கண்ணின் வழியாகப் பார்த்து அனைத்துப் புலன்களையும் தூண்டி பரவசப்படுத்தும் கலை ஓவியம். இதை இதயத்துக்கு உணர்த்தும் படைப்புகள் வான்கோவினுடையவை. நவீன ஓவியங்களைப் பார்க்கத் தொடங்கியதோடு வான்கோ ஓவியங்களும் பரிச்சயமாகிய காலகட்டத்திலிருந்து அந்த ஓவியங்களின் பின்னணி, வான்கோவின் வான்கோவின் வாழ்க்கை குறித்த படங்களைப் பார்ப்பதுமாக, அவர் படைப்புகளை ஆழமாகக் காண்பதற்கு, கண்களை அகலக் கீறிக் காட்டுவது போன்ற சான்றுகள், வான்கோ தொடர்பில் எனக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நவீன ஓவியத்தின் பிதாமகனாக இன்று கொண்டாடப்படும் வான்கோ, வாழும் காலத்தில் சக ஓவியர்களாலும் சமூகத்தாலும் ஓவியனாகவோ, சக மனித உயிராகவோ கூட குறைந்தபட்சமாகக்கூட மதிக்கப்படவில்லை.
இயற்கை, மனிதர்கள், வஸ்துகள் மீது அவன் கொண்ட தீவிரமான ஈடுபாடு, நேசம் மற்றும் உறவை அவனது ஓவியங்கள் போல வெளிப்படுத்திய படைப்புகள் அரிது. ஆனால், அவனது நேசத்துக்குப் பதிலீடாக தம்பி தியோவின் அன்பையும் ஆதரவையும் தவிர வேறு யாரிடமிருந்தும் நிலைத்த நிலையில் அவன் பெறவேயில்லை. பார்ப்பவர்களின் புலன்கள் அத்தனையையும் துடித்து விரியச் செய்யும் அவனது படைப்புகளுக்குப் பின்னால் வான்கோவின் ஆன்மாவை சித்திரவதை செய்த பேதலிப்பும், வெளிப்படுத்த முடியாததின் வேட்கையும் சுயவதையின் கூப்பாடுகளும் சேர்ந்து வண்ணங்களாகக் குழைந்திருக்கின்றன. வான்கோவின் வண்ணக்குழைவுகள் புடைப்புச் சிற்பங்களைப் போல ஆவது அதனால்தான். ஓவியன் காகினை, நீ வரைவது ஓவியமா, சிற்பமா என்று கேலி செய்யவைப்பது அதுவே.
வான்கோ தான் நேசித்த பெண்ணான ரேச்சலுக்கு காதை அறுத்துக் கொடுத்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராயும் The Mystery of Van Gogh’s Ear ஆவணப்படத்தைப் பார்த்த போது, வெறும் பிம்பங்கள், நகல்கள் வழியாகவே நூறாண்டுகளைத் தாண்டி, வேறு கலாசாரத்தில் இருக்கும் ஒருவனைத் தீண்டிக் கிளர்த்தும் ஆற்றலைக் கொண்ட வான்கோ போன்ற ஒருவனின் படைப்புகளுக்கான மூலாதார எரிபொருள், துயரமும் சுயவதையும் மனவாதையும் என்றால், அன்றாட உலகில் மேற்கண்ட உணர்வுகளுக்குக் கற்பிக்கப்படும் எதிர்மறை அர்த்தங்கள், அவனது வாழ்க்கையைப் பொருத்தவரை மிகவும் அபத்தமானவையாகத் தோன்றிவிடுகின்றன.
1888-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியன்று இரவு, வான்கோவின் ஓவியங்களைத் தெரியாத உலகமக்களுக்குக் கூட வான்கோவை அறியச் செய்த நிகழ்வான, அவன் தன் காதலிக்கு காதை அறுத்துக் கொடுத்த அந்தச் சம்பவம் நடக்கிறது. The Mystery of Van Gogh’s Ear, அந்தச் சம்பவத்தைச் சுற்றி இருக்கும் புதிர்களின் மூட்டத்தைச் சற்று விலக்கி நமக்குத் துல்லியமாகக் காண்பிக்க முயல்கிறது. வான்கோவின் வாழ்வை 'தி லஸ்ட் பார் லைப்' நாவலாக எழுதிய இர்விங் ஸ்டோன் தொடர்புடைய ஆவணத்திலிருந்து வான்கோவின் அறுக்கப்பட்ட காது சம்பந்தப்பட்ட புதிர் களையப்படுகிறது. வான்கோ தனது காதை அறுத்துக் கொண்டபின்னர், அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரும் பின்னர் வான்கோவின் நண்பரானவருமான பெலிக்ஸ் ரே , அறுக்கப்படுவதற்கு முன்பிருந்த காதை முகத்தின் பக்கவாட்டுப் பகுதியோடு, அறுக்கப்பட்ட பிறகு இடது பக்கவாட்டு முகத்தையும் வரைந்த தாள் தான் அந்தப் புதிரை விடுவிக்கிறது. அதன்மூலம், வான்கோ, தனது இடது காதின் பெரும்பகுதியை அந்த துரதிர்ஷ்ட இரவில் அறுத்துக் கொண்டதும், காதின் கீழ்மடலின் சிறுபகுதி மட்டுமே அறுக்கப்படாமல் மிஞ்சியதும் தெரியவருகிறது. ஓவியர் வான்கோவின் தனிவாழ்க்கையில் மட்டுமல்ல படைப்பு வாழ்க்கையிலும் மிகத் திருப்புமுனையான இரவு அது. ஏனெனில், வான்கோ நேசித்த நண்பரும் குறுகியகால சக அறைவாசியுமான ஓவியர் காகின் அவரை விட்டுப் பிரிந்து செல்லப்போகும் தகவலைத் தெரிவித்திருந்தார். வான்கோவை ஆதரித்து வந்த அவரது அண்ணன் தியோ தனது திருமணத்தை அறிவித்து அப்போதுதான் கடிதம் ஒன்றைத் தம்பிக்கு எழுதியிருந்தார். எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், ஒரே நண்பனும் தன்னைப் பிரிந்த நிலையில் தான் நேசித்த ரேச்சலை அவள் இருந்த பாலியல் தொழிலாளர் விடுதிக்குப் போய்ப் பார்த்து கொடுத்த காகிதப் பொட்டலத்தில் தான், வான்கோ இந்த உலகத்துக்கு அளித்த தனது நேசத்தின் இன்னொரு வெளிப்பாடான அவரது காது இருந்தது.
