அபியின் 'தெருவில் நாம்' கவிதையில் முகம், உடல் இல்லை. முகங்கள், உடல்களின் தொகுதி சினிமாவாக விரிகிறது. தொகுதியாகும் போது தனியியல்பு அனைத்தும் பிரமாண்டம் கொள்கிறது.
தீர்மானத்தின் வலு கொண்டு வரையப்பட்ட கவிதை இது. வருவோம் போவோமாய்த் தெருவை நிறைப்போம் என்று சொல்லும் ஆட்கள் அல்ல செயல்களாகத் தெரிகிறது.
தெரு கனத்துத் திகைக்க அவர்கள் நிறைகிறார்கள், ஏணியில் ஏறத்தொடங்கும் சித்திரம் நம்முன்னர் வரையப்படுகிறது. வாசல், திண்ணை, படிகளில் வான்வெளி முழுவதும் நெரிந்து பெருகுவோம் என்ற தீர்மானம் அந்தச் செயலில் இருக்கிறது.
பிம்பங்களும் குரல்களும் பார்வைகளும் எண்ணங்களும் பாவனைகளும் சாயைகளுமாய் அடையாளம் குலையாது அடர்ந்து செறிவோம் என்று சொல்லும்போது முரண் ஏற்படுகிறது. இத்தனையும் சேர்ந்தபிறகும் மிஞ்சும் சுயம்தான் எது அய்யா?
காலம் ஒற்றியெடுத்துப் பரிமாணங்களுள் அடைத்த நகல்கள் அழித்த பின்னரும் அழியாத அசல்களாகத் தெருவை நிறைக்கும் அந்த ஆசை எந்த சுயத்தின் ஆசை?
கேள்விகள் தோள்களில் பற்றித் தொடரத்தான் செய்யும் ஆனாலும் எங்கும் இல்லாதிருந்து எங்கும் வருவதும் போவதுமாய் தெருவை நிறைக்கத்தான் வேண்டும்.
பாற்கடலில் அமுது எடுக்கும் சித்திரம் கவிதையின் இறுதியில் வருகிறது. அங்கேயும் திரிதல் நடக்கிறது.
நஞ்சின் திரிதல் அது. திளைப்பு தான் நஞ்சாகத் திரிகிறதா?
போக்கும் வரவும் இல்லாத புண்ணியர்கள் அல்ல அந்தக் கவிதையில் வருபவர்கள். அவர்களிடம் நமதின் சாயலும் உள்ளது. போக்கும் வரவும் அந்த வழியில் பிம்பங்களும் குரல்களும் பார்வைகளும் எண்ணங்களும் பாவனைகளும் சாயைகளும் நெரிக்கும்போதும் அடையாளம் குலையாதிருக்க ஏங்கும் அ-புண்ணியர்களின் பயங்கர கணங்கள் வன்மையாகத் தெரியும் படம் இந்தக் கவிதை.
இந்தக் கவிதையில் கவிதையைச் சொல்லும் தரப்புக்கு மோதுவதற்கும் சேருவதற்கும் இன்னொரு தரப்பு ஒன்று உள்ளது. அவர்களுக்கு முகம் உள்ளது. அவர்கள் யார் என்று எனக்குத் தெளியவில்லை.
தெருவில் நாம்
வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்
தெரு கனத்துத் திகைக்க
படிகளில்
வான்வெளி முழுவதும்
நெரிந்து பெருகுவோம்
பிம்பங்களும் குரல்களும்
பார்வைகளும் எண்ணங்களும்
பாவனைகளும் சாயைகளுமாய்
அடையாளம் குலையாது
அடர்ந்து செறிவோம்
ஜன்னல் கதவை
ஒருக்களித்துத் திறப்போர்
முகங்களில் அறைவோம்
தெருவிலிறங்கி நடக்கத் துணிவோரை
மொய்த்துக் கொண்டு
பரவச மூட்டுவோம்
காலம் ஒற்றியெடுத்துப்
பரிமாணங்களுக்குள் அடைத்த
நகல்கள் அழிந்த பின்னும்
அழியா அசல்களாய்த்
தெருவை நிறைப்போம்
தெரு கனத்துத் திகைத்து அமிழ
கேள்விகளை
உதறி விசிறி விடுவோம்
நிரந்தரமாக அவை
தோள்களின் மீது
தொற்றித் தொடர
எங்கும் இல்லாதிருந்து
எங்கும்
வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்
தீர்மானங்களைக்
கடைந்து எடுத்துவிடாத
சுழற்சி
திளைப்பு என்றில்லாத
திரிதலில்
தெருவை நிறைப்போம்
Comments