Skip to main content

மெய்யான ஆண்டவரே - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்


மெய்யான ஆண்டவரே

நீங்கள் எனக்கு உத்தரவிட்டீர்கள்:

“எனது நேசத்துக்குரியவனே, இந்த உலகின் அரசன் நீ

எனது வளங்கள் எல்லாம் உனது செல்வங்கள்

நீதான் எனது உதவி அதிகாரி மற்றும் வைஸ்ராய்.”

இந்த பாவனையில் நீங்கள் என்னை அனுப்பினீர்கள்

அதற்குப் பின்னர்

எப்போதாவது என்னிடம் கேட்டிருக்கிறீர்களா:

“வாழ்க்கையை எப்படித் தாக்குப்பிடிக்கிறாய், என் நேசத்துக்குரியவனே?”

எப்போதாவது என்னிடம் விசாரித்திருக்கிறீர்களா, என் தேவனே?

இந்த உலகம் உங்கள் வைஸ்ராயை

எப்படி நடத்துகிறது?

ஒருபுறம் காவலர்களின் அச்சுறுத்தல்

இன்னொருபுறம் கங்காணிகளின் மிரட்டல்

பொறியில் மாட்டிக்கொண்ட குருவி சிறகடிப்பதைப்போல

நடுங்கும் இதயத்தைத் தாங்கியிருக்கிறது

எனது எலும்புக்கூடு.

என்ன மாதிரியான அரசனை நீங்கள்

உருவாக்கியுள்ளீர்கள் தேவனே?

ஒரு கணம்கூட சமாதானப்பட இயலாத

துயரங்களின் சங்கிலி.

என்னைப் படைத்தவனே

எந்த அரசபதவியையும் நான் விரும்பவில்லை!

சிறுதுளி கௌரவம் எனக்குப் போதும்.

இந்த மாளிகைகளும் மாடகூடங்களும்

எனது தேர்வுமல்ல.

வாழ்க்கை என்னும் நெசவுத்துணியில்

ஒரு மூலையைக் கேட்கிறேன்.

படைத்தவனே

நீ எனக்கு செவிகொடுத்தால்

நானும் உனக்குச் செவிகொடுப்பேன்,

உனது பெயரால் நான் உறுதிமொழி அளிக்கிறேன்:

“நான் ஒருபோதும் நாசவழியில் செல்லமாட்டேன்”

ஆனால் எனது கோரிக்கை

உன்னால் நிறைவேற்றப்படவில்லையெனில்

நான்

ஒரு புதிய கடவுளைத் தேடி

உறுதியாகக் கண்டடையவும் செய்வேன்.


Comments