அபியின் ‘மாலை - காத்திருத்தல்’ கவிதையின் துவக்கமே வன்மையாக உள்ளது. ‘விஷப்புகை மேவிய வானம் மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது’ அரண்ட ஓலமாகத் தொனிக்கிறது. அபியின் தாண்டவமும் நாடகமும் உச்சமாகக் கொண்ட கவிதைகளில் ஒன்று இது.
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு மின்னி இடித்து வெறியோடு வருகின்றனவாம், அல்ல அல்ல அல்ல என்று. அறிந்தவையின் மறுபுறமோ இன்னும் பயங்கரம் போலும்.
அடர்வனங்களின் குறுக்கும் நெடுக்குமாக ஆவேசக் காட்டாறுகள் பதறி ஓடி வாழ்வைப் பயிலும் எனும்போது குறுக்கும் நெடுக்குமாக பதறி ஓடி ஆவேசக் காட்டாறுகள் பிரமாண்ட ரூபம் கொள்கின்றன. ஆனால், அவை வாழ்வைப் பயில்கின்றன என்று சொல்லும் போது, அந்த ஆவேசக் காட்டாறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரப்பாகவும் இருக்கலாம் என்று மிக நுண்மை காட்டுகின்றன.
அகண்டம் ஒரு புதிய விரிவுக்குத் தயாராக உண்டு, இல்லையின் கபாலம் உடைபடத்தான் வேண்டும். தாமதமென்றாலும் சுந்தர ராமசாமி சொல்வது போல சிதறடிக்கப்பட வேண்டிய கபாலங்கள் தான் அவை.
இனிமேல்தான் கவிதை, விஷத்திலிருந்து அமிர்தத்துக்கு, ஊழியிலிருந்து துவக்கத்துக்கு புறத்திலிருந்து அகத்துக்கு குணப்படத் தொடங்குகிறது.
காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
ஆமாம். தீர்க்கதரிசிகளின் வருகைக்காக, மனுஷகுமாரனின் வருகைக்காக, தேவனின் வருகைக்காகக் காத்திருந்த ஓர் உலகம் சிதறி விட்டது.
அறிந்தவையின் விஷப்புகையால் மயக்கம் கொண்ட செடிகொடிகளையும் தெளிவித்து அகாலத்தில் சிறைப்பட்டிருக்கும் மாலைப்பொழுதையும் விடுவித்து காத்திருக்கிறேன் என் வருகைக்காக.
காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி
அறிந்தவையின் மறுபுறங்களில் இந்தக் காத்திருப்பு நிகழவில்லை. இந்த ‘மறுபுறம்’ எதுவென்று கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் அங்கே வெற்றி தோல்வி இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
மாலை - காத்திருத்தல்
விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது
அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்
உண்டு - இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
000
காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து.
காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி
000
Comments