Skip to main content

நரகம் என்பது தனிமையான இடம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


அவருக்கு 65 வயது

அவரது மனைவிக்கு 66, அல்சீமர் நோய்

அவருக்கு வாயில் புற்றுநோய் இருந்தது

அறுவை சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள்

அவர் தாடையில் உள்ள எலும்புகளைச் சிதைத்திருந்தன

அதனால் அவற்றை இறுக்கிக்கட்ட வேண்டியிருந்தது.


ரப்பர் டயபர்களை

 தினசரி

குழந்தையைப் போல

மனைவிக்கு அணிவிப்பார்.


அவருடைய உடல்நிலை காரணமாக

கார் ஓட்ட முடியாததால்

மருத்துவ மையத்துக்கு டாக்சி அமர்த்தி

செல்ல வேண்டியிருந்தது,

பேசுவதற்குச் சிரமம் என்பதால்

திசைகளை எழுதிவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.


அவர் சமீபத்திய பரிசோதனைக்குச் சென்றிருந்தபோது

இன்னொரு அறுவை சிகிச்சை இருக்கும் என்று

அவர்கள் தகவல் தெரிவித்தனர்

இடது கன்னத்தில் கொஞ்சம்

நாக்கில் கொஞ்சம்.


அவர் வீட்டுக்குத் திரும்பியவுடன்

தனது மனைவியின் டயபர்களை

மாற்றினார்

தொலைக்காட்சியை ஓடவிட்டு

ஆயத்த உணவுகளை அடுப்பில் வைத்து

மாலைச் செய்திகளைப் பார்த்தார்

பின்னர் படுக்கையறைக்குச் சென்றார்

துப்பாக்கியை எடுத்துவந்தார்

மனைவியின் நெற்றியில் வைத்துச் சுட்டார்.


அவள் இடதுபக்கம் சரிந்தாள்

அவர் சோபாவில் அமர்ந்தார்

வாய்க்குள் துப்பாக்கியை விட்டு 

விசையை இழுத்தார்.


வெடிச்சத்தம் அண்டைவீட்டாரை

உசுப்பவில்லை.


எரிந்த ஆயத்த உணவுகள்

தாமதமாக

அந்த வேலையைச் செய்தன.


யாரோ வந்தனர், கதவைத் தள்ளித் திறந்து

அதைப் பார்த்தனர்.


விரைவில்

போலீஸ் வந்து

அவர்களது நியமங்களுக்குள் போய்

சில பொருட்களைக் கண்டெடுத்தனர்

முடிக்கப்பட்ட வங்கிக் கணக்கு 

மற்றும்

ஒரு காசோலைப் புத்தகம்

1.14 டாலர் மீதத்துடன்.


தற்கொலை, அவர்கள் 

கணக்கைக் கழித்தனர்.  


மூன்று வாரங்களில் 

அங்கே இரண்டு புதியவர்கள்

குடியேறினர்

கணிப்பொறிப் பொறியாளனான

அவன் பெயர் ரோஸ்

மற்றும் அவனது மனைவி

அனாதனா

அவள் பாலே படித்தவள்.


மேல் வர்க்கத்தை நோக்கிச் செல்லும்

இன்னுமொரு ஜோடியைப் போல

அவர்கள் தெரிந்தனர். 

Comments