தாமதமாக
இரவுநடை போகும்போது
சிலவேளைகளில்
மூடப்பட்ட கசாப்புக்கடையின்
முன்னால் வந்து நிற்கிறேன்.
கைதி தனது
சுரங்கவழியை
தோண்டும்போதுள்ள ஒளியைப் போல்
கசாப்புக்கடையில்
ஒரே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.
அங்கியொன்று
கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
பெருங்கண்டங்கள், மகாநதிகள், சமுத்திரங்களின்
ரத்தம் அப்பிய வரைபடம்.
முடமுற்றவர்கள், அசடுகளைக்
குணமூட்டுவதற்காகக் கொண்டுவரும்
இருள்மண்டிய ஒரு தேவாலயத்துச்
சொரூபங்களைப் போல
கத்திகள் அங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன.
எலும்புகள் நொறுக்கப்படும்
மரத்தண்டு அங்கே வீற்றிருக்கிறது
படுகைவரை உலர்ந்துவிட்ட நதியென
சுத்தமாய் சுரண்டப்பட்ட மேல்புறம்
அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன்
அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும்
ஒரு குரல்
எனக்கு கேட்கிறது.
Comments