அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளில் பரட்டை என்ற தலைப்பும் பரட்டை என்பதற்கு சேர்க்கும் உருவமும் அர்த்தங்களும் என்னை மிகவும் ஈர்த்தது.
புழுதி பறக்க அடிக்கும் ஆடிமாதக் காலம் நெறுநெறுவென்று வெளிப்படுகிறது அபியிடம்.
வெளி வீடு ஆகி கூரை வீட்டின் அரண் ஆக ஆன அர்த்தத்தை மீண்டும் ஆடிமாதக் காற்று கலைக்கிறது; இங்கே அது விபரீதமாக, வாழ்வின் பறிபோதலாக அல்ல. கூரைகளும் சுவர்களும் எங்கோ சரித்திரத்தின் சுழிப்பில் சிறையாகி விட்டது போலும். கூரைகளின் கீழ் நெரிந்து கிடந்தவை அதுவரை பேச முடியாததை பேசியிராததைப் பேசிப் பறக்கிறது.
எது நாம் காணும் காட்சியை, நம் மனத்தில் நிலையென்று நினைத்த காட்சியை மாற்றுகிறதோ தலைகீழாக ஆக்குகிறதோ அங்கே நாமும் தலைகீழாகிறோம் சுழல்கிறோம்.
ஒட்டுமொத்த இடத்தை நினைவை அதைச் சுற்றி நாம் எழுப்பிய வரலாற்றை, தேசத்தை புழுதித் துகள்களாக மாற்றும் ஆக்கும் காற்று அபியின் காற்று. தன் நிலத்தை இழந்த துகளுக்கு இருட்டைத் தவிர விரிக்க ஒன்றுமில்லை.
எல்லாம் பரத்திப் போடப்படும்போது, அங்கே பரட்டை தோன்றுகிறது. பரட்டை என்பது சமூக அர்த்தத்தில் வெளியிலிருப்பவன், விலக்கத்துக்குள்ளாகும் இயல்புகளைக் கொண்டவன், மையத்துக்கு வருவதற்கான பண்பட்ட நடத்தைகள் இல்லாததை வாராத படியாத பரத்திய தலைமுடி மூலமே தெரியப்படுத்துபவன்.
ஆடிக் காற்றின் புழுதியோ எல்லாரையும் எல்லா நிலங்களையும் சில கணங்கள் பரட்டையாக்குகிறது. பரட்டைக் காற்றோடு வறண்ட மாலையும் சேர்ந்து கொள்கிறது.
எனது ஊரில் சிவந்திப்பட்டி மலையின் பின்னணியில் ரோஜா நிறப் பின்னணியில் அடிக்கும் புழுதிக் காற்றும் என்னையும் தன்னையும் சுழற்றும் நிலமும் ஞாபகத்துக்கு வருகிறது.
முன்பின்கள் கலைந்து
முறையென்று ஆகிய பரப்பின் மீது
சொல் கலைந்து வீசிய சூறையை
அளைந்து பேசுவதற்கா?
வரமாட்டேன்
முன்பின்னாக எவை கலைகின்றன? எண்ணத்தையும் நினைவுகளையும் கருத்துகளையும் அர்த்தங்களையும் தவிர கலைவதற்கு நம்மிடம் என்ன இருக்கின்றன? வரமாட்டேன் போ என்று சொல்வது மறுப்பாகத் தெரியவில்லை. ஊடலாகவும் அன்பின் இசலல் உறவாகவும் தெரிகிறது. ஆனால் அந்தப் பரட்டையோடு பேசும் பேச்சு நாம் அறிந்த அர்த்தமுள்ள பேச்சு அல்ல. சுத்தமாய் வெறுமையாய்க் குருட்டொலிகளால் ஆன பேச்சாம் அது.
பரட்டை என்ற உருவத்துக்கு நாம் கொடுத்திருக்கும் இதுவரையிலான அர்த்தம் மாறுகிறது. பரட்டை என்பதின் மேல் பரிவான புரிதலை நோக்கி நமது பார்வையும் விரிகிறது.
அங்கே எப்போதும் கலையாதிருக்கும் ஒரு கருமணல் விரிவைக் காணத் தருகிறார். அங்கே ஒலி, வெளியின் மீது அலாதியான தாக்கத்தைச் செலுத்துகிறது. வெடியோசை ஒரு இடத்தின் பொருண்மையை மாற்றுகிறதுதானே.
ஆனால் இந்தக் குருட்டொலிக்கு எங்கிருந்து அப்படிப்பட்ட சக்தி வந்தது.
மாலை -- பரட்டை
நெறுநெறுவென்று பேசும்
ஆடிமாதம்
கூரைகள் பறக்கும்; கூடவே
கூரைகளின்கீழ் நெரிந்து கிடந்தவை
என்றும் பேசியிராததைப்
பேசிப் பறக்கும்
செம்புழுதி கலந்து சிவக்கும் என்
சுழற்சிகள்
கண்காதுகளில் நிறைகின்றன
00
ஒருதுகள் மிஞ்சாமல்
பறந்து போய்விட்ட
முதிய பொட்டல்வெளி
மெல்லிய இருள் விரித்து,
'அமர்ந்து பேசலாம் வா'
என்கிறது
பரட்டையாய் வறண்ட மாலை
இட்டுச் செல்கிறது
நான் திரும்பும் போதெல்லாம்
வழிவிட்டு விலகி
'முன்பின்கள் கலைந்து
முறை என்று ஆகிய பரப்பின்மீது
சொல் கலைத்து வீசிய சூறையை
அளைந்து பேசுவதற்கா?
வரமாட்டேன்'
ஆயினும்
பரட்டையோடு மட்டும் பேச்சு
எனக்குண்டு
சுத்தமாய் வெறுமையாய்க்
குருட்டொலிகளால் ஆன பேச்சு
00
குருட்டொலிகளின்
அலைவீச்சில்
யுகயுகமாய்ச் சேகரமான
வேறொரு
கருமணல் விரிவு
கலையாதிருப்பது
கருமணல் விரிவு மட்டுமே
Comments