முழுக்க விபரீதங்களின் காட்சிகளைக் கொண்ட அபியின் இன்னொரு கவிதை இது. ஆனால், மொத்தக் கவிதை கொடுக்கும் அனுபவமோ நேரெதிரானது. நூறு வயது விஷப்பூச்சிகள், வெயிலைக் கிழிக்கும் முள்செடிகள், விறைத்துக் கிடக்கும் எரிந்த குழந்தைகளின் சடலங்கள், வீதிகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் நரபலி தேவதைகளின் பழைய நடன மண்டபம், நீச்சல் குளம், எலும்புகளின் மாபெரும் நூலகம் ஆகியவை இருக்கும் அந்தப் பாழடைந்த சிற்றூருக்குப் போகவேண்டுமென்பது போல உள்ளது. ஆத்மாநாமின் 'என்றொரு அமைப்பு' கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.
அபியின் 'எலும்புகளின் நூலகம்' கவிதை, என்னை அர்த்தப்படுத்த வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது. அதில் இருக்கும் விபரீதச் சித்திரங்களோ, அதில் இருக்கும் விஷப்பூச்சிகளோ நமக்குப் பரிச்சயமான சமூகத்தில் உள்ள விபரீதமோ, விஷமோ அல்ல என்பது மட்டும் உறுதி.
‘மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் தூரதூர தேசங்களின் ரத்தம் வந்து பாய்ந்து கொண்டிருக்கிறது' என்று சொல்லும்போது 'தூரதூர தேசங்களின் ரத்தம்' என்பது என்ன என்ற கேள்வியை மட்டும் எழுப்பிக் கொள்கிறேன்.
பதில் உடனடியாக வேண்டாம் என்பதுபோலத் தான் உள்ளது. தேசத்தின் ரத்தம் என்பதில் என்ன? என்ன? என்ன? என்னவெல்லாம் உள்ளது.
கேள்வி மிகவும் சுவாரசியமாக, மிகப்பெரிய கேள்வியாக சுவாரசியமாக எனக்குத் தென்படுகிறது. ஆமைமுதுகு போல் சாலை இருந்தால் அந்த சாலையில் விரைந்து செல்லமுடியுமா. அது ஆமையின் குணத்தைக் கொண்டிருக்குமா?
சாலை எப்போதும் ஊராமல் ஒரே இடத்தில்தானே நின்றுகொண்டிருக்கிறது.
மௌனியின் முத்திரை வெளிப்பாடான 'பாழ்பட்ட வசீகரம்' ஞாபகத்துக்கு வருகிறது.
பாழடைந்த அந்தச் சிற்றூரில் எலும்புகளின் நூலகத்தில் யார் படிக்கிறார்கள் புத்தகங்களை?
எலும்புகளின் நூலகம்
பாழடைந்த சிற்றூர் அது
விளையாட்டாய்
ஒரு கல்லைப் பெயர்க்க
அடியில் ஊர்ந்தன
நூறு வயது
விஷப்பூச்சிகள்
வெறும்
முள்செடி விரிப்பின் மீது
வெயில் கிழிந்து கொண்டிருந்தது
எரிந்த குழந்தைகளின்
உடல் விறைப்பைப்
பார்த்துக் கொண்டிருந்தன
கரிந்த சுவர்கள்
மொழிகளை மறந்துவிட்ட
மனசுக்குள்
தூரதூர தேசங்களின்
ரத்தம் வந்து
பாய்ந்து கொண்டிருக்கிறது
விளையாட்டாய்
வீதிகளைப் புரட்டியபோது
அடியில்
நரபலி தேவதைகளின்
நடன மண்டபம்
நீச்சல் குளம்
ஆமைமுதுகு போல் சாலை
எலும்புகளின்
மிகப்பெரிய நூலகம்...
Comments