வீதிகளில் திரியும் இந்தத் தெருநாய்கள்...
பிச்சைதான் அவர்களுக்கு ஒரே விருந்து.
சாபங்கள்தான்
தெருநாய்களின் ஒரே உடைமை.
வசைகள்தான்
அவை உண்டாக்கும் விளைவு.
பகலில் களிப்போ
இரவில் ஓய்வோ கிடையாது.
அசிங்கம்தான் அவர்களின் இருப்பிடம்
சாக்கடையோரத்தில்தான் படுக்கை.
வெகுண்டால் பரஸ்பரம் மோதிக்கொள்வர்.
இந்த அற்புதத்தை நிகழ்த்த
ஒரு துண்டு ரொட்டி போதும் அவர்களுக்கு.
யாராலும் உதைக்கப்படலாம் அவர்கள்.
பசி கிறங்க வாடிச் சலிக்கப்பழகியவர்கள்.
இந்தப் பரிதாப விலங்குகள்
தலைகளை எப்போதாவது
உயர்த்திவிட்டால்
இந்தப் பிரபஞ்சத்தை சொந்தமாக்கிக்கொள்ள
தீர்மானித்துவிட்டால்
தங்கள் குரூரமான எஜமானர்களின்
எலும்புகளை கடித்துக்கூட உமிழ இயலும்.
தாங்கள் அடைந்துவிட்ட இந்த இழிநிலையைப் பற்றி
அவர்களுக்குச் சற்றே அறிவுறுத்துங்கள்.
அவர்களின் வீழ்ந்த வாலை நிமிர்த்தவாவது செய்யுங்கள்.
Comments