அந்தப் பெண்கள்
அவர்களின் முத்தங்கள்
அவர்கள் நேசிக்கும் விதவிதமான வழிகள்
அத்துடன் அவர்கள் பேச்சும்
அவர்களது தேவையும்
அவர்களின் காதுமடல்கள்
அவர்கள் எல்லோருடைய
காதுமடல்கள் மற்றும் தொண்டைகள்
மற்றும் ஷூக்கள் மற்றும் வாகனங்கள்
மற்றும்
முன்னாள் கணவர்கள்.
பெரும்பாலும்
அவர்கள் மிகவும் இதமானவர்கள்
வெண்ணெய் இடப்பட்ட ரொட்டியில்
வெண்ணை உள்ளே உருகுவது போல.
கண்ணில் ஒரு பாவம் இருக்கிறது
துச்சமாகக் கருதப்பட்டிருக்கிறார்கள்
முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி உதவவேண்டுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியாது.
நான் ஓரளவு
பரவாயில்லாத சமையல்காரன்
பேசுவதை செவிகொடுத்துக் கேட்பவன்
ஆனால் நான் நடனமாட
பயிற்சி எடுக்கவேயில்லை
நான் பெரிய விஷயங்களில்
தீவிரமாக முன்னர் ஈடுபட்டிருந்தேன்.
ஆனால் அவர்களின் விதவிதமான
படுக்கைகளை நான் அனுபவித்திருக்கிறேன்
சிகரெட்களைப் புகைத்தபடி
உட்கூரைமுகட்டை வெறித்தபடி.
நான் தீங்கானவனும் அல்ல
அநியாயமானவனும் அல்ல
வெறும் மாணவன்.
வெறும்பாதத்துடன் அறையில் அவர்கள் நடக்கும்போது
இருட்டில் அவர்களது நாணமுடைய பிருஷ்டங்களை
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது
அவர்களுக்கு என் மீதிருக்கும் நம்பிக்கை தெரியும்
அவர்களுக்கு என்னைப் பிடிக்குமென்றும்.
அவர்களில் சிலர் என்னை காதலிக்கக் கூடச் செய்கிறார்கள்
என்பதை அறிவேன்
ஆனால் நான் சிலரை மட்டுமே காதலித்தேன்.
சிலர் எனக்கு ஆரஞ்சுப் பழங்கள், விட்டமின் மாத்திரைகளைக் கொடுத்தனர்
பிறர் குழந்தைப் பருவம், தந்தையர், நிலப்பிரதேசங்களைப் பற்றி
முணுமுணுத்தனர்
சிலர் பெருமளவுக்கு வேடிக்கையானவர்கள்
ஆனால் யாரும் அர்த்தம் இல்லாதவர்கள் அல்ல
சிலர் திளைத்துப் புணர்ந்தனர்
மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது.
செக்ஸில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் பிற அம்சங்களில்
சிறப்பாக இருந்தனர் என்று சொல்லமுடியாது.
எனதைப் போன்றே அவர்கள் ஒவ்வொருவருக்கும்
வரையறைகள் இருந்தன
நாங்கள் ஒருவருக்கொருவர் சீக்கிரமே தெரிந்துகொண்டோம்.
எல்லாப் பெண்களும்
எல்லாப் பெண்களும்
அவர்களின் படுக்கையறைகள்
படுக்கைவிரிப்புகள்
புகைப்படங்கள்
திரைச்சீலைகள்
தேவாலயம் போன்ற இடம் அது
சில சமயங்களில் மட்டும்
சிரிப்பு இருக்கும்.
அந்தக் காதுகள்
அந்த கைகள்
அந்த முழங்கைகள்
அந்தக் கண்கள்
அந்தப் பார்வையை
அந்தப் பிரியத்தை
என்னிடம் கொண்ட
அந்த விருப்பத்தை
என்னிடம் கொண்ட
அந்த விருப்பத்தை.
Comments