நான் சிறுவனாக இருந்தபோது
எறும்பை சும்மா வேடிக்கை பார்க்கவில்லை
ஈயை வேட்டையாடி நசுக்கி
இரையாக இட்டு
எறும்புகளின் அன்றாடத்தை அவதானிப்பது சுவாரசியமாய்
தெரிந்தது.
எனது எல்கேஜி சகா
சண்முகப் பிரியா
ரயில் பூச்சிகளைச் சுருட்டி
கையில் எடுத்து வாயில் போட்டு
மென்று விழுங்குவாள்
இப்போதும் நினைக்கும்போது
எனக்கு நெறுநெறுவென்றிருக்கிறது
பார்க்கும்போதும் கடக்கும்போதும்
பசுமையாய் படர்ந்து நிற்கும் செடியின்
கிளையை அதன் மென்பூக்களை
பிய்க்கும் பழக்கம்
சிறுமியிலிருந்து இந்த நாற்பதிலும் தொடர்வதாகச்
சொல்கிறாள்
அலுவலக சகா பார்வதி.
தவறே செய்யாதபோதிலும்
வம்பாய் அடித்து அழவைக்கும்போது
அப்பா உயிர்ப்பாக இருந்தாரென்று
குட்டிச் சிறுவனாக இருந்த எனக்குத் தெரியும்
நானும் அம்மாவும் அழுதுகொண்டிருந்தபோது
அப்பா
நாற்காலியில் அமர்ந்து நகங்களை
ரத்தம்வரக் கடித்தபடி
எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்
வீடு அப்போது உஷ்ணமாக இருந்தது
அன்றைக்கு இரவு
என் அம்மாவுக்கு புதிய வெள்ளிக்கொலுசை
வாங்கி வந்தார் அப்பா.
சவைத்து
நசித்து
பிய்த்து
ஒடித்து
பின்னும்.
Comments