Skip to main content

பாடல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


ஜூலியோ தனது கிடாருடன் வந்து

தனது புதிய பாடலைப் பாடினான்.

ஜூலியோ பிரபலமாய் இருந்தான்

அவன் பாடல்களை எழுதினான்

குட்டிச் சித்திரங்களுடன் கவிதைகளையும் சேர்த்து

புத்தகங்களையும் வெளியிட்டான்

அவை அருமையானவை.


ஜூலியோ தனது சமீபத்திய காதல் உறவைப் பாடினான்

ஆரம்பிக்கும்போது சிறப்பாக இருந்ததையும்

அதன்பிறகு

கசப்பாக ஆகிவிட்டதையும் பற்றிப் பாடினான்.


அவன் உபயோகித்த வார்த்தைகள் வேறென்றாலும்

அவற்றின் அர்த்தம் இதுதான்.


ஜூலியோ பாடி முடித்தான்.


“நான் இன்னமும் அவளை நேசிக்கிறேன்

அவளை என் மனத்திலிருந்து துடைக்க முடியவில்லை.”

என்று சொன்னான்.


“என்ன செய்வது?”ஜூலியோ கேட்டான்.


“குடி" என்றான் மதுவை ஊற்றியபடி ஹென்றி.


ஜூலியோ தனது கிளாசைப் பார்த்தபடி:

“அவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்?”


“அனேகமாக வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்"

என்றான் ஹென்றி.


ஜூலியோ கிடாரை பெட்டியில் பூட்டி

கதவை நோக்கி நடந்தான்.


ஹென்றி ஜூலியோவின் கார்வரை

கூட நடந்து சென்று விட்டான்.


நிலா சுடர்ந்த பிரமாதமான இரவு அது


ஜூலியோ காரை உசுப்பி திருப்பிச் செல்லும்போது

ஹென்றி அவனுக்கு கையசைத்து விடையளித்தான்.


பின்னர் உள்ளே சென்று

அமர்ந்தான்.

ஜூலியோ தீண்டாத மதுவை எடுத்து

ஹென்றி குடித்தான்

பிறகு

அவளுக்கு அவன் போன் செய்தான்.


“அவன் இங்கேதான் இருந்தான். அவன் மிக மோசமாக உணர்கிறான்" 

  என்று ஹென்றி அவளிடம் சொன்னான்


“மன்னிக்க வேண்டும்" என்று சொன்னாள் அவள்

 “நான் தற்போது வேறு வேலையில் இருக்கிறேன்.”


அவள் போனை வைத்தாள்.


ஹென்றி தனது கோப்பையை நிறைத்தான்

வெளியே சில்வண்டுகளோ 

தங்கள் பாடலைப் பாடிக்கொண்டிருந்தன.

Comments