ஓவியர் வான்கோவின் படைப்புகளையும் வரலாற்றையும் அறியும் ஆவல் கொண்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு, வான்கோவின் படைப்புகளுக்குப் பின்னாலிருந்த வாதையின் அதீத வலியை ஓவிய வரலாற்றாசிரியர் பெர்னாதெத் மர்பி அந்த துரதிர்ஷ்டம் பிடித்த இரவுச் சம்பவத்தைத் துப்பு துலக்குவதன் மூலமாக அறிமுகப்படுத்துகிறார். எத்தனை பேதலிப்பும் துயரமும் இருந்தால், தன் காதை அறுக்கும் அந்த வலி மிகுந்த அனுபவத்தைக் கடந்திருப்பார் என்று கூறி தனது அழுகையை அடக்கமுடியாமல் அழுகிறார் பெர்னாதெத் மர்பி. காதுக்குப் பின்னால் ரத்தநாளம் போகும் இடத்தில் அறுத்துக் கொண்டார் வான்கோ.
வான்கோ தனது காதை அறுத்துக் கொடுத்த ரேச்சல் பாலியல் தொழிலாளி அல்ல என்பதையும் பெர்னாதெத் மர்பி நிறுவுகிறார். அக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசாங்கம் பாலியல் தொழிலை முறைப்படுத்தியிருந்ததைக் கூறும் பெர்னாதெத் மர்பி, ரேச்சல் பாலியல் தொழிலாளிகள் தங்கியிருக்கும் விடுதியில் தங்கி அருகிலுள்ள உணவு விடுதியில் வேலை பார்த்த பெண் என்கிறார். ஏனெனில் பிரெஞ்சு அரசாங்கம் 21 வயது பெண்களை பாலியல் தொழிலாளியாகப் பதிவு செய்து அங்கீகரித்திருந்தது. வான்கோ தனது காதைப் பரிசாகக் கொடுத்தபோது ரேச்சலுக்கு வயது 19.
வான்கோவின் வாழ்க்கையோடு தொடர்பு இருந்ததால் பாலியல் தொழிலாளியாக அறியப்பட்டு இன்றும் சங்கடத்தோடு இருக்கும் ரேச்சலின் பேரக்குழந்தைகளையும் பெர்மாதெத் மர்பி இந்த ஆவணப்படத்தில் சந்தித்துப் பேச முயல்கிறார். அவர்கள் பாட்டியைப் பற்றி பேசமறுத்து, தங்களை வெளியுலகுக்குக் காட்டவும் அனுமதிக்கவில்லை.
வான்கோவின் பெரும்பாலான ஓவியங்கள் இருக்கும் ஆம்ஸ்டெர்டாமில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்கள் இந்த ஆவணப்படத்தின் மூலமாக மிக நெருக்கமாக அறிமுகமாகும் அனுபவம் இந்தப் படத்தின் கூடுதல் அம்சம். வான்கோவின் வாழ்வில் நடந்த மர்மமும் கோரமும் சூழந்த சம்பவத்தின் ஒளியில் அவரது படைப்புகள் மேலும் நமது கண்களுக்குத் துலக்கமடைகின்றன. காதை அறுத்துக் கொண்டு சிகிச்சைக்குச் சென்றவுடன் வரைந்த ஓவியம் ஒன்று அணு அணுவாக பார்வையாளனின் முன்பாகவே பரிசீலனைக்குள்ளாகிறது.
ஓவியர் வான்கோவின் ஓவியங்கள் எப்படிக் கையாளப்படுகின்றன, அவர் குறித்த ஆவணங்கள் எத்தகைய நுண்ணுணர்வுடன் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கிறோம். 2016-ம் ஆண்டு பிபிசியில் ஒளிபரப்பான ஆவணப்படம் இது.
வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான Starry Starry Night குறித்து டான் மெக்லீன் எழுதிய பாடல் வரிகள் இந்த ஆவணப்படத்தைப் பார்த்த இரவில் மனத்தில் ஒலித்தும், அந்த ஓவியத்தின் நட்சத்திரங்கள் அகத்தில் சுடர்ந்தும் கொண்டிருந்தன.
இத்தனை ஒளிபடைத்த உலகை வெளிப்படுத்த அவன் ஏன் இத்தனை இருட்டை எதிர்கொள்ள வேண்டும்?
புதிராகத்தான் இருக்கிறது.
காதலர்கள் வழக்கமாகச் செய்வதைப் போல
நீ உன்னுடைய வாழ்வை
முடித்துக் கொண்டாய்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல முடிந்திருந்தால் சொல்லியிருப்பேன்
வின்சென்ட்
இந்த உலகம் உன்னைப் போல அழகானவர்களுக்கானதல்ல.
(ஸ்டாரி ஸ்டாரி நைட் பாடலிலிருந்து)
Comments