Skip to main content

குழந்தைகள் கதை எப்போது பெரியவர்களுக்கான கதையாகிறது?



குழந்தைகள் கதை எப்போது பெரியவர்களின் கதையாக மாறுகிறது என்கிற கேள்வி திடீரென்று சில நாட்களாக எனக்குள் இருந்து கொண்டிருந்தது. 

மையநீரோட்ட கார்ப்பரேட் ஆன்மிகவாதிகள், தன்னம்பிக்கை எழுத்தாளர்கள், மேலாண்மைத் திறனைச் சொல்லிக் கொடுப்பவர்கள் பெரும்பாலான பேர், குழந்தைகளுக்கான கதைகளைத் தான் பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பெரும்பான்மையான பெரியவர்களுக்கு, குழந்தைகளாக இருப்பதில் தான் ஈடுபாடும் இருக்கிறது. தஸ்தயவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் 'விசாரணை அதிகாரி' அத்தியாயத்தில் சாத்தானின் தரப்பாக வரும் விசாரணை அதிகாரியான திருச்சபை பாதிரியார், மனிதர்களுக்கு குழந்தைகளுக்கான பாடல்களும் கூட்டாக விழுந்து வணங்குவதற்கு ஒரு சொரூபமும் தான் தேவை, இயேசு கருதியது போல, நிபந்தனையற்ற சுதந்திரம் அல்ல என்று வாதிடுகிறார். கிட்டத்தட்ட அதுவே சரிதான் என்று தோன்றுகிறது. 

நமது பிரதமர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி குழந்தைகளுக்கான கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லும் பாணியில்தானே வெவ்வேறு உடைகளில் வெவ்வேறு தலைப்பாகைகளில் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கதைகளில் மரணமே இடம்பெறுவதில்லை. 

குழந்தைகள் கதை எப்போது பெரியவர்களின் கதையாக மாறுகிறது. 

உறவும் காமமும் குரோதமும் பிரிவும் மரணமும் எந்தக் கதையில் தென்படுகிறதோ அந்தக் கதை பெரியவர்களுக்கான கதையாக மாறிவிடுகிறது.

ரமணர் மிகச் சன்னமாகவே காமத்தைப் பற்றிப் பேசுகிறார். நிசர்கதத்த மகராஜ், குதிரை உன் தோட்டத்தில் ஆற்றலாக மேயட்டும், அதன் மேல் ஏறாதே என்கிறார். ஜே. கிருஷ்ணமூர்த்தி காமத்தைப் பற்றிப் பேசும்போதே அதைக் கடப்பதற்கான பைபாசில் வண்டியைச் செலுத்திவிடுகிறார். ஓஷோவுக்கு மனத்தடையே இல்லை. ஆனால் ஒரு குழந்தை இலையில் விடப்பட்ட பாயாசத்தை அளைந்து சீரழிப்பதைப் போல ரொமாண்டிக்காக அதை ஆக்கிக் கூத்தாடிக் கூத்தாடிக் குழப்பிப் போட்டுடைத்து விடுகிறார். 

உறவும் காமமும் பிரிவும் மரணமும் கதையை உண்மையாக்கி விடுகிறது. தனது சகோதரனின் மரணமும் அது தந்த தாங்கமுடியாத பிரிவும் தான் ஜே. கிருஷ்ணமூர்த்தியை லோக குருவாக ஆகாமல், மடாதிபதியாகாமல் நமது உண்மையையையும் நமது துயரத்தையும் நெருங்கமுடிந்த மனிதன் ஆக்கியது. 

மரணம் ஒரு குழந்தைக் கதையை எப்படி பெரியவர் கதையாக்குகிறது என்பதற்கான பதில் நித்ய சைதன்ய யதியின் சின்னச் சின்ன ஞானங்கள் புத்தகத்தில் உள்ள கதையின் வழியாக எனக்குக் கிடைத்தது. 

