Skip to main content

திருவோடுகளையும் காவியையும் காணவில்லை


எனக்கு ஞாபகம் தொடங்கியதிலிருந்து திருநெல்வேலியின் பகல் நேரங்களில் தினசரி ஐந்தாறு யாசகர்களாவது வீடுகள் தோறும் பிச்சை கேட்க வருவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் நிறைய பேர் அப்போது காவி உடை அணிந்திருந்தனர். காவி உடை அணிந்திருந்தவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களை அப்போது பெரும்பாலும் சட்டை அணிந்து பார்த்ததில்லை. அப்போது சட்டை அணியாமல் கோயிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போகும் பெரியவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.

காவி அணிந்தவர்கள் கழுத்தில் உத்திராட்சத்துடன் திருநீறை நெற்றியிலும் உடம்பிலும் சுற்றி மணக்க அணிந்து, வெள்ளை, கருப்பு திருவோடுகளுடன் வருவார்கள். மிக அரிதாக உலோகத் திருவோட்டையும் பார்த்திருக்கிறேன். சமைத்த உணவை வாங்க மாட்டார்கள். திருவோட்டில் அரிசியும் சில நாணயங்களும் கிடக்கும். 

அவர்கள் வைத்திருந்த திருவோடு மிகவும் சுத்தமாகவும் வசீகரமாகவும் எனது சிறுவயதுக் கண்களுக்குத் தெரிந்தது. அவர்கள் வயோதிகர்கள். இதைத்தவிர அவர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள், அவர்களது குடும்பம், பின்னணி எதுவும் என்னவென்று யோசித்ததில்லை. அவர்கள் பகலில் தோன்றி பகலிலேயே மறைந்தார்கள் திருநெல்வேலி ஊரில். 

இப்போது திருநெல்வேலி செல்லும்போது பகலில் வரும் யாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காவியுடை யாசகர்களை நெல்லையப்பர் கோயில் வாசலில் கூடப் பார்க்க முடிவதில்லை. 

சென்னைக்குப் படிக்க வந்த நாட்களில், வேலை கிடைத்த நாட்களில் முகப்பேரில் காவியுடை அணிந்த பெண் யாசகர்களைப் பார்த்திருக்கிறேன்.  தற்போது மைலாப்பூர் கபாலீஸ்வரர், பாபா கோயில் போன்ற பிரபலத் தலங்களைச் சுற்றி மட்டுமே காவியுடை யாசகர்களைப் பார்க்க முடிகிறது. 

ஊரின் விளிம்பிலும் மறைவாகவும் இருந்த காவியுடைகள் வேறு ஒரு மையத்துக்கு என் வயதில் நகரத் தொடங்கியிருக்கும் போல. மனித வாழ்வின் அநித்தியத்தை ஞாபகப்படுத்தும் கபாலத்தின் உருவமான திருவோடு ஓர் அரும்பொருளின் தன்மையோடு நான் சிறுவயதில் பார்த்த யாசகர்களின் கையில் அப்போது இருந்தது. யாசகன் என்ற உள்ளடக்கத்தோடு அது பதிந்து தேய்ந்து அவர்கள் கையில் பதிந்திருந்தது.

கோயில்கள், பணக்கார வீடுகளின் பூஜை அறைகளை அலங்கரிக்கும் பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் மும்பையிலும் கிளையை வைத்துள்ள மைலாப்பூர் கிரி ஸ்டோர்ஸ் ஷாப்பின் மூன்றாவது தளத்தில் முதல்முறையாக உலோகத் திருவோடுகளை விற்பனைக்கு வைத்திருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். மிகத் தேசலாகவே நான் திருநெல்வேலியில் வசதியான வீடுகளில் பார்த்த அன்னபூரணியின் உலோக வடிவங்களை கனமும் நேர்த்தியும் கூடிப் பார்க்கிறேன். அன்னபூரணி மிக லட்சண உருவமுடையவளாக ஆகி இப்போது சாதாரணர் வீடுகளையும் நிறைத்திருக்கிறாள். கன்னம் ஒட்டிய ஷிர்டி சாய்பாபாவின் கன்னம் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் ஓவிய பிரேம்களில் புஷ்டியை எட்டியிருப்பது போல. தெய்வங்கள் இந்தியா பெற்ற சத்தோடு சேர்ந்து புஷ்டியாகி இருக்கின்றன. வேளச்சேரியில் திருமணத்துக்குப் பிறகு புதிய வீட்டுக்குக் குடிபோனபோது, குருநானக் கல்லூரியின் பக்கத்தில் சாலை மட்டத்தில், மிக ஏழ்மைக் கோலத்திலிருந்த விநாயகர் இன்று பத்தடி உயரத்தில் அமர்ந்து பீனிக்ஸ் மாலுக்கு எதிரே மாலுக்கு வரும் இளம்பெண்களில் சிலரை பக்தர்களாக ஈர்த்தபடி உலோகக் கவசங்கள் உடலில் மினுங்க வசூல் சக்கரவர்த்தியாக மாறியுள்ளார். விருத்தி இல்லாமல் இருக்கும் ஆலயங்களில் ஷிர்டி சாய்பாபா வந்து விட்டால், அவர் சக தெய்வங்களையும் பளபளப்பாக்கி விடுகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளில் கோயில்கள் அடைந்த பொலிவுக்கும் அருகிவரும் காவியுடை யாசகர்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருப்பது போலத் தான் தோன்றுகிறது. எளிமை, நிறைவு, மறைவுத் தன்மையுடன் இருந்த அந்த வண்ணத்துக்கு வேறு அடையாளம் ஏற்பட்டு விட்டது போல. அதிகாரம், குற்றம், அபாயம் நுழைந்துவிட்டதால் எளிமை வேறு வண்ணங்களை நோக்கி நகர்ந்திருக்கலாம்.

திருவோடுகளின் பயணமும் கபாலத்தை நோக்கி, கபாலத்தின் ரத்த வீச்சத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. ரத்தத்திலிருந்து வன்முறையிலிருந்து ஒரு கபாலம் உலர விடுபட பல ஆண்டுகளும் பரிபக்குவமும் தேவை. அவைதான் அன்று யாசகனின் கையில் திருவோடுகளாக இருந்தன. 

திருவோடுகள் கபாலமாக ஆகி கபாலத்துக்கும் முந்தைய ரத்த உறவின் பூர்வ வாசனைகளைத் தேடத் தொடங்கியபோது அவை செங்கல்களாகவும் சூலாயுதங்களாகவும் கடப்பாரைகளாகவும் வெடிபொருட்களாகவும்  மாறத் தொடங்கின. இப்போது காவியின் நிறம் வேறு.

கபாலம் ரத்தத்தைத் தேடி அலையும் பயணத்தில் தான் மீண்டும் இடிபடுதலின் ஓசைகள் கேட்கத் தொடங்கின். ணங் ணங் ணங்கென்று அயோத்தியில் தொடங்கிய இடி தொடர்ந்து நிலம் முழுவதும் நம் அனைவர் தலையிலும் ணங் ணங் ணங்கென்று வெறுப்பாக, அச்சமாக, அமைதியின்மையாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது .

ஒரு கைப்பிடி அரிசி, சில நாணயங்களோடு இருந்த திருவோடுகளையும் காணோம். அதை கையில் வைத்திருந்த காவியுடை யாசகர்களையும் இப்போதெல்லாம் காணமுடியவில்லை.      

Comments

அருமை ஷங்கர்
அருமை ஷங்கர்
ஆகா, காவி பற்றிய கவியின் சிந்தனை பரவசப் படுத்துகிறது - மேனா. உலகநாதன்