Skip to main content

நீலம் இதழில் வ. கீதாவின் நேர்காணல்



இலக்கியம், எழுத்து, ஆய்வு, அரசியல் செயல்பாடு அனைத்தும் சுயதொழில்முனைவாக மாறிவரும் காலகட்டம் இது. அறிவு என்பது தன்னையும் தனது பின்னணியையும் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் சேர்த்தே பரிசீலிப்பதற்கானது, அறிவு என்பது நீதிக்காகப் பயன்பட வேண்டியது என்பதை நினைவூட்டுவதாக வ. கீதாவின் நேர்காணல் இருந்தது. ‘நீலம்’ ஏப்ரல் மாத இதழில் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இந்த நேர்காணலைச் செய்துள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு பெரியாரியம், பெண்ணியம், தலித் அரசியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் செயல்பட்டுவரும் சமூக வரலாற்றாசிரியர் வ. கீதாவைப் பற்றி முழுமையாகத் தமிழில் தெரிந்துகொள்ள உதவும் முதல் நேர்காணல் இதுதான். சோவியத் யூனியனின் உடைவு, மண்டல் கமிஷன், அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி எழுந்த தலித் இலக்கிய, அரசியல் எழுச்சி, புதிய கோட்பாட்டு விவாதங்கள் உருவான சூழல் ஆகியவையும் வ. கீதாவின் நேர்காணல் வழியாகத் திரும்ப ஞாபகப்படுத்தப்படுகிறது.

வ. கீதா தனது பெற்றோர், சாதியப் பின்னணி, குடும்பம் செலுத்திய தாக்கம், குழந்தைப் பருவம், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது அங்கே அனுபவித்த அரசியல், எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து எழுத ஆரம்பித்த சூழல் தொடங்கி இன்றுவரையில் தனது கருத்து, சிந்தனை, அன்றாட உறவுகளின் தளத்தில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை ஸ்டாலின் ராஜாங்கத்திடம் ஆத்மார்த்தமாகப் பகிர்ந்துகொள்ளும் விரிவான நேர்காணல் இது. 

அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் ஜனநாயகத் தன்மை, பல்கலைக்கழக வளாகத்தில் உலகளாவிய கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஆண், பெண் மாணவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கும் கலந்து உரையாடிப் பெற்றத் தாக்கம் இவற்றோடு சென்னைக்குத் திரும்புகிறார் வ. கீதா. தான் பிறந்த பிராமண சாதி குறித்த விமர்சனமும் இடைவெளியும் இருந்தாலும், அந்தச் சாதி தனக்குக் கொடுத்துவரும் அனுகூலத்தையும் பார்ப்பவராகவுமே இருப்பதை இந்த நேர்காணலில் சொல்கிறார்.   

1980-களுக்குப் பின்னால் தமிழகத்தில் பின்காலனியம், பின்நவீனத்துவம், பின்அமைப்பியல் சார்ந்தும் மார்க்சியம், மனித உரிமை, பெண்ணிய விவாதங்களும் ஒரு சிறு எண்ணிக்கையிலுள்ள நபர்களால் முன்னெடுக்கப்பட்டு களச்செயல்பாடுகளும் தொடங்கியிருந்த ஒரு லட்சிய காலகட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் வ. கீதா. 

பெரியார், அம்பேத்கர், காந்தி எழுத்துகள் குறித்தும் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் அதன் மீது தனக்கிருக்கும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்கிறார். காந்தியைப் பற்றிப் பேசும்போது, காந்தி தென்னகம் வந்து திரும்பும்போதெல்லாம் சாதி தொடர்பான அவரது பார்வையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது என்பதை உதாரணத்துடன் குறிப்பிடுகிறார்.

பெண்ணியம், மனித உரிமை சார்ந்து களத்தில் தமிழகம் முழுவதும் செயல்பட்ட எத்தனையோ தோழிகளின் பெயர்களை சரளமாக குறிப்பிடுகிறார். லல்லி முதல் சாலை செல்வம், பத்மாவதி வரை ஒரு காலகட்டத்தின் முகங்களை அவர் சொல்லிக் கொண்டே போகிறார். அத்துடன் ராஜ் கௌதமன், பாலகோபால், அ.மார்க்ஸ் தொடங்கி தனது கருத்துலகின் மேல் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றியும் சக ஊழியர்களின் பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்கிறார். இன்று எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளிடமும் காணமுடியாத அரிய பண்பு இது. 

ஆய்வு, வாசிப்பு, செயல்பாடு, மொழிபெயர்ப்பு, அறிவார்த்த, ஆத்மார்த்த உறவுகள் என அனைத்தையும் சுயத்தைப் பரிசீலிக்கவும் சுயத்தை விரிவுபடுத்துவதற்கும் உதவியிருப்பதை தடையங்களோடு சொல்லும்போது கீதாவின் மீது மரியாதை அதிகரிக்கிறது. தான் லட்சியமாக ஏற்ற நீதியைத் தனது சுயத்துக்கு, அதன் ஆழம் வரைத் தொடர்ந்து, நினைவுபடுத்திக் கொண்டிருப்பவராக இந்த நேர்காணல் வழியாக வ. கீதா எனக்கு அறிமுகம் ஆகிறார். தன் வெறுப்பை, தன் அச்சங்களை, தன் வேஷ, துவேஷங்களை, தன் பிம்பத்தை விட தான் வேலை செய்யும் களமும் லட்சியமும் மேலானது என்ற நிதானமும் தொலைவும் வ. கீதாவிடம் உள்ளது. 

