ஸ்டீன்பெக், தாமஸ் உல்ப் பற்றிப் பேசினான்
அதோடு
அவர்கள் கூடிப் பெற்றது போலத் தோன்றும் எழுத்தை
எழுதினான்
அப்போது பிகுரோவா தெருவில்
மதுவிடுதிகளுக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்தேன்
அவனோ தூரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தான்
நாங்கள் இருவருமே எழுத்தாளர்களாக விரும்பினோம்
நாங்கள் பொது நூலகத்தில் சந்திப்போம்
கல் பெஞ்சுகளில் அமர்ந்து எழுத்தாளர் ஆவது பற்றி பேசிக்கொண்டிருப்போம்.
அவன் தனது சிறுகதைகளைக் காண்பித்தான்
நன்றாக எழுதினான்
நான் எழுதியதை விட நன்றாக எழுதினான்
அவனது படைப்பில் அமைதியும் வலுவும் இருந்தது
என் படைப்பில் இல்லாதது
என் கதைகள் கரடுமுரடாகவும் கடுமையாகவும்
சுயம் விதித்துக்கொண்ட காயங்களோடும் இருந்தன
எனது படைப்பனைத்தையும் அவனிடம் காண்பித்தேன்
ஆனால் அவன் என் படைப்பைவிடவும்
எனது குடியின் வல்லமை மற்றும் எனது உலகியல் அணுகுமுறையால்
கவரப்பட்டான்
ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு கிளிஃப்டன் கேஃபிடேரியாவுக்கு
நாளின் ஒரே சாப்பாட்டை உண்பதற்காகப் போவோம்
(1941-ல் ஒரு டாலருக்கும் குறைவு)
இருப்பினும்
நாங்கள் பிரமாதமான ஆரோக்கியத்துடன் இருந்தோம்.
நாங்கள் வேலைகளை இழந்தோம்
திரும்ப வேலைகளைக் கண்டோம்
வேலைகளை இழந்தோம்
பெரும்பாலான நேரங்களில் வேலை இல்லாமல் இருந்தோம்
சீக்கிரத்தில் தி நியூயார்க்கர், தி அட்லாண்டிக் மன்த்லி மற்றும் ஹார்பர்ஸ்
பத்திரிகைகளிலிருந்து மாதம்தோறும் காசோலைகள் வருமென்று
கற்பனையில் இருந்தோம்.
எதைப் பற்றியுமே கற்பனை கொண்டிராத
இளைஞர் கும்பல் ஒன்றுடன்
நாங்கள் இருந்தோம்
ஆனால் அவர்களிடம் தைரியமும் நெறிகளற்ற கவர்ச்சியும் இருந்தது
நாங்கள் அவர்களுடன் சேர்ந்து குடித்தோம்
அவர்களுடன் சண்டையிட்டோம்
மூர்க்கத்தனம் மிகுந்த சுவாரசியப் பொழுதுகள் அவை.
திடீரென்று ஒருநாள் அவன் கடற்படையில் சேர்ந்தான்
“நான் எதையோ எனக்கு நிரூபிக்க வேண்டும்"
அவன் சொன்னான்.
அவன் அதைச் செய்யவும் செய்தான்
பயிற்சி முகாம் முடிந்தவுடன் போர் வந்தது
மூன்று மாதங்களில் அவன் இறந்துபோனான்.
எப்போதாவது ஒரு நாள் நான் எழுதப்போகும் நாவலை
அவனுக்குச் சமர்ப்பணம் செய்யப் போவதாக நான் எனக்குள் உறுதிபூண்டேன்.
நான் ஐந்து நாவல்களை எழுதிவிட்டேன், வேறு வேறு நபர்களுக்கு
சமர்ப்பணத்தோடு.
ராபர்ட் பௌன், நீங்கள் சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
“புக்கோவ்ஸ்கி, நீ சொல்வதில் பாதி பேத்தல்."
Comments