தினமும் அவன் வருவான். சரியாகக் காலை ஐந்தரை மணிக்கு, ஆறரை வரை என் தோட்டத்தின் பூச்செடிகளின் கிளைகளிலோ வேலிக்கம்பிலோ வந்து அமர்ந்திருப்பான். எவ்வளவு சின்னஞ்சிறிய உடல் அவனுக்கு. செக்...செக்...ட்வீட் என்று அவன் அழைப்பான். நீண்டநேரம் அப்படி அழைத்தான்தான் அவன் தோழி விழித்தெழுந்து வருவாள். அவளுக்குப் பாட்டுப் பாடுவதைவிட, தன் தோழனின் முகத்தைப் பார்த்தபடி சிறகசைப்பதும் வாலாட்டுவதும்தான் பிடிக்கும். அவன் அமர்ந்திருக்கும் கிளையில் அமர்ந்து வட்டம் சுற்றுவாள், பறந்து உயர்வாள், சச்சரவிட்டுச் செல்வதுபோலப் போய்விடுவாள்.

திரும்பிவந்து ஆண்பறவையை உரசிக்கொண்டு அமர்வாள். அவன் பாடுவதை நிறுத்தும்போது மென்மையாக அவன் வாயோடு வாய் சேர்ப்பாள். லேசாகக் கொத்துவாள். மீண்டும் வட்டம் சுழல்வாள். அவன் உத்வேகத்துடன் பாடுவான் - செக்...செக்...ட்வீட்...ட்வீட்...ட்வீட்…

அப்போதெல்லாம் என் மேசையின் பக்கத்தில் ஒரு கூட்டாளி இருப்பாள். பணிவண்பும் அழகும் கொண்ட புஸ்ஸி என்னும் பூனை. அவள் வருவது காலையில் வழக்கமாகக் கிடைக்கும் பிஸ்கட்டுகளுக்காகவும் பாலுக்காகவும்தான். அவற்றை நான் மறக்காமல் கொடுப்பேன். அவள் சாப்பிட்டுவிட்டு நன்றிகாட்டி வெளியே செல்வாள். இன்று காலையிலும் அவள் பக்கத்தில் இருந்தாள்.

இன்று காலையில் குளித்துவிட்டு நாங்கள் காலைப் பிரார்த்தனைக்கு வந்தபோது பார்த்தது என்ன? எங்கள் அருமைப் பறவை, தினமும் பாட்டுப் பாடி எங்களை எழுப்பும் தோழன் சிதறிக்கிடக்கிறான். புஸ்ஸி வாயை நக்கிக்கொண்டு, அங்கே கிடந்த மென்சிறகுகளை மீண்டும் ஒருமுறை முகர்ந்து பார்த்தாள்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மாநிர் ரஹிம்

அல்- ஹம்துலில்லாஹிரப்பில் ஆல்அமீன்

அர்ரஹமான் - ர் - ரஹீம்.

பிரார்த்தனை இந்த இடத்துக்கு வந்தபோது துக்கத்தால் என் குரல் தடுமாறியது.

“ரஹிம்"

என் மனம் அந்த இடத்திலேயே ஒரு சுழலில் அகப்பட்டது போல,

"ரஹ்மாநிர் ரஹிம்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. கருணை வள்ளலும் கனிவு நிரம்பியவனுமான அல்லாஹூ தன் படைப்புகளான சிறு பறவையையும் அதை திருப்தியாகத் தின்ற புஸ்ஸியையும் ஒருபோல நேசிப்பதன் விளங்காப் பொருள்பற்றி இன்று முழுதும் நான் தியானித்திருந்தேன்.

குழந்தைகள் வழக்கமான பிரார்த்தனை சொன்னார்கள்.

அப்போது அதன் ஜோடிப்பறவை என் கண்ணாடிச் சன்னலின் ஒரு மூலையில் வந்தமர்ந்து மெல்லிய குரலில் செக்...செக்...செக்...என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்ல முயல்கிறாள் என்று கடவுளுக்குத் தெரியலாம் என்று நான் ஆறுதல் கொண்டேன்.       

Comments

உங்களை அது கடவுளாக நினைத்திருக்கக் கூடும். உங்களின் ஆறுதலே அதன் மகிழ்வாக இருக்கக் கூடும்.