உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...