Skip to main content

அம்பேத்கரின் கருத்துலகத்துக்கு வழிகாட்டி

 


இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்; சாதியை ஒழிக்க இன்றும் இந்தியாவில் போராடிவரும் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கான அடையாள ஆளுமை; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தளித்தவர்; இருபதாம் நூற்றாண்டு இந்தியா கண்ட பேரறிஞர் என்ற பல அடையாளங்களைக் கொண்ட அம்பேத்கர் எழுதிய நூல்களின் முன்னுரைகள்தான் வாசுகி பாஸ்கர் தொகுத்திருக்கும் இந்த நூல். அம்பேத்கரின் கருத்துலகம், அவர் அக்கறையும் புலமையும் கொண்டிருந்த துறைகள், பார்வைகள், விமர்சனங்கள் ஆகியற்றை உயிர்களாகக் கொண்ட பிரபஞ்சத்தைக் காண்பிக்கும் சிறு உலகங்களாக இந்தப் பத்து முன்னுரைகள் உள்ளன.

‘சூத்திரர்கள் யார்’ நூலின் முன்னுரையிலேயே இந்தியா என்னும் நவீன தேசத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் தனக்கு உருவகித்த விமர்சனபூர்வமான பாத்திரத்தைக் குறிப்பிட்டுவிடுகிறார். கற்றறிந்தவருக்கும் ஆய்வறிஞருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை அவர் சொல்கிறார். ‘கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தையவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல் ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்’ என்று இந்தியாவில், குறிப்பாக கற்றறிந்த பிராமணர்களின் மத்தியில் வால்டேர் உருவாகாமல் போனதற்கான சூழலைக் குறிப்பிடுகிறார்.  

சாதியைக் காக்கும் அறிவு, வர்க்கத்தைக் காக்கும் அறிவு, ஏற்றத்தாழ்வைக் கேள்விகேட்காத அறிவு, அநீதியைக் கண்டும் காணாமலும் இருக்கும் அறிவு, தனது நலனை, தனது தரப்பை மட்டுமே மையமாகக் கொண்ட அறிவும் அறிவாளிகளும் இன்றும் உலவும்  சூழ்நிலையில் அம்பேத்கர் ஆய்வறிஞர் என்று தான் உருவகித்த இலக்கணத்துக்குப் பொருத்தமானவராக, விமர்சனக் கூர்மையோடு தனியாக மிகத் தனிமையோடு தனிமையாக இயங்கியிருக்கிறார். அம்பேத்கர் இறந்து கால் நூற்றாண்டு ஆன பிறகு பெரும் முயற்சிகளுக்குப் பிறகே அவரது எழுத்துகளை முறையாகத் தொகுக்கும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டது என்பதும், இன்னமும் அவரது மொத்த எழுத்துகள், உரைகளைப் பதிப்பிக்கும் பணி பூர்த்தியடையவில்லை என்பதுமே அதற்குச் சான்று. 

தலித் அரசியல் இன்றைக்கும் சந்திக்கும் முக்கியமான விமர்சனங்களில் ஒன்றுக்கு அம்பேத்கர் அப்போதே முகம் கொடுத்திருக்கிறார். காந்தி மீதும் ஜின்னா மீதும் அம்பேத்கர் வெறுப்போடு செயல்படுவதாகச் சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு நேருக்கு நேராகத் தனது பதிலை அளிக்கிறார். தனது வெறுப்பு தனிப்பட்ட அம்சத்திலிருந்து பிறக்கவில்லை என்கிறார். ஒரு தீர்வை எதிர்நோக்கி அவர்களைத் தான் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டு தன் வெறுப்பு எப்படிப்பட்டதென்றும் நம் முன்னரே பரிசீலிக்கிறார்.

"தங்கள் அன்பிலும் வெறுப்பிலும் தீவிரமாக இல்லாத யாருமே தங்கள் உறுதியான கொள்கைகளுக்கும் போராடிவரும் உரிமைகளுக்கும் ஏற்ப எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் தங்கள் காலத்துக்குள் கொண்டுவர இயலாது. அநீதி, சர்வாதிகாரம், செருக்கு, பொய் பித்தலாட்டம் இவை அனைத்தையும் நான் வெறுக்கிறேன். என் வெறுப்பு என்பது மேற்கூறியவற்றைக் கொண்டிருப்பவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதுதான். என் வெறுப்பு என்பதுதான் என்னைச் செலுத்தும் விசை என்பதை என் விமர்சகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் நம்பும் சமூக மாற்றத்துக்கு அடிப்படையான அன்பின் நேரெதிர்ப் பரிமாணம் தான் இந்த வெறுப்பு என்பதில் நான் எத்தகைய அவமானமும் கொள்வதற்கில்லை."

இந்தியாவைப் பொருத்தவரை பல நூற்றாண்டுகளாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு, கொடூரங்களுக்கு எதிராக தலித் மக்கள் செய்யும் ஒவ்வொரு விமர்சனமும் செயல்பாடும் அவர்களது அரசியலும், பிராமணர்கள் மீதும் தலித் அல்லாத பிற சமூகங்கள் மீதும் வெறுப்பின் சாயலே இல்லாமல் இருக்கவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்திய வரலாற்றில் தலித் மக்களுக்கும் தலித் அல்லாத மக்களுக்கும் இடையில் இந்து சனாதனம் உருவாக்கிய தீர்க்க முடியாத முரண்களாகவே காந்தியும் அம்பேத்கரும் தெரிகிறார்கள். 

