Skip to main content

வியட்நாமின் யானைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


யானைகளைச் சுடுவது, வெடிவைப்பது

அப்போது அவர்களுக்கு பழகியிருந்தது, அவர் சொன்னார்

எல்லா சத்தங்களுக்கும் மேலாக அவற்றின் சத்தங்களையும்

கேட்க முடியும்

ஆனால் மக்கள் மீது குண்டுபோடும்போது

உயரத்தில் பறப்பீர்கள்

நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள்

ஒரு சின்ன வெளிச்ச மின்னல் உயரத்திலிருந்து தெரியும்

அவ்வளவே

ஆனால் யானைகளிடத்தில்

நிகழ்வதைப் பார்க்க முடிவதோடு

அவற்றின் கதறலையும் கேட்பீர்கள்

நான் எனது சகாக்களிடம் 

கேளுங்க தம்பிகளா

நிறுத்துங்கள் என்று சொல்வேன்

ஆனால் அவர்கள் வெறுமனே சிரிப்பார்கள்

யானைகள் சிதறடிக்கப்படும்போது

வாயை அகலப்பிளந்து

விரைவாக இயங்கமுடியாத தமது தடிக்கால்களை உதறிக்கொண்டு

வயிறுகளில் பொத்தலிடப்பட்ட பெரும் துளைகளிலிருந்து

ரத்தம் வழிய

தும்பிக்கைகளைத் தூக்கி அலறும் (அவை தகர்க்கப்பட்டிருக்காவிட்டால்)

 

அதற்குப்பிறகு எங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை

நிறைவேற்றிவிட்டுத் திரும்பிவருவோம்

கவச வண்டிகள், குப்பைத் தொட்டிகள், பாலங்கள், மக்கள், யானைகள்

மற்றும் மிச்சமிருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டோம்.  

அவர் சற்றுக் கழித்துச் சொன்னார்,

யானைகள் குறித்து

சங்கடமாக உணர்ந்தேன் என்று.

Comments