Skip to main content

சித்திரங்கள் கொண்ட புத்தகம் – சார்லஸ் சிமிக்


இறையியலை என் அப்பா

தபால்வழியில் படித்தார்

அப்போது அவருக்கு பரிட்சை நேரம்.

அம்மா பின்னலில் ஈடுபட்டிருந்தாள்

நான் சித்திரங்கள் நிறைந்த

ஒரு புத்தகத்துடன் 

அமைதியாக அமர்ந்திருந்தேன்

இரவு வருகிறது.

இறந்த அரசர்கள், ராணிகளின்

முகங்களைத் தொட்டுப்பார்த்த

என் கரங்கள் சில்லிடத் தொடங்குகின்றன.

 

மாடி படுக்கையறைக் கூரையில்

கருப்பு மழை அங்கி

அசைந்துகொண்டிருந்தது.

ஆனால்

அங்கே அது

என்ன செய்துகொண்டிருந்தது?

 

அம்மாவின் கையிலுள்ள

நீள் ஊசிகள்

வேகவேகமாகச் சிலுவைகளை

உண்டாக்கிக் கொண்டிருந்தன

என் தலைக்குள்ளிருந்ததைப் போன்றே

அந்தச் சிலுவைகள்

கருப்பாய் இருந்தன.

 

நான் புத்தகத்தில் திருப்பிய பக்கங்கள்

சிறகுகளைப் போல படபடத்தன.

“ஆன்மா ஒரு பறவை”

அவன் ஒருமுறை சொன்னான்.

எனது புத்தகம் முழுக்க சித்திரங்கள்

ஒரு போர் தீவிரப்பட்டது:

எனது இதயம்

குத்திக் கிழிக்கப்பட்டு

கிளைகளில்

ரத்தம் வழிய

ஈட்டிகள், வாள்கள்

ஒரு குளிர்காலத்து வனத்தை

அங்கே உண்டாக்கியிருந்தன.

Comments