நெடிய தமிழ் மரபின் நினைவுகளைச் சுவடுகளாகக் கொண்டு, கட்டற்ற கண்களோடு, பல இன, மொழி, தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் அடையாளங்களும், பண்பாடுகளும் சேர்ந்த சமைக்கப்பட்ட உலகப் பெருநகர் வீதியில் மனத்தடை இல்லாமல், வேடிக்கை பார்த்தபடி சுதந்திரமாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தவள் காணும் காட்சிகள் இந்தக் கவிதைகள். ஊரிலிருந்து பிழைப்புக்காக வந்து நகரத்தில் சௌகரியமான வாழ்க்கையையும் தன்னிறையையும் அனுபவித்துக் கொண்டே பிறந்த பூர்விகத்தைப் பற்றி, தாய், தந்தையரைப் பற்றி, தெருவைப் பற்றி ஏக்கக் கவிதைகள் ஒன்றுகூட இத்தொகுப்பில் இல்லை என்பதுதான் எனது உற்சாகத்துக்கு முதன்மையான காரணம். இன்பா, சர்வசாதாரணமாக தஞ்சாவூரை மட்டுமின்றி எல்லைகளைக் கடந்துவிடுகிறார். 'கருப்புக் கடவுச்சீட்டில் ஓட்டையிடும்போது’, தேசப்பிதாவின் நெஞ்சில் ஏற்பட்ட வலியை சற்றே பரிவுடன் அனுபவித்து விசாரித்துவிட்டு, கல்லாங் ஆற்றின் கரையில் நாடுமாறியாக சகஜமாக ஆகிவிடுகிறார்.
மரபுக் கவிதையோடு பரிச்சயம் இருந்தாலும் அந்த மரபைப் புனிதமாகவோ, பெருமிதமாகவோ அணுகும் மனோபாவம் இல்லாததே இன்பாவை நவீன குணம் கொண்ட கவிஞர் ஆக்குகிறது. உலகளாவிய தளத்தில் நின்றுகொண்டு, தமிழ் வாழ்க்கையின் சமகால நிதர்சனத்தை விமர்சிப்பதற்கும் பரிகசிப்பதற்கும் தமிழின் பெரும் நாவலாசிரியரான ப. சிங்காரத்துக்கு அவரது தொல் இலக்கியப் பரிச்சயம் கூடுதலாக உதவியே செய்கிறது.
நிதர்சனத்தைப் பார்ப்பதற்கு சுயகாமம், சுயபெருமிதம் இல்லாமல் இருத்தல் அவசியம். பெரும்பாலான சமகால பெண்பால் கவிஞர்கள் தன் காமத்தைச் சுற்றியே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி, புற உலகத்தைக் காண்பதற்கு இயலாமல், சுயபிம்பத்தின் சிறையில் சிக்கியுள்ள நிலையில், வெளியை, புறத்தை தாயுமானவர் உரைப்பதுபோல இந்திரஜால நிகராக, வேடிக்கையுடன் பார்க்கும் இயல்பு இன்பாவுக்கு வாய்த்துள்ளது.
உலகளாவிய பெருநகர் வெளியில் கேட்ட சப்தங்கள், பார்க்கும் மனிதர்கள், விலங்குகள், இடங்கள், பொருள்கள் வழியாக ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளார். அந்த தேசத்தின் வண்ணமயமான காஸ்மாபொலிட்டன் சாலையின் நாளத்தில் ஓடும் ரத்தத்தின் உஷ்ணம் ஒருவன் அல்லது ஒருத்தியின் காமத்தினால் ஆனது அல்ல. ஒட்டுமொத்த மனிதர்களின் வேட்கையும் தனிமையும் அபிலாஷைகளும் தோல்விகளும் உழைப்பும் வியர்வையும் நிறைந்த காமம்தான் இன்பாவின் தேசத்தை இரவும் பகலும் இயங்க வைக்கிறது.
சிங்கப்பூரின் உணவுகள், ஆண், பெண்களின் அக- புற முகங்கள், பாலியல் நடத்தைகள், உறவுகள், எந்த மனத்தடையும் இல்லாமல் இன்பாவின் கவிதைகள் சுயபிம்பம் ஏறாமல் நமக்குப் பரிச்சயமாகின்றன. சிங்கப்பூரின் ஈரச்சந்தையில் நீரில் இன்னமும் உயிரோடு இருக்கும் உயிரின் கண்கள் நம்மைப் பார்க்கும் பாவனையை, இன்பா மேற்கொள்கிறார். இந்த வேடிக்கையை இந்தப் பாவனையை அவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். வேடிக்கை என்பது தமிழில் இரண்டு அர்த்தத்தில் தொழில்படுவது. ஒன்று பார்ப்பதைக் குறிப்பது; இன்னொன்று ஆக்கத்தைக் குறிப்பது. இந்த இரண்டு அம்சங்களும் இன்பாவிடம் இயல்பாகவே இருக்கின்றன.
