Skip to main content

தொடர்ந்து கைப்பற்றி வெல்லப்படும் நிலையில் ஒரு தேசம் நிர்வகிக்கப்படுவதில்லை

ஓவியம் : பொன்வண்ணன்

துஷ்யந்த் தவே

அடிப்படை உரிமைகள் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசியல் சாசன சபையில் 1948-ம் ஆண்டு டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் நடைபெற்ற விவாதத்தில் கே எம் முன்ஷி மிகத் தெளிவான ஒரு கூற்றை வெளிப்படுத்தினார். “உண்மையில், ஜனநாயகத்தின் சாராம்சம் என்பதே அரசு தொடர்பிலான விமர்சனம்தான்.”

இந்திய அரசியல் சாசனம் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை, பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் உட்பட வழங்கியிருக்கிறது. அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூட்டமாகக் கூடுவதற்கும் இந்தியப் பிராந்தியம் முழுக்க சுதந்திரமாக உலவுவதற்கும். இந்த உரிமைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்துக்கு உட்பட்டவைதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், அரசின் பாதுகாப்புக்கும், பொது ஒழுங்குப் பாதுகாப்புக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் தேவையாக இருக்கின்றன. 

அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு இந்தியாவின் அனைத்துக் குடிமக்களின் உயிர், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. தனிப்பட்ட சுதந்திரம் என்பதில் அனைத்து உரிமைகளும் உள்ளடங்கும் என்று உச்சநீதிமன்றம் விளக்கியும் உள்ளது. அந்த தனிப்பட்ட உரிமை என்ற அம்சத்திலிருந்து விளங்கிக்கொள்ளும் போதுதான், விவசாயிகளின் நோக்கங்களைப் பாராட்டவும் நிறைவேற்றவும் முடியும். 

ஹிம்மத் லால் கே ஷா (1973) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன  அமர்வு ஆணித்தரமாக கூறியது இது. “சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது வீதியிலோ பொது இடத்திலோ மக்கள் கூடும் உரிமையைத் தடுக்கவோ சுருக்கவோ முடியாது. பொது ஒழுங்கை மீறாத வண்ணம் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து ஒவ்வொரு குடிமகனும் திரண்டு கூட்டம் நடத்துவதற்கான உதவியை மட்டுமே அரசு செய்ய வேண்டும். தேவையற்ற கெடுபிடிகளை அரசு செய்ய முடியாது. இந்த ரீதியில் அரசு குடிமக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைப் பாதுகாக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவு 19(1)(பி) உள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும்.” 

நீதிபதி மேத்யூ இத்துடன் ஒத்துப்போகும் வலிமையான கூற்றைச் சொல்கிறார். “எந்த ஜனநாயக அமைப்பிலும் கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம் என்பது அடிப்படை அம்சமாகும். அரசியல் ரீதியாக, சமய ரீதியாக, பொருளாதார, சமூக ரீதியாக குடிமக்கள் தங்கள் பிரச்சினைகள், கருத்துகள் குறித்து ஒருவருக்கொருவர் முகத்துக்கு நேராகச் சந்தித்துப் பேசுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதே நோக்கமாகும். திறந்த வெளிகளிலும் பொதுவீதிகளிலும் பொதுக்கூட்டம் போடுவதென்பது நமது தேசிய வாழ்க்கையின் ஒரு அங்கம். அரசும் உள்ளூர் நிர்வாகமும் மக்கள் கூடக்கூடிய இடங்களை மூடுமானால் மக்கள் கூடுவதற்கான அடிப்படை உரிமை என்பதே வீணானது.” என்கிறார். 

ஆனாலும், விவசாயிகள் போராட்ட விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை இந்த அறிவிக்கைகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. விவசாயிகள் அமைதியாக கூடுவதற்கும் சுதந்திரமாக உலவுவதற்கும் சுதந்திரமாகப் பேசுவதற்கும் அனுமதிக்காமல், அரசியல் சாசனம் கூறியிருப்பதை காற்றில் விடுகின்றனர். அத்துடன் உச்சநீதிமன்றத்துக்கும் கீழ்படியாமல் நடக்கின்றனர். அரசியல் சாசனத்தை வரைவு செய்தவர்கள் குடிமக்களுக்குக் கொடுத்த பரிசு அடிப்படை உரிமைகள். அவற்றைச் சுருக்கவோ அவற்றைப் பறிக்கவோ நாடாளுமன்றத்துக்கோ நீதி அமைப்புக்கோ அரசுக்கோ உரிமை கிடையாது. அடிப்படை உரிமைகள் தொடர்பிலான அறிவுரைக் குழுவின் தலைவராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அரசியல் சாசன சபையின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “இந்த உரிமைகளை நியாயமுடையதாக்குவதற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்.” என்று கூறுகிறார். இப்படித்தான் 32-வது சட்டப்பிரிவு பிறந்தது. அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடும் உரிமையே அது. 

அரசியல் சாசன வரைவு சபையில் கே டி ஷா பேசும்போது எச்சரித்துள்ளது இது. “குடி உரிமைகள் என்னும் பிரக்சை மக்களுக்கு ஏற்பட்ட காலம் தொடங்கி, தனிநபர் ஒருவரின் உரிமைதான் சர்வாதிகாரிகளுக்கும் அவர்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்குமான பிரதானப் போர்க்களமாக இருந்துவந்துள்ளது. அதனால்தான் சற்றே வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தாலும், தனிப்பட்ட நபரால் மெல்லிதான அசௌகரியமோ சங்கடமோ ஏற்பட்டாலும் அந்த நபரை குற்றம் சாட்டாமலோ விசாரணையே இல்லாமலோ கைது செய்யும் சர்வாதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.” 

அறுபது நாட்களுக்கும் மேலாக அமைதியான சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட  விவசாயிகள் தலைவர்கள் மீது குற்ற வழக்குகள் எந்தக் காரணமும் இன்றி பதியப்பட்டுள்ளன. ஆனால் இதே டெல்லி போலீசாரோ, கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறுப்பையும் வன்முறையையும் பலிகளையும் ஏற்படுத்திய கலவரத்தைத் தூண்டும் வண்ணம் பேச்சுகளை வெளியிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

குடியரசு தினம் அன்று டெல்லியில் நடந்த வன்முறை அவமானகரமானது. அதற்குப் பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். செங்கோட்டையைப் பாதுகாப்பதில் காவல்துறையினரின் தோல்விகளை அவர்கள் மறக்கமுடியாது. செங்கோட்டையை அத்தனை தொகையில் மக்கள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்பதை தேசம் அறியவே போவதில்லை. விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டு ஒரு இளம் விவசாயியின் மரணத்துக்கும் படுகாயங்களுக்கும் காரணமாகியிருக்கலாம். 

விவசாயிகள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த சந்தேகத்தையும் தங்கள் போராடுவதற்கான உரிமை நீடிக்குமா என்ற கவலையையும் அடைந்துள்ளனர். தடுப்புச் சுவர்கள், கம்பி வேலிகள், அதிகரிக்கப்பட்ட காவல்படை ஆகியவை அவர்களது போராட்ட உணர்வை மழுங்கடிக்கப் போவதில்லை; இந்தத் தடைகள் அனைத்தும் அவர்களது உணர்வை வலுப்படுத்தவே செய்யும். இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்று விவசாயிகள் போராட்டத்தைச் சித்திரிப்பது சீக்கிய சமூகத்தினரைப் புண்படுத்தவே செய்யும். அரசியல் சாசனவரைவு சபையில் சர்தார் உஜ்ஜால் சிங் பேசும்போது, “சீக்கியர்கள் சுதந்திரத்துக்கான அணையாத வேட்கையுடன் இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் அந்நியர்களை தாயகத்திலிருந்து விரட்டுவதற்கு மிக நீண்டகாலம் மிக கடினமாகப் போராடியவர்கள் சீக்கியர்கள். அவர்களைப் போல இன்னொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது.” என்றார். 

“பலபடித்தான தன்மையுள்ள மக்கள் திரளை, ஒரு பொது முடிவுக்கு ஆதரவாகச் சம்மதிக்க வைத்து, நம்மை ஒற்றுமைக்கு வழிநடத்தும் வழியில் அணிவகுக்கச் செய்வதில்தான் சிரமம் உள்ளது" என்று பி ஆர் அம்பேத்கர் அப்போதே அச்சத்தை வெளிப்படுத்தினார்.”

நமது ஜனநாயகம் இப்போதிருக்கும் நிலையில் அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கைத் தீர்மானத்தின்போது எட்மண்ட் பூர்க் பேசியதை நினைவூர்வது அவசியம். “படைபலத்தைப் பயன்படுத்துவது எப்போதும் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். குறிப்பிட்ட காலத்துக்கு அது அமுங்கி இருக்கலாம். ஆனால், மீண்டும் அமுக்குவதற்கான தேவை எழாத அளவுக்கு  அகற்றப்படப் போவதில்லை. தொடர்ந்து கைப்பற்றி வெல்லப்படும் நிலையில் ஒரு தேசம் நிர்வகிக்கப்படுவதில்லை.”

அதனால், அரசுக்கு இருக்கும் இறையாண்மை அதிகாரங்கள் புத்திப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டது போல, அதைத் தவிர நம்மை ஒற்றுமைக்கு வழிநடத்த வேறு வழியில்லை. 

(நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Comments

shabda said…
அன்புடன்