Skip to main content

குடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சாக்ரடீஸ் - சார்லஸ் சிமிக்

 


தீவிரமான குடி இரவொன்றில் துணையாக இருக்க, ஏதோவொரு நுண்கலைக் கழகத்திலிருந்து அவர்கள் தத்துவவாதி சாக்ரடீஸின் சிலையை எடுத்துவந்திருக்கலாம்.

சாக்ரடீஸ் சிலை மிகவும் கனமாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து அதை இழுத்துக்கொண்டு வர வேண்டியிருந்தது. இப்படித்தான் சாக்ரடீஸ் சிலையோடு ஒவ்வொரு விடுதியாகச் செல்லவேண்டியிருந்தது. சாக்ரடீஸை பிரத்யேக இருக்கையில் அமரச்செய்தனர். பரிசாரகர் வரும்போது மூன்று கிளாஸ்கள் ஆர்டர் செய்தனர்.

சாக்ரடீஸ் மதுக்கோப்பையுடன் ஞானம் சுரக்க அமர்ந்திருந்தார். பின்னர் மலிவுவிலை மதுவிடுதி ஒன்றில் ஜிப்சிகள் இசைக்க, சாக்ரடீஸூடன் இரண்டு குடிகாரிகளும் சேர்ந்து ஆடினார்கள். அவர்களுக்கு புதிய நண்பரை மிகவும்  பிடித்துவிட்டது. அவர்கள் சாக்ரடீஸுக்கு முத்தம் கொடுத்தபடி ஒயினையும் குடிக்கவைத்தனர்.

சாக்ரடீஸ் வாயெல்லாம் சிவப்பாகிவிட்டது. வாய் உடைந்து வழிவது போன்ற சிவப்பு.

விடியல் வந்தவுடன் டிராம் பாதை நிறுத்தமொன்றில் சாக்ரடீஸைக் கைவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

2-ம் எண் கொண்ட டிராம் வண்டியின் கதவுகள் திறக்கின்றன. உறக்கம் கவிழ்ந்த முகங்களுடன் இறங்கும் தொழிற்சாலைப் பணியாளர்களை, அந்த கிரேக்க தத்துவஞானி குருட்டுவெறிப்புடன் பார்த்தபடி நடைபாதையில் காத்திருந்தார் – யாராவது எடுத்துச் செல்லலாம் என்ற ஏக்கத்துடன்.

Comments