இன, மத, மொழி அடையாளங்கள் சார்ந்து மோதல்களும் முரண்பாடுகளும் கூர்மை பெற்றிருக்கும் ஒரு காலகட்டத்தில் இன்றைக்குள்ள ஒரு தேசம் எப்படி இருக்கவேண்டுமென்பது குறித்து இன்பாவின் கவிதைகள் யோசிக்க வைத்தன. அடையாளம், மரபு, பண்பாடு, சாதி, பழக்கவழக்கங்களின் சுமைகள் இல்லாமல், வாழ்க்கையை அதன் மாற்றங்களை, அதன் இன்றைய தளத்தில் சந்திக்க இயலக்கூடிய, தன்னிறைவாக எல்லாரும் சேர்ந்து வாழ இயலக்கூடிய ஒரு நிலப்பரப்புதான் ஒருவரது தேசமாக இருக்க முடியும். எத்தனையோ இடங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் தேசமாக இப்படித்தான் அமெரிக்கா முன்பு உருவகிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கனவில் எத்தனையோ சேதாரம் ஏற்பட்ட பிறகும், அந்த விழுமியங்கள் இன்னமும் மெலிதாகவாவது, ஒருதரப்பு அமெரிக்கர்களால் தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசமாக அமெரிக்காவே உள்ளது.
அந்தப் பின்னணியில், ஒரு மனிதன் அல்லது ஒரு மனுஷி தன்னிறைவும் விடுதலையும் பெற்றதாக உணரும் இடம்தான் தேசம் என்பதை இன்பா இந்தக் கவிதைகளின் மூலம் உணர்த்துகிறார் - அது நான்கு மேஜைகளையே வைக்க முடியக்கூடிய அளவுள்ள தீவு என்றாலும் சரி- அந்த தேசம் அகத்தில்தான் முதலில் நிகழ்கிறது. அகத்தில் உள்ள தேசம் புறத்தில் உள்ள தேசத்தோடு நடத்தும் ஊடாடலும் உரையாடலும் தான் இன்பாவின் கவிதைகள். பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களே சேர்ந்து உருவாக்கிய சிங்கப்பூர் என்ற தேசத்தின் எல்லைகளும் வரையறைகளும் பெருமூச்சுகளும் சின்னங்களும் இப்படித்தான் இன்பாவின் கவிதைகளில் இயல்பாகத் தோன்றிவிடுகின்றன. ஒரு குட்டி தேசத்தில், அங்குள்ள ஈரச்சந்தையில் சந்திக்கும் பல்லுயிர்களையும் தன் பெரும் கூடையில் சேகரித்துக் கொண்டே, தேசிய கவியாக உருவாவது எளிதுபோல.
பாரதிதாசன் மரபில் கிளைத்து ஒருவர் நவீன கவிதையின் புதிய சாத்தியங்களுக்குத் தகவமைக்க முடியும் என்ற நம்பிக்கையான செய்தியை இன்பாவின் கவிதைகள் எனக்குத் தந்திருக்கின்றன.
இந்தச் சாலையைக் கடப்பது எளிதல்ல
- இன்பா
இந்தச் சாலையை எதிர்கொள்வது
அவ்வளவு கடினமாக இருக்கிறது
தெருவுக்குள் நுழையும்போதே
கால்கள் தடுமாறுகின்றன
எதிரில் வருபவனைக் கண்டால்
காதல் வயப்பட்டது போல் தெரிகிறது
நேற்றிரவு இங்கிவன் உறங்கியிருக்கக்கூடும்
பெருங்காமத்தை இங்கே கவிழ்த்திருக்கக்கூடும்
ஓரிரவுக் காதலனாக இருந்திருக்கக்கூடும்
திருப்தி பெறாத ஆண்மை
தீர்ந்திருக்கக்கூடும்
மோகத்தில் உளறிய வார்த்தைகள்
தெருவெங்கும் சிதறிக்கிடக்கக்கூடும்
முத்தங்கள் கலந்த பெருங்காற்று
முகத்தில் வீசியடிக்கக்கூடும்
கசங்கிய ஆடைகளுக்கு
மல்லிகைத் திரவியம் பூசியிருக்கக்கூடும்
தெருவோரத் தூணில் சாய்ந்தபடி
தளிருடல்கள் வழியெங்கும் நிற்கின்றன.
பகலில்கூட எங்காவது
இரண்டு முதுகெலும்புகள் சடசடவென
முணங்கிக்கொண்டிருக்கும் சாலை இது
இந்த சாலையில்
புழுக்கத்தை
இறுக்கத்தை
தனிமையை
விலக்கி விட்டு
திரும்பிச் செல்கிறார்கள்
சிறுச்சிறு சந்தோஷங்கள்
முடிப்பதும் அவிழ்ப்பதுமாய்
தனது நாடகத்தை
நிகழ்த்திக்கொண்டிருக்கும்
இந்தச் சாலையில் நடப்பது
இந்தச் சாலையைக் கடப்பது
அவ்வளவு எளிதல்ல.
Comments
வேடிக்கைபார்த்தல் எனும் முறையில்
விவரித்து இன்பாவின் கவிதைகளுக்கு ஒருபுதிய முகத்தை அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை
வாழ்த்துகள் கவிஞருக்கும் ஷங்கருக்கும்