Skip to main content

எலும்புகள் வாழ்கின்றன


இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு புதிய உயிரும் ஏற்கெனவே பழகிய அமைப்புக்குள்தான் வந்துவிழுகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குள், இலக்கணங்களுக்குள் இருப்பதும், இருப்பதற்கு ஒப்புக்கொடுப்பதுமான ஒரு அமைப்பைத்தான் அரசு என்கிறோம். ‘அழகு’என்று ஒன்றைக் கருதும்போது, சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவத்தைத்தான், உருவத்தைத்தான், அமைப்பைத்தான் அழகென்று சொல்கிறோம். அழகுக்குள், வடிவத்துக்குள், அமைப்புக்குள் வராதவையும் இந்த உலகத்தில் உண்டு.

புறக்கணிக்கப்பட்ட உயிர்களாக, மனிதர்களாக, மக்கள் குழுக்களாக அவர்கள் இருக்கின்றனர். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி எப்போதும் அவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

மொழி, படைப்பு, சிந்தனை இவற்றுக்கும் இது பொருந்தும். புதிய சிந்தனைகள், புதிய எழுத்துகள், புதிய புரட்சிகள் எல்லாமே ஏற்கெனவே உள்ள அமைப்பிலிருந்துதான் முரண் பட்டும் அனுசரித்தும் எழுகின்றன. மொழிதான் நமக்கு ஒரு உலகத்தைக் கொடுக்கவும் செய்கிறது. அதேவேளையில், மொழி தான் இந்த உலகத்தைத் துரதிர்ஷ்டமாக வரையறுத்தும் விடுகிறது.

கவிதைகளை வார்த்தைக் கூட்டம் என்று சொன்ன கவிஞன் ஆத்மாநாம். ஒரு கவிதையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னாலேயே அதை ஏவல் செய்ய வார்த்தைகள் காத்திருப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளார். உணர்வதற்கும் சொல்வதற்கும் இடையிலுள்ள இருட்டில், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்னும் படை நமது படைப்பைக் கைது செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது.

அங்கேயும் ஒரு அமைப்பு அரசாட்சி செய்வதைப் பார்த்த திகைப்பு ஆத்மாநாமுக்கு எழுகிறது. அதுதான் ‘என்றொரு அமைப்பு’ .

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                 ஒரு கட்டிட வரைபடத்தையும்
                ஒரு சாலை விவரக் குறிப்பையும்
               ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்
               ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
              இவை யாவும் இப்போதைக்கு இல்லை
             ஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதும்
தலைப்பு தானே உருவாகும்
எலும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு
ஒன்று துல்லியமாகத் தெரிந்தது
எலும்புகளும் நம்மைப் போலவே வாழுகின்றன
வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்
அவைகளுக்கும் அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும்
என்றொரு அமைப்பு

என்றென்றைக்குமாக இருக்கும் அமைப்புகளைப் பற்றிப் பேசும் ஆத்மாநாம், மரித்துப் போய்விட்ட மனிதர்களின் எலும்பு களும் நம்மைப் போலவே ஒரு அமைப்பில் வாழ்வதாகச் சொல்கிறார்.

என்பு தோல்போர்த்தி இருந்தபோது எப்படியான அமைப்பில் இருந்ததோ அப்படியே அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களுமாய் இருக்கும் அமைப்பில் மக்கிப்போகாத எலும்புகளும் வாழ்வதைக் கண்டுபிடிக்கிறார் ஆத்மாநாம் கவிதையில் வரும் ஆய்வாளர்.

Comments