காந்தி-அம்பேத்கர் முரண்பாடு பற்றிப் பேசும்போது வரலாறு சரிக்கட்ட முடியாத முரண்பாடுகளை எழுத்தால் சரிக்கட்ட முடியாது என்று சொல்கிறார்.

இன்னொரு தளத்தில் காந்தியின் பங்களிப்புகள் குறித்த சாதகமான பார்வையும் அவரிடம் இருக்கிறது. பௌத்தம் தொடர்பில் அம்பேத்கர் அடைந்த பார்வைகளைப் பற்றி வ. கீதா அபூர்வமான குறிப்புகளைத் தருகிறார். இதுதொடர்பில் மட்டும் அவரிடம் தனியாக அவரது பார்வைகளை ஒருவர் கேட்டுப் பதிவுசெய்யலாம். நீதியை நிலைநாட்டும் காரியமாக இருந்தால் கூட வன்மத்தோடும் வெறுப்போடும் அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதாக அம்பேத்கரைக் குறிப்பிடுகிறார்.

இங்கே வெறுப்பு செயல்படாத லட்சியங்கள் உண்டா? 

‘ஒரு விஷயத்தை எதிர்த்துப் போராடும்போது ஒருவரை வீழ்த்துகிறோம். இந்த வினையாக்கத்தில் வன்மத்தோடோ வக்கிரத்தோடோ ஒருவரை நடத்தக்கூடாது. சோவியத் யூனியனில் அந்த மாதிரிச் செய்ததால்தான் மக்கள் சோசலிசத்தை ஏற்காமல் திணிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகிவிடுகிறது.’ என்று பௌத்தமும் சோசலிசமும் உரையாடும் புள்ளிகளை அம்பேத்கர் பரிசீலிப்பதைப் பார்க்கிறார். 



மனித உரிமைச் செயல்பாட்டாளர் பாலகோபாலிடம் இருந்து பெற்ற படிப்பினை பற்றி கூறும்போது, பிடிக்காத ஒரு விஷயத்தை அழிப்பது என்னும் போக்கு ஒரு அறவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று பாலகோபால் சொன்னதைக் குறிப்பிடுகிறார். நம்மிடம் வாழ்வதற்கான இலக்கணமே இல்லாமல் போய்விட்டது, எதிர்ப்பதற்கான இலக்கணமே மிஞ்சியுள்ளது என்கிறார். 

பெண்ணியம் சார்ந்த கீதா கடைசியாகக் கூறியிருக்கும் பதில் அவர் தனது வாழ்க்கை மூலம் அடைந்திருக்கும் புரிதலையும் விகாசத்தையும் காட்டுவதாக எனக்குத் தெரிந்தது. 

பெண்கள் உழைப்பவர்களாக, உண்டாக்குபவர்களாக, உற்பத்தி செய்பவர்களாக, பொறுப்பாக இருப்பவர்களாக அவர்களை வரலாறு ஆக்கிவைத்திருக்கிறது என்கிறார். பெண்களின் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் வாழ வைக்கும் பணியை அவர்கள் மறுக்க முடியாதபடி செய்துவருகின்றனர் என்கிறார். அந்த அடிப்படையிலிருந்து அவர்கள் சமத்துவமான, மாண்பான, சாதி, குடும்ப எல்லைகளுக்கு வெளியிலான விடுதலை வாழ்க்கையை வாழவேண்டும், அந்த வாழ்க்கையை வாழமுடியுமா என்பதை பெண்ணியம் பரிசீலிப்பதாக கூறுகிறார். அதன்பின்னர், வாழ்தலில் அக்கறை உள்ள நிலையில் ஒரு விஷயத்தை எப்போதும் விமர்சனம் செய்வதில் ஆர்வம் இல்லை என்கிறார். எதிர்த்தல் மட்டுமே அரசியல் இல்லை என்பதை அம்பேத்கரிடம் இருந்து கற்றதாகச் சொல்கிறார். 

‘வாழ்க்கை என்பது நகர்தல், உறவு கொள்தல், சேர்ந்து செய்தல், தனியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவ்வாறு இருப்பதற்கான வெளியை காலத்தை வென்றெடுத்தல்’ என்று கூறி முடிக்கிறார்.

வ. கீதாவின் முழுமையான ஆளுமையை வெளிப்படுத்தும் இந்த நேர்காணல் எனக்குச் சில படிப்பினைகளையும் வழிகாட்டுதலையும் கொடுப்பதாக இருந்தது. இந்த நேர்காணலைச் செய்துள்ள ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் நன்றிக்குரியவர். நீலம் இதழில் இவர் செய்துவரும் நேர்காணல்கள்  வாசகர்களின் ஆழ்ந்த கவனத்துக்குரியவை.

கலை இலக்கியம் தொடங்கி கருத்தியல்கள் வரை வெவ்வேறு தரப்புகள் பரஸ்பர சந்தேகங்களுக்கு உள்ளாகி பிரிந்துகிடக்கும் நம்முடைய பண்பாட்டுச் சூழலில் வ. கீதாவின் உரையாடல் குணமூட்டுவதற்கான முகாந்திரங்களைக் கொண்டது. 

Comments