அதிகாலை இரண்டுமணிக்கு
எனது சிறிய அறையில்
கவிதை எந்திரத்தை தற்போதைக்கு நிறுத்திய பின்னர்
சிகரெட்டுகளை வரிசையாகப் பற்றவைத்து
வானொலியில் பீத்தோவனைக் கேட்கிறேன்.
இன்னமும் ஒன்றோ இரண்டோ கவிதைகள்
எழுதுவதற்கு இருப்பது தெரிந்தும்
வினோதமும் சோம்பேறித்தனமும் கொண்ட
நிறைவுடன் பீத்தோவனைக் கேட்கிறேன்
இறந்து நூறாண்டுகளுக்கு மேலும்
ஆற்றலும் விளையாட்டும் குன்றாமல் இருக்கும்
அந்த சாகித்யகர்த்தாவின் இசையை
மீண்டுமொரு முறை கேட்டு ரசித்தபடி
இந்த நாளின் இறுதியில்
என்னை அட்டகாசமாய்
உணர்கிறேன்
அவன் உங்களைவிட
என்னைவிட
இளமையாகவும் மூர்க்கமாகவும் இருக்கிறான்.
நம்மை பொதுவாகச் சூழ்ந்திருக்கும் அசாதாரண தீங்குகளிலிருந்து
களைய நமக்கு உதவுவதாக
அரியதொரு அற்புதத்தோடும்
தெய்வீக உயிரினங்களுடன்
நூற்றாண்டுகள் தூவப்படுகின்றன
எனது இறந்தகாலத்தின் எல்லா அதிகாலை இரண்டு மணிகளையும்
நினைவுகூர்ந்தபடி
அடுத்ததும் கடைசியுமான
சிகரெட்டைப் பற்ற வைக்கிறேன்
மூடும் நேரத்தில்
மதுவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு
தெருக்களில் விடப்பட்டு
ஒவ்வொருவரும் வீட்டுக்குத் தனியாக
நடந்து செல்வது.
இது எவ்வளவோ மேல்:
நான் தற்போது வசிக்கும் இடத்தில் இருந்துகொண்டு
மறுஉத்திரவாதத்தைத் தரும்
பரிவை உணர்த்தும்
இந்த எதிர்பாராத
சிம்பனி ஆப் டிரையம்ப் இசையைக் கேட்பது:
புதிய ஒரு வாழ்வு.
Comments