Skip to main content

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது -சார்லஸ் புக்கோவ்ஸ்கி


அவர்கள்

நல்லவர்களாகவோ மோசமானவர்களாகவோ இருக்கலாம்

அவர்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்

பிரபலமானவர்கள் இறக்கும்போது

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது

அவர்கள் பழைய கட்டிடங்கள் பழைய தெருக்களைப் போல

நமக்குப் பழக்கமான வஸ்துக்கள் மற்றும் இடங்களைப் போல

அவை அங்கே இருப்பதால்

நாம் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் போல.

ஒரு தந்தையின் மரணம் அல்லது

ஒரு வளர்ப்புப் பூனை அல்லது வளர்ப்பு நாயின் மரணத்தைப் போல

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது

பிரபலமானவர்கள் இறக்கும்போது

பிரபலமாக இருப்பதின் பிரச்சினை என்னவென்றால்

அவர்கள் உடனடியாக இடம்பெயர்க்கப்பட வேண்டும்

அத்துடன் அவர்களை அத்தனை எளிமையாக

இடம்பெயர்த்துவிடவும் முடியாதென்பதாலேயே

நமக்கு அது தனித்துவமான சோகத்தைத் தருகிறது.

பிரபலமானவர்கள் இறந்துபோகும்போது

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது

சாலையோரத்து நடைபாதைகள் வித்தியாசமாகத் தெரிகின்றன

அத்துடன் குழந்தைகள் வித்தியாசமாகத் தெரிகிறார்கள்

படுக்கைத் துணைகளும்

நமது திரைச்சீலைகளும் நமது வாகனங்களும் வித்தியாசமாய் தோன்றுகின்றன.

பிரபலமானவர்கள் இறக்கும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது:

நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம். 

Comments