களிடம் ஒரு பன்றி வந்துசேர்ந்தது. அப்பாவுடன் புகைப்படத்தில் இருக்கும் பன்றியின் சாயலிலேயே இது இருந்தது.
Comments