சமநீதியை நோக்கி நகரமுடியாமல், இன்றும் பெரும்பாலான தலித் மக்கள் அடிப்படை வசதிகள், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வாழ்கிறார்கள். அவர்களது ஆற்றல்களும் அனைத்துவிதமான வெளிப்பாடுகளும் முடக்கப்படவும் திரிபுபடவும் செய்யும் நடவடிக்கைகளை எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தின் வழியாக இந்துத்வ அரசு தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் நிலையில், அந்த வெறுப்பின் நஞ்சு இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியலில் தொடர்ந்து இருக்கவே செய்யும்; அதுவே எதார்த்தம் என்பதை அம்பேத்கர் உணர வைக்கிறார்.  

மக்களை வர்ணங்களாக, சாதிகளாகப் பிரித்து இந்தியச் சமூகத்தை ஆக்கியதோடு, அதில் ஏற்றத்தாழ்வுகளையும் கொடூரங்களையும் தீண்டாமையையும் தாழ்ச்சியையும் பாராட்டிய இந்து மதம், இந்தியச் சமூக உருவாக்கம், வரலாறு ஆகியவற்றை ஆய்ந்து விமர்சிப்பதுதான் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள பெரும்பாலான முன்னுரைகளின் உள்ளடக்கமாகும். 

மனிதர்கள் சக மனிதர்களை அடக்கவும் ஒடுக்கவும் உருவாக்கிய சமூகவியல் 'உண்மை', உயிரியல் உண்மையாகப் புரட்டப்பட்ட வரலாற்றுரீதியான மோசடியை ஒரு வழக்கறிஞராகவும் நிபுணத்துவம் கொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணராகவும் கவிஞராகவும் வாதாடி, பகுத்தாய்ந்து, அழகான உவமைகளால் விளக்குகிறார் அம்பேத்கர்.  

கதே, வால்டேர், டாக்டர் ஜான்சன், பவபூதி, ஆர்னால்ட் டாயின்பீ, பழமொழிகள் எனத் தனது வாதங்களுக்கு எடுத்தாளும் அறிஞர்களும் கூற்றுகளும் அம்பேத்கரின் எழுத்தை வாசிப்பவனுக்கு சமத்காரம் மற்றும் சாகச உணர்வை ஏற்படுத்துபவை.

‘தீண்டப்படாதோர் யார்?’ நூலுக்கான முன்னுரையில் தீண்டாமை தோன்றிய சூழலை ஆராய்வதற்காகத் தான் மேற்கொள்ளும் முறைமையில் கற்பனையும் அனுமானமும் முக்கியப் பங்காற்றாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார். தனது நூலை வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிடக் கலைப் படைப்பு என்று கூறுவதுதான் பொருத்தம் என்ற வாதத்தை வைக்கிறார். ‘இந்தப் பணி சிதறிக்கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக் கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது’ என்று தனது பணியை உருவகிக்கிறார். அத்துடன் இந்த முன்னுரையில், யூதர்களுக்கு நடந்த கொடூரங்களும், கறுப்பினத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் நிறவெறியும் உலகளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியாவில் நிலவும் தீண்டாமையும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் கொடுமைகளும் ஐரோப்பிய அறிஞர்களின் கண்களில் படவில்லை என்பதையும் குறிப்பிடுகிறார்.  

அவர் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வெவ்வேறு துறைகள், உள்ளடக்கங்கள், பிரச்சினைகள் தொடர்பில் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதை முன்னுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. ஒரு விஷயம் குறித்துத் தற்போது எழுதுதவற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருந்ததையும் அவற்றின் அழுத்தத்தையும் களைப்போடு குறிப்பிடுகிறார்.  

 ‘சாதியை அழித்தொழித்தல்’ புத்தகத்துக்கான முன்னுரை அனைவரும் படிக்க வேண்டியது. ஜாத் - பட் - தோடக் மண்டல் என்னும் இந்து சீர்திருத்த அமைப்பின் வருடாந்திரக் கருத்தரங்கு ஒன்றுக்குத் தலைமேற்க அம்பேத்கர் இசைவு தெரிவித்து, தலைமையுரை ஆற்றுவதற்காக எழுதிய உரைதான் அந்த நூல். ஆனால், அந்த உரையின் உள்ளடக்கங்களுடன் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு முரண்பாடு ஏற்பட்டதால் ஆற்றப்படாமல்போன உரை அது. இத்தனைக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்து சமயத்துக்குள் இருக்கும் சாதிய அமைப்புக்கு எதிராகவும் இந்து மதத்தில் சாதியின் பெயரால் நிலவும் தீண்டாமையையும் மானசீகமாக கண்டிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் தான் எழுதிய உரையில் இந்து சமயத்தைவிட்டு பௌத்த சமயத்துக்கு மாறப்போவதைத் தெரியப்படுத்துவதை அந்த அமைப்பினர் விரும்பவில்லை. அதனாலேயே அந்த நிகழ்ச்சியும் உரையும் ரத்து செய்யப்படுகிறது. அந்தக் கருத்தரங்கில் அம்பேத்கர் ஆற்றாமல் போன அந்த உரைதான் ‘சாதியை அழித்தொழித்தல்’ நூல். அதற்கு எழுதப்பட்ட முன்னுரையைப் படிக்கும்போது, அம்பேத்கர் தனது கருத்துகள், செயல்பாடுகளுக்காகத் தனது வாழ்நாளில் சந்தித்த எதிர்ப்புகளையும் தணிக்கையையும் நஷ்டங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.  

 எத்தனையோ ஜனநாயக உரிமைகளும், சமூக நீதியும் வென்றெடுக்கப்பட்டதாக நாம் நம்பிய இன்றைய காலகட்டத்தில் திரும்பவும் சாதிய, மதவாத, இனவாதப் போக்குகளும் முரண்பாடுகளும் மோதல்களும் திரும்ப உருவெடுத்திருக்கும் நிலையில் இந்தியச் சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சிக்குத் துவக்கமாகத் திகழும் நூல் இது.

Comments