Skip to main content

எனக்குக் கிடைத்த ஜெர்மன் தலைக்கவசம் – சார்லஸ் சிமிக்


உலகம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது வயலினில் கீரீச்சிடும் சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தான், குழந்தை நீரோ. நான் மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சாக்கடையில் தொண்டை வெட்டுண்டு கிடப்பவர்களை ஒருமுறை பார்த்தேன். பின்னர் ஒருநாள் பேன்கள் மண்டிய ஜெர்மன் தலைக்கவசம்  எனக்குக் கிடைத்தது. என் குடும்பத்தில் பிரபலமான கதையாகவும் அது ஆனது.

போருக்குப் பின்னரான அந்தச் சில்லிடும் பசிகொண்ட குளிர்காலங்களில் கரியடுப்பைச் சுற்றி நெருக்கமாக அமர்ந்து நள்ளிரவு வரை எல்லாரும் வருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்ததை நான் நினைவுகூர்கிறேன். அப்போது யாராவது ஒருவர் இரவின் நடுவிலோ ஆரம்பத்திலோ பேன்கள் மண்டிய எனது ஜெர்மன் தலைக்கவசத்தை நகைச்சுவைக்காக எடுத்துவந்து தருவது வாடிக்கையாக இருந்தது.

பேன்கள் மண்டிய ஜெர்மன் ஹெல்மட்டை அணிந்துகொண்டு அலையும் அளவுக்கு நான் முட்டாள் பையனாக இருந்தேன். முதியவர்கள் அந்தக் காட்சியைக் கண்டு கண்களில் நீர்வரச் சிரிப்பார்கள். பேன்கள் தலைக்கவசத்தை நிறைத்து ஊர்ந்துகொண்டிருக்கும். ஒரு குருடனால் கூட அவற்றின் ஓட்டத்தைப் பார்க்க முடியும்.

நான் எதுவும் பேசாமல் அங்கே உட்கார்ந்திருந்தேன் – நானும் ரசிப்பதைப் போல. என்ன மாதிரியான முட்டாள்கள் இவர்கள் என்று நினைத்தபடி தலையை அசைத்துக்கொண்டிருப்பேன்!

அந்த தலைக்கவசத்தை நான் அடைந்த கதை அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அதை நான் சொல்லவும் விரும்பவில்லை.

பெல்கிரேட் விடுதலையானதற்கு அடுத்த தினம் அது. என்னைவிட வயதான சில பையன்களுடன் சேர்ந்து புனித மார்க் தேவாலயத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தோம்.  இறந்த ஜெர்மானிய வீரர்களின் சடலங்கள் கிடப்பதை திடீரென்று பார்த்தோம். நாங்கள் அந்த சடலங்களை துல்லியமாகப் பார்க்க அருகே நெருங்கிப்போனோம். அவர்களிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. அவர்களது ஷூக்கள் காணாமல் போயிருந்தன. ஆனால் அங்கே ஒரு தலைக்கவசம் இருந்தது. அது சடலத்தின் தலையிலிருந்து கழன்று கீழே கிடந்தது. மற்றவர்கள் என்ன செய்தனர் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை. நான் அந்த ஹெல்மட்டுக்காக அருகில் போனேன். அந்த இறந்த மனிதனை எழுப்பிவிடக்கூடாது என்பது போல காலை மடக்கி அருகே அமர்ந்தேன். நான் கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தேன். நான் அந்த முகங்களைப் பார்த்தேனென்றாலும் அவற்றைப் பார்க்கவேயில்லை. அதைத்தவிர அந்த தருணத்தில் நடந்ததனைத்தும் எனக்கு துல்லியமான தெளிவுடன் இன்னும் உள்ளது.

000

மேலே போர் விமானங்கள் கூட்டமாக ரீங்கரித்துக் கொண்டு செல்ல நாங்கள் தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் சாப்பிடும்போது பெல்கிரேட் மீது வெடிகுண்டுகள் விழுந்தன. தொலைவில் புகை உயர்ந்து வந்ததைப் பார்த்தோம். தோட்டத்தில் உஷ்ணமாக இருந்ததால் சட்டைகளைக் கழற்றிப்போடச் சொன்னாள் அம்மா. பெரிய கத்தியைக் கொண்டு அம்மா கனிந்த தர்பூசணியை வெட்டும்போது தோன்றும் நெறுநெறுவென்ற சத்தம். இடியென்று நினைத்து நாங்கள் வெளியேவந்து மேலே பார்த்தோம். வானமோ மேகமின்றி நீலமாக இருந்தது. 

Comments