Skip to main content

அம்பேத்கர் எழுத்துகள் பதிப்பு கண்ட கதை

உஉஉஉ
சவிதா அம்பேத்கருடன், அம்பேத்கரின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்(1950). உடன் இருப்பது அவர்களின் வளர்ப்பு நாய் மோகினி 

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ‘தி கேரவன்’ ஆங்கில இதழ், அம்பேத்கர் தனது வாழ்நாளின் இறுதி வரை எழுதிய எழுத்துகள் நூல்களாக பிரசுரமானதன் வரலாற்றையும் இன்னும் பிரசுரமாக வேண்டியவை பற்றியும் நீண்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள ஆதிரா கோனிக்காரா, அம்பேத்கர் எழுத்துகளை அவர் காலத்திலிருந்து தொடர்ந்து வெளியிடுவதற்கு உதவியவர்கள், பதிப்பித்த ஆய்வாளர்கள் ஆகியோர் குறித்த விவரங்களையும் இந்தக் கட்டுரையின் வழியாக அறியத் தருகிறார். 

அம்பேத்கர் இறப்பதற்கு முந்தைய டிசம்பர் ஐந்தாம் தேதி இரவில் உறங்கச் செல்லும்போது தனது உதவியாளராக இருந்த நானக் சந்த் ரத்துவிடம், அடுத்த நாள் காலை தனது ‘புத்தரும் தம்மமும்’ முன்னுரையை அச்சுக்காக கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தான் உறங்கச் செல்கிறார். அவர் இறந்த பின்னரே புத்தரும் தம்மமும் நூல் வெளிவருகிறது. இந்தக் கட்டுரையின் வழியாக அம்பேத்கரின் இரண்டாவது மனைவி சவிதா அம்பேத்கரைப் பற்றியும் எனக்கு மேலதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மோசமாகி வரும் ஆரோக்கிய நிலை, பலவிதமான அரசியல் வேலைகளுக்கு நடுவில் தனது வாழ்நாளின் இறுதியில் தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா, புத்தா அண்ட் கார்ல் மார்க்ஸ்,  ரிவல்யூசன் அண்ட் கவுண்டர் ரிவல்யூசன் இன் ஏன்சியன்ட் இந்தியா, ரிட்டில்ஸ் இன் இந்துயிசம் ஆகிய நான்கு நூல்களையும் லட்சியமாக ஏற்று அம்பேத்கர் எழுதியுள்ளார். இத்துடன் 18 நூல்கள் வேறு வேறு நிலைகளில் எழுதி முடிக்கப்படவில்லை என்றும் சவிதா தனது சுயசரிதையில் நினைவுகூர்கிறார். விசாவுக்காக காத்திருத்தல் நூல் 1990-ல் அவரது நூற்றாண்டில் வெளிவந்தது. ஜோதிராவ் புலே, காந்தி குறித்தும் அவர் புத்தகங்களை எழுதத் திட்டமிட்டிருந்திருக்கிறார். 

புத்தரும் தம்மமும் புத்தகத்தை தான் கண்மூடும் முன்னரே வெளியிட்டுப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட அம்பேத்கரின் எண்ணம் நிறைவேறவில்லை. 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு புத்தகம் முடிக்கப்பட்டாலும் அதை அச்சேற்றுவதற்கான இருபது ஆயிரம் ரூபாயை அம்பேத்கரால் புரட்ட முடியவில்லை. தொராப்ஜி டாடா அறக்கட்டளைக்குத் திரும்பத் திரும்ப கடிதங்களை எழுதியும் அவர் கேட்ட தொகை மறுக்கப்படுகிறது. புத்தகத்தை வெளியிட முடியாதென்று கூறும் அறக்கட்டளை வெறுமனே நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி கையைக் கழுவிவிடுகிறது. 

டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் உறக்கத்தில் மரணத்தைத் தழுவியபின்னர் அவரது அச்சில் ஏறாத எழுத்துகள் வெளியீட்டைப் பெறுவதற்கு அனுபவித்த காத்திருப்பை தி கேரவன் கட்டுரை நுணுக்கமாகப் பேசுகிறது. அவர் வாழ்ந்த அலிப்பூர் சாலை பங்களாவில் பல ஆண்டுகள் பாதுகாப்பற்றுக் கிடந்த நிலையில் ஜே. பி. பன்சோட் மற்றும் ஜே வி பவார் போன்ற அவரது அணுக்கத் தொண்டர்கள் அரசுக்கும் நீதித்துறைக்கும் மனு இட்டு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகளின் தொகுப்புகளை மகாராஷ்டிர அரசு வெளியிடத் தொடங்கியுள்ளதை கட்டுரையாளர் பகிர்கிறார். 22 தொகுதிகள் வரை இதுவரை வந்துள்ளன. 

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவரும், சாதியை ஒழிக்க இன்றும் இந்தியாவில் போராடிவரும் கோடிக்கணக்கான மக்களின் போராட்டத்துக்கான அடையாளமும், தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்தளித்தவருமான அம்பேத்கரின் பதிப்பிக்கப்படாத எழுத்துகள் இப்போது மகாராஷ்டிரக் கல்வித் துறையின் ஓர் அலுவலகத்தில் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவின் மேற்பார்வையில் உள்ளது. அம்பேத்கர் எழுத்துகள் வரிசையில் கடைசி பாகம் வந்து பத்தாண்டுகளாகிவிட்டது என்கிறார் ஆதிரா. 

அவ்வப்போது மாறிய அரசுகள் தங்கள் அரசியல், கருத்தியல் முத்திரைகளை, பாரபட்சத்தை அம்பேத்கர் எழுத்துகளை வெளியிடுவதிலும் காட்டியுள்ளன. ஒரு அரசு அதிகாரியாகவும் அம்பேத்கரியராகவும் இருந்த வசந்த் மூன், குழுத் தலைவராக இருந்த காலத்தில் தான் 22 பாகங்களைக் கொண்ட அவரது எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன. 

அரசியல் சுரணையும் பண்பாட்டுச் சுரணையும் கொண்ட ஊடகங்களும் பத்திரிகைகளும் பிராந்திய மொழிகளில் அரிதாகிவரும் காலத்தில் ‘தி கேரவன்’ போன்ற ஆங்கில இதழ்கள், இதழியல் மீது இதழியல் பணியின் மீதும் இன்னமும் மதிப்பையும் வசீகரத்தையும் தக்கவைப்பதாக இருக்கின்றன. 

அச்சு ஊடகம் நலிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அச்சு ஊடகம் சார்ந்த புலனாய்வுச் செய்திக் கட்டுரைகள், கள ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஊடக நிறுவனங்கள் வசதிகளையும் முதலீடுகளையும் முழுக்கக் குறைத்து, மறுத்துவிட்ட நிலையில் இதுபோன்ற ஆழமான கட்டுரைகளும் தகவல்களும் அச்சு ஊடகத்தின் சாத்தியத்தையும் அதற்கு இன்றுமுள்ள தேவையையும் தெரிவிக்கின்றன. அம்பேத்கர் எழுத்துகளின் பதிப்பு வரலாறு குறித்த எண்ணற்ற தகவல்கள், தொடர்புள்ளவர்களின் செய்திகளோடு எழுதப்பட்டுள்ள ஆதிரா கோனிக்கராவின் கட்டுரை முன் உதாரணமானது.   

முழு ஆங்கிலக் கட்டுரையையும் படிக்க : https://caravanmagazine.in/history/struggle-publish-br-ambedkar-writing

Comments