மின் படிக்கட்டில் ஏறி நின்றபோது
ஒரு யுவனும் அழகிய யுவதியும்
எனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தனர்.
தோலை இறுக்கும் அவளது கால்சட்டை, ரவிக்கை
நாங்கள் மேலேறிக் கொண்டிருக்கும்போது
அவள் ஒரு காலை
அவள் நிற்கும் படிக்கு மேல்படியில்
வைத்திருந்தாள்
அவளது பின்புறம் வசீகரமான வடிவத்தை
கற்பித்தது
அந்த யுவன் சுற்றிச்சுற்றிப் பார்த்தான்
அவன் கவலையுடன் தோன்றினான்.
என்னைப் பார்த்தான்.
நான் வேறுபக்கம் தலையைத் திருப்பிக்கொண்டேன்.
இல்லை யுவனே நான் பார்க்கவில்லை
உனதவளின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை
கவலை வேண்டாம், நான் அவளை மதிக்கிறேன்
அத்துடன் உன்னையும்.
அதுபோக நான் எல்லாவற்றையும் மதிக்கிறேன்
வளரும் மலர்களை, இளம் பெண்களை
குழந்தைகள்
விலங்குகளை
நமது அருமையான சிக்கலான பிரபஞ்சத்தை
ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும்.
தற்போது அந்த யுவன் நல்லபடியாக உணர்கிறான்
அத்துடன் அவன் குறித்து எனக்கும் மகிழ்ச்சியே.
அவனது பிரச்சினையை நான் அறிவேன்
அந்த யுவதிக்கு ஒரு தாய், தந்தை, சகோதரியோ சகோதரனோ
இருப்பார்கள்
அத்துடன் சினேகமற்ற ஒரு கொத்து உறவினர்களும் இருப்பார்கள்
அத்துடன் அவள் நடனமாட விரும்புகிறாள்
சரசப்பேச்சிலும் அவளுக்கு நாட்டமிருக்கிறது
அத்துடன் சிலசமயங்களில் சினிமாக்களுக்குப் போக விரும்புகிறாள்
சிலசமயங்களில்
பேச
அதேநேரத்தில்
சுவிங்கம் சவைக்கவும்
மொக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவள் ரசிக்கிறாள்
வளர்ந்து வரும் நடிகை என்று தன்னைப் பற்றி நினைக்கிறாள்
அத்துடன் எப்போதும் அவள் அழகாகத் தோற்றம் தருவதில்லை
அத்துடன்
சிடுசிடுப்பு இயல்பும்
சிலசமயங்களில் உச்சபட்சமாய் கிறுக்குத்தனமாகவும் நடந்துகொள்கிறாள்
தொலைபேசியில் மணிக்கணக்காக அவளால் பேசமுடிகிறது
எப்போதாவது கோடைக்காலத்தில் ஐரோப்பாவுக்குப் போக விரும்புகிறாள்
சமீபத்தில் அறிமுகமான மெர்சிடஸ் காரை நீங்கள் வாங்கித் தரவேண்டுமென்றும் ஆசைப்படுகிறாள்
அவளுக்கு மெல் கிப்சன் மீது வாஞ்சை
அவளது தாய் குடிகாரி
அவளது தந்தை ஒரு இனவாதி
அத்துடன் சிலசமயங்களில்
அதிகமாக மதுவருந்தும்போது
குறட்டை விடுகிறாள்
அத்துடன்
படுக்கையில் எப்போதும் ரசனையுடன்
நடந்துகொள்கிறாள்
1978-ம் ஆண்டில் பாலைவெளியில் கிறிஸ்துவைச் சந்தித்த
ஒருவனை அவள் குருவாக வைத்திருக்கிறாள்
அத்துடன்
அவள் நடனக் கலைஞராக ஆக விரும்புகிறாள்
அவள் வேலையில்லாதவளாக இருக்கிறாள்
சக்கரையோ பாலாடைக்கட்டியோ சாப்பிட்டால்
அவளுக்கு மைக்ரேன் தலைவலி ஏற்படுகிறது
அவன் அவளை மின்படிக்கட்டில்
கூட்டிச்செல்லும்போது
அவனது கரம்
அவளது இடுப்பைச் சுற்றிப் பாதுகாப்பாக
பற்றியுள்ளது
அவன் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தபடி
அவன் நிஜமாகவே சிறப்புத்தகுதி கொண்ட நபரென்றும்
அவனிடம் உள்ளது உலகில் யாரிடமும்
இல்லை என்றும் நினைத்தபடி.
அவன் நினைப்பது சரிதான், மிக மிகச் சரிதான்
அவனது கரம் சுற்றியுள்ளது
குடல்
சிறுநீர்ப்பை
சிறுநீரகங்கள்
நுரையீரல்
உப்பு
சல்பர்
கார்பன் டை ஆக்சைடு
மற்றும்
கபம்
நிறைந்த
ஒரு கதகதப்பான வாளியை.
உனக்கு நல்வாழ்த்துகள் பையா